இனி நடிக்கப் போவதில்லை! சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

1

‘அட… உங்க தலைப்புல தீய வைக்க’ என்று அதிர்ச்சி வருகிறதல்லவா? அந்த அதிர்ச்சி இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் சொன்னது சினிமாவில் நடிப்பது பற்றியல்ல. விளம்பரங்களில் நடிப்பது பற்றி.

தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலர், எக்ஸ்ட்ரா துட்டு பார்த்து வருவதே விளம்பர படங்களில்தான். அதுவும் தமிழ் ஹீரோ யாருமே வாங்காத பெருத்த சம்பளத்தை போத்தீஸ் விளம்பரத்திற்காக வாங்கினார் கமல். நான்கு நாட்கள் கால்ஷீட். பத்து கோடி சம்பளம்! அஜீத் ‘ம்….’ சொல்வாரா என்று காத்துக்கிடக்கின்ற கார்ப்பரேட் விளம்பரக் கம்பெனிகள் ஏராளம். எப்பவோ விஜய் நடித்த கோக் விளம்பரத்தை இப்பவும் இழுத்து வச்சு செய்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

இந்த லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு இடம் இருக்கிறது. ஆனால் குழியில் விழுவதற்கு முன்பே சுதாரித்துக் கொண்டிருக்கிறார் அவர். நேற்று சென்னையில் மிக மிக பிரமாண்டமாக நடந்த ‘வேலைக்காரன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் அறிவித்த விஷயம் நிஜமாகவே பாராட்டுக்குரியதுதான்.

நான் இதுவரைக்கும் ஒரேயொரு விளம்பர படத்தில்தான் நடிச்சுருக்கேன். இனிமேல் எந்த விளம்பரப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு காரணம் வேலைக்காரன் படத்தின் கதைதான். இது குறித்து நான் அதிகம் விளக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். விளக்கினால் கதையை சொன்ன மாதிரி ஆகிவிடும். படம் வந்த பின்பு நான் ஏன் இப்படியொரு முடிவெடுத்தேன் என்பது உங்களுக்கு தெரியும் என்றார் சிவா.

திரையுலகத்தின் முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த முடிவை, பாரபட்சமில்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

1 Comment
  1. பிசாசு குட்டி says

    ஊர்ப்பக்கம்ஒ ரு பழமொழி இருக்கு.. டிண்கு காஞ்சா குதிரை கூட வைக்கோல் திங்குமாம்..
    ஒருநாள் காயும்.. அப்போ பாப்போம்

Leave A Reply

Your email address will not be published.