இமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்டு!

0

ஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் தயாரிப்பாளருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன…? துண்டை உதறி தோளில் போட்டுட்டு போயிட்டாரு. கடன் காரனுங்களோட மாரடிக்கிறது நான்தானே” என்று இன்னமும் ஆவியாய் அசரீரி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள் அநேக தயாரிப்பாளர்கள். அப்படியொரு இயக்குனர் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் அஜய் ஞானமுத்து. இத்தனைக்கும் இவர் இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’, குதிரைப் பாய்ச்சல் வெற்றி.

சொன்ன பட்ஜெட் ஒன்று. முடிந்த பட்ஜெட் இன்னொன்று. அதிகப்படியான நாட்கள், கி.மீட்டர் நீளத்திற்கு புட்டேஜ் என்று அஜய் ஞானமுத்துவிடம் சிக்கி அநியாயத்துக்கு துவண்டு போனார் கேமியோ பிலிம்ஸ் சிஜே.ஜெயக்குமார். எப்படியோ, அறிவிக்கப்பட்ட நாளில் போராடி, முட்டி பெயர்ந்து ரிலீஸ் ஆனது இமைக்கா நொடிகள். பல ஊர்களில் இரவுக் காட்சிதான் ஓப்பன் ஆனது. நல்லவேளை… நயன்தாராவும் அனுராக் காஷ்யப்பும் காப்பாற்றினார்கள் படத்தை.

படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் ஆன பின்பும் 350 தியேட்டர்களுக்கு குறையாமல் ஒடிக் கொண்டிருக்கிறது படம். மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய தயாரிப்பாளர் சக்சஸ் மீட் வைத்து சந்தோஷப்பட்டார். சென்னையிலேயே டாப் கிளாஸ் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சக்சஸ் மீட்டை நடத்தினார்கள். (இந்த செலவே பல லட்சத்தை இழுத்து விட்ருக்குமே சார்?)

சரி… தலைப்புக்கு வருவோம். நிகழ்ச்சியில் வழக்கம்போல நயன்தாரா ஆப்சென்ட். வந்திருந்த மற்றவர்கள் ‘இமைக்கா நொடிகள்’ அனுபவத்தை பகிர்ந்து கொள்ள, சிறப்பு அழைப்பாளராக வந்தவரும் படம் வெளிவர கடைசி நேரத்தில் கை கொடுத்தவருமான அபிராமி ராமநாதன் இயக்குனர் அஜய் ஞானமுத்தை வாங்கு வாங்கென வாங்கினார். படத்தை இரண்டு வருஷம் இழுக்காமல் ஆறு மாதத்தில் முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதே மாதிரி ரிலீஸ் நேரத்தில் தயாரிப்பாளருக்கு எந்த சிக்கலும் வராத அளவுக்கு எடுத்திருக்கணும் என்றார் இயக்குனரிடம்.

‘தோளு என்னுது. துண்டு தயாரிப்பாளரோடது. தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்கிற எண்ணம் கொண்ட எல்லா அலட்சிய இயக்குனர்களும் அபிராமி ராமநாதன் சொல்வதை கேட்டால், சுபிட்சம் சினிமாவுக்கு! கேட்பீங்களா அண்ணனுங்களா?

Leave A Reply

Your email address will not be published.