இணையதளம் / விமர்சனம்

0

பல்லு விளக்குறதுன்னா கூட பாஸ்வேர்ட் தேவைப்படுகிற காலத்தில், ‘இணையதளம்’ என்றொரு படம் வந்திருப்பது சாலப் பொருத்தம்தான்! ஆனால் ஆழ உழுவதா, அகல உழுவதா என்கிற குழப்பத்தில் எழுதப்பட்ட திரைக்கதையால், வைரஸ் புகுந்த ‘பென் டிரைவ்’ போல திணறுகிறது படம்.

சைபர் கிரைம் அதிகாரிகளான கணேஷ்வெங்கட்ராம், ஸ்வேதாமேனன், இருவருக்கும் பெரும் பிரச்சனை ஒன்று தலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் பிரபல வெப்சைட் ஒன்றில் நேரடி ஒளிபரப்பாக செய்யப்படும் கொலைகள். வேடிக்கை என்னவென்றால், பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏற ஏற, சிக்கிக் கொண்டவர்கள் விரைவில் கொல்லப்படுவது போல புரோகிராம் பண்ணப்பட்டிருப்பதுதான். இது எங்கிருந்து ஒளிபரப்பாகிறது? கொலையாளி யார்? அவனிடம் சிக்கிய அப்பாவிகள் யார்? இவற்றையெல்லாம் கண்டுபிடிக்க கிளம்பும் சைபர் க்ரைம் சபாஷ் வாங்குகிறதா, இல்லை சறுக்கி விழுகிறதா? இதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

ஈரத்துணியை போட்டு கோழியை அமுக்குவது போல, வித்தியாசமான கோணத்தில் ஒரு கதையை அமுக்கிவிட்டாலும், அதை சொல்லி முடிப்பதற்குள் கோழிமுட்டை,தொண்டை வழியாக வந்துவிடுகிறளவுக்கு அவஸ்தை படுகிறார்கள். அறிமுக இயக்குனர்கள் என்பதால் ஷங்கர் சுரேஷ் இரட்டையர்களை விட்டுப் பிடிப்போம்.

ஹீரோ கணேஷ் வெங்கட்ராம் இருக்கிற உயரத்திற்கும் மிடுக்குக்கும் இன்னும் நல்ல நல்ல பைட்டுகளாக கொடுத்து படத்தை பைட்டாலேயே கூட நிரப்பியிருக்கலாம். ஆனால் அவரோ கையில் கிடைக்கும் குற்றவாளிகளையெல்லாம் விட்டுவிட்டு பின்னாலேயே ஓடுகிறார் படம் முழுக்க! படத்தில் இவரது காட்சிகளை எடுத்த எடுப்பிலேயே காட்டிவிட்டு, அப்புறம் தனியாக ஒரு பில்டப் கொடுத்து இன்னொரு முறையும் அறிமுகப்படுத்துகிறார்கள். எடிட்டிங் மிஸ்டேக்?

ஸ்வேதா மேனன் இன்னொரு அதிகாரி. செம ஸ்மார்ட். அதே நேரத்தில் கம்பீரத்திற்கும் குறைச்சல் இல்லை.

கொலையாளியிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவியாக டெல்லி கணேஷ். இவரை விட பொருத்தமாக யார் இருக்கிறார்கள்? பிரமாதப்படுத்தியிருக்கிறார். தேடப் போன போலீசே கொலையாளியிடம் சிக்கிக் கொள்கிற கேரக்டரில் ஈரோடு மகேஷ். படு சிரத்தையெடுத்து நடிக்கிறார். ஒரு சீனில் இவர் வீணை வாசிக்க… தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது. இப்படி ‘நான் சிங்க்’ எடுத்து நடித்தாலும், மகேஷின் முடிவு பரிதாபமோ பரிதாபம்!

படத்தின் வில்லியே நம்ம சுகன்யாதான்! கிடைத்த வாய்ப்பை விட்டுவிடவே கூடாது என்று கோபமும் ஆங்காரமுமாக நடித்திருக்கிறார். ஆமாம்… கொலையை லைவ் பண்ணும் கேமிரா, கார் சேசிங்கின் போது எங்கிருந்து வந்தது? அதை எப்படி இணையத்தில் பதிவேற்றினார்கள்? இப்படி நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள்.

படத்திற்கு இசை ‘பிசாசு’ பட மியூசிக் டைரக்டர் அரோல் கரோலி. (சரக்கு தீர்ந்து போச்சா தம்பி?) கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு கார் சேசிங் காட்சியில் மிரட்டுகிறது.

சோஷியல் மீடியாவுக்குள் அதிகம் உலா வருவதால் ஏற்படும் பிரச்சனைகளையும், அதனுள் நொந்து போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மேலும் நோகடிக்காதீர்கள் என்பதையும் நெற்றிப் பொட்டில் அடித்ததை போல சொல்ல நினைத்ததற்காகவே ‘இணையதளம்’ படத்தை ஆதரிக்கலாம்!

கரெக்டான கதை, ஆனால் ‘கரப்ட்’ ஆன திரைக்கதையுடன்…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.