இரும்புத்திரை விமர்சனம்

0

ஆன்ட்டி இன்டியன்களையெல்லாம் ‘ஆஹா’ போட வைக்க வேண்டும் என்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கனவில் ஏகப்பட்ட பொத்தல் போடுகிறார் இயக்குனர் மித்ரன். ஒவ்வொன்றிலும் ஏமாந்தவர்களின் இளிச்சவாய் புன்னகை, வெளிச்சமாய் சில கேள்விகள் கேட்கிறது. பதில் சொல்வதை விட்டுவிட்டு தியேட்டரை தாக்குகிறார்கள் சிலர். (அப்படின்னா படத்தை இவிங்களே ஓட வச்சுருவாய்ங்க)

மிலிட்டரி மேஜர் விஷாலுக்கு, எதற்கெடுத்தாலும் மூக்கு மேல் கோபம். “உங்களை கோர்ட் மார்ஷல் பண்றோம். ஒரு மனோதத்துவ நிபுணர்ட்ட நார்மல் சர்டிபிகேட் வாங்கிட்டு வரணும்” என்று அனுப்பி வைக்கிறது மிலிட்டரி ரூல். அட… அந்த டாக்டரே சமந்தாதான். பல வருஷமாக ஊர் பக்கமே போகாத விஷாலை வலுக்கட்டாயமாக ஊருக்கு அனுப்பி வைக்கிறார். போனால்? அதுவரை அவர் காணாத பாச உலகம் ஒன்று புலப்படுகிறது அவருக்கு. அப்புறமென்ன? தங்கை திருமணத்திற்கு பேங்க் லோன் போடுகிறார். பணம் அக்கவுண்டுக்கு வந்த அடுத்த நிமிஷம் கோ கயா!

நம்ம பணம் எங்கு போச்சு என்று தேடக்கிளம்பும் விஷாலுக்கு, டிஜிட்டல் இந்தியாவின் பல் இளிப்பு புரியவர, அந்த ஹைடெக் களவாணியை நெருங்குகிறார். அசுர பலம் கொண்ட அவனை அவர் வீழ்த்தியது எப்படி? க்ளைமாக்ஸ்.

செய்திச்சேனல்களில் எப்பவும் டென்ஷனாகவே பார்த்த விஷாலை, படத்தில் ஆங்காங்கே கூலாகவும் பார்க்க முடிகிறது. (அட உங்களுக்கு சிரிக்கவும் தெரியுமா சார்?) எப்படியாவது வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும். அதுவும் ஏதாவது ஃபாரின் பெண்ணை கட்டிக் கொண்டு என்கிற அவரது லட்சியம் ஓ.கே. அதற்காக லோ லோ என்று அலைவதெல்லாம் டூ மச் அண்ணாத்தே. இவருக்கும் அர்ஜுனுக்குமான வார் ஸ்டார்ட் ஆகும்போது, தியேட்டரில் ஏசி ஓட்டத்தையும் தாண்டி வேர்த்துக் கொட்டுகிறது. என்னாவொரு வேக வேக காட்சிகள்!

சும்மா விரலை நீட்டினாலே மிரள விடுகிறார் அர்ஜுன். சட்டுபுட்டென்று பட்டன்களை தட்டி, “உன் பேன்ட்ல ஜிப்பை ஏண்டா போடல?” ரேஞ்சுக்கு புலனாய்வு செய்வதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் என்றாலும் விழுந்து விழுந்து ரசிக்க முடிகிறது. இதையெல்லாம் நம்புறதா, வேணமா? என்கிற குழப்பம் ஒவ்வொரு ரசிகனுக்கும் வருவதை தவிர்க்கவே முடியாது.

சமந்தா க்யூட். இப்படி தெருவுக்கு நாலு டாக்டர் இருந்தால், ஜுரம் வயிற்று வலி என்றால் கூட ‘மனோதத்துவம் என்ன சொல்லுது?’ என்று வாலின்ட்டரி சிட்டிங் கொடுப்பான் பேஷன்ட்! (ஏம்மா… உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு என்பதெல்லாம் கனவா?)

படத்தின் ஹீரோ விஷால் என்று நாம் நினைத்திருக்க, அது என் புத்தியில் உதித்த டயலாக்குகள் என்று அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர் மித்திரன். நாம ஜெராக்ஸ் கடையில் வேணாம்னு கசக்கிப் போடுறது குப்பையில்ல. டேட்டா… என்று புத்திக்கு ஷாக் கொடுக்கும்போது, பகீர் ஆகிறது மனசு. கேஷ்லெஸ் இந்தியா, கேர்லெஸ் பீப்பிள் என்று ஒற்றை வரியில் உலுக்கி விடுகிறார் மனுஷன். எவ்வளவு உழைப்பு. எவ்வளவு கலெக்ஷன். தமிழ்சினிமாவுக்கு மேலும் ஒரு மக்கள் இயக்குனர். வாங்கண்ணே வாங்க!

யுவனின் இசையில் லேசாக மனசை தடவும் டூயட். லைக் பட்டன் பிரஸ்சிங்!

ஒளிப்பதிவு, பைட் என்று அவரவர் வேலையில் ஆயிரம் மெனக்கெடல்கள்.

விஷால் ஹிட் கொடுத்து எத்தனை வருஷமாச்சு? என்பவர்களின் வாயையெல்லாம் தனித்தனியாக அடைத்திருக்கிறார் மித்ரன்! அண்ணாச்சிக்கு ஒரு டிஜிட்டல் பொக்கேவை நீட்டுங்க விஷால்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.