இருமுகன்- விமர்சனம்

0

காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா? சரியா, தப்பா? என்கிற விவாதங்கள் படம் முடிந்த பின்பு தியேட்டர் வாசலிலேயே சுட சுட நடப்பதுதான் இப்படத்தின் ப்ளஸ்சும் மைனஸ்சும்!

இந்திய தூதரகத்திற்கு வரும் ஒரு பெரியவருக்கு மூச்சிரைப்பு. வாசலில் யாரோ கொடுக்கும் ஒரு ஆஸ்துமா இன்ஹேலரை அவர் ஒரே இழுப்பு இழுக்க, சற்று நேரத்தில் ஆயிரம் யானை பலம் வந்துவிடுகிறது கிழவருக்கு. அப்புறமென்ன? இந்திய தூதரகம், யானை புகுந்த எலிமென்ட்ரி ஸ்கூல் ஆகிறது. ஒரே குய்யோ, முய்யோ. பலத்த சேதாரத்திற்கு பின், உஷாராகும் காவல்துறை, இந்த இன்ஹேலர் புதிரின் பின்னணி யார் என்று ஆராய, அவன்தான் ‘லவ்’ என்பது தெரிகிறது.

‘‘லவ்வை நேருக்கு நேரா பார்த்தது ரெண்டே பேர்தான். ஒருவர் நம்ம பழைய ரா அதிகாரி அகிலன். இன்னொருவர் அவரோட காதல் மனைவி மீரா. முதலில் அகிலனை வரவழைப்போம்” என்கிற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் அகிலன்தான் சஸ்பென்ஷனில் இருப்பவராச்சே? எப்படியோ சட்டத்தின் சட்டையை ‘லூஸ்’ பண்ணி, அகிலன் என்ற பெல்ட்டை ‘இன்’ பண்ணுகிறது அதிகாரிகள் குழு. (அகிலன் என்கிற ஹீரோவும், லவ் என்கிற வில்லனும்தான் இரு வேட விக்ரம்கள் என்பதை நாம் சொல்லிதான் தெரியணுமாக்கும்?)

நீண்ட தாடியும், நிர்கதியான கண்களுமாக என்ட்ரி ஆகிறார் விக்ரம். தாம் தேடிப்போக வேண்டிய லவ்தான் தன் காதல் மனைவியை கொன்றவன் என்பதால், மிச்சம் வைக்காமல் வெட்டி ஒழிக்க கிளம்புகிறார் அவர். போன இடத்தில் நடக்கும் சஸ்பென்ஸ்களும், சதை பிய்தல்களும்தான் மீதி!

படத்தில் இரண்டே விக்ரம்தான் என்றாலும், விதவிதமான கெட்டப்புகளில் அவரை பார்க்க முடிகிறதல்லவா? இரண்டு பேர்தானா, அதுக்கும் மேலயா? என்ற குழப்பமே வந்துவிடுகிறது. அதிலும் சற்றே நீண்ட தாடியும், ஜிம் பாடியுமாக வரும் அந்த விக்ரம் கவனத்தை ஈர்க்கிறார். அவரது அறிமுகக் காட்சி, செம! மற்ற மற்ற விக்ரம்களுக்கு மீசை மழிக்கப்பட்டிருப்பதால், வயது அப்பட்டமாக வெளியே எட்டிப் பார்த்து…. ‘பெரியப்பாவாயிட்டாரே’ என்று கதற விடுகிறது. (என்னது… மாமனார் ஆகிட்டாரா?) குறிப்பாக லவ்வாக வரும் விக்ரமுக்கு அந்த கெட்டப் சற்றும் பொருந்தவில்லை. திருநங்கை என்று கூறிவிட்டதால் அவரது லட்சணம் குறித்து கவலைப்பட தேவையும் இல்லை.

திருநங்கை விக்ரமின் நெட்வொர்க், டீம், க்ரைம் ரெக்கார்டு இவற்றுடன் அவரது விஞ்ஞான மூளை எல்லாமே, சின்னப்பசங்களை கவரக்கூடும். ஒரு அம்புலி மாமா கதையை சயின்ஸ் வாத்தியார் எழுதியதை போல, அத்தனை ட்விஸ்டுகள் அதில்! ஒரு காட்சியில் இன்ஹேலரை இழுத்துக் கொள்ளும் விக்ரம், லவ் கோஷ்டி ஆட்களை நையப்புடைக்க, பதிலுக்கு அவர்களும் இன்ஹேலரை சுவாசித்துவிட்டு விக்ரமை புடைக்க வேண்டியதுதானேய்யா… என்று தியேட்டரில் கூச்சல்! இப்படி சில ஓட்டைகளை எளிதாக அடைத்திருக்கலாமே டைரக்டர்?

நயன்தாரா ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார். இன்டர்வெல் பிளாக்கில் அவர் மீண்டும் உயிரோடு வருவது போலவும், அவர்தான் வில்லி போலவும் ட்விட்ஸ்ட் கொடுக்கிறார்கள். அதற்கப்புறம்… எல்லாமே பழசு! ஒரு காட்சியில் அந்த ‘இன்ஹேலரை’ சுவாசித்துவிட்டு, பைட்டுக்கு தயாராகிறார் அவர். ஆனால் பைட்தான் மிஸ்சிங்? (என்ன பாலிடிக்ஸ்சோ, விசாரிக்கணும்) நயன்தாராவின் அழகு, நாள்பட்ட பெயின்ட் போல பல் இளிக்கிறது. உடனடி தேவை… யவ்வனம்! அது கிடைப்பது எங்கனம்? தேடுங்கம்மா தேடுங்க!

நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் பாதிதான் நித்யா மேனனுக்கு. பெங்களூர் தக்காளி போல மினுக்குகிறார். அண்டர் கவர் அதிகாரியான அவர் உளவுக்காக போடுகிற இன்னொரு கெட்டப்பில், சொக்குதே மனம்!

காமெடிக்கு தம்பி ராமய்யா. பொறுப்புணர்ந்து சிரிக்க வைக்கிறார் மனுஷன். கபாலியை தொடர்ந்து இந்தப்படத்திலும் அதே போல ஒரு அழுகாச்சி கேரக்டர்தான் ரித்விகாவுக்கு! இப்படியே போனால் கமலா காமேஷ் இடம், ரித்விகாவுக்குதான்!

டைரக்டர் ஆனந்த் சங்கருக்கு இருந்த அத்தனை பொறுப்பும், தனக்கும் உண்டு என்பதை முழுமூச்சாக உணர்ந்திருப்பது ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் மற்றும் ரவிவர்மாதான்! படத்தில் வருகிற ஒவ்வொரு பைட்டும் பொறி பறக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு தீனி போட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஐட்டம்தான் போலிருக்கிறது அந்த ஸ்பீடு! ஹிட்லர் காலத்திலேயே ஸ்பீடு இருந்ததாக குறிப்பிடும் டைரக்டர், அதற்காக தேடிக்கண்டு பிடித்துச் சேர்த்த அத்தனை பழைய காட்சிகளும், பிரமிப்பு.

இரண்டு விக்ரம்களும் மோதிக் கொள்ளும் காட்சியில் திறமை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்! அதே நேரத்தில் நயன்தாரா, விக்ரம் ஜோடியை ஏதோ டீன் ஏஜ் ஜோடி போல காட்டுவதற்கு அவர் பட்ட பாட்டை திரையில் அப்பட்டமாக உணர முடிகிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், எல்லாமே திணிக்கப்பட்ட பாடல்கள்தான். காதிலும் திணிக்கும்படி அமைந்திருப்பதுதான் ஐயே!

விக்ரம் கேட்கும் அந்த ரெண்டு நிமிஷ விசாரணைதான் திகில் பிகில் ஏரியா. “மந்திரிகிட்ட விசாரணை செய்ய ரெண்டு நிமிஷம் போதும்” என இவர் சொல்ல, “நீ போட்டு வெளு தொரை” என்று கூச்சலிடுகிறார்கள் ரசிகர்கள். பில்டப் விக்ரமுக்கு அது மட்டும் போதும். ஆனால் நெடுந்தொலைவு பயணம் செய்த அனுபவசாலி விக்ரமுக்கு?

கமர்ஷியல் ஹீரோவான விக்ரமுக்காக செய்யப்படும் கதைகள் எல்லாம், இப்படி ‘கமர்கட்’ ரேஞ்சில் அமைந்துவிடுவது… தானா நடக்குதா? இல்ல திட்டம் போட்டு நடக்குதா? பத்து எண்றதுக்குள்ள சொல்லுங்க விக்ரம்?

-ஆர்.எஸ்.அந்தணன்

 

Leave A Reply

Your email address will not be published.