20 ந் தேதியும் ரிலீஸ் இல்லை! தடுமாறும் இது நம்ம ஆளு?

0

டி.ஆர் பேமிலி காலை 7.30 க்கு இந்தி பிரச்சார சபாவிலிருக்கும் வாக்கு சாவடியில் வாக்களிக்க வருவதாக பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு முதல் நாளே தகவல் அனுப்பி வைக்கப்பட்டது சிம்பு அண் பேமிலி பி.ஆர்.ஓ மூலம். சிம்புவாவது… காலையில் ஏழரை மணிக்காவது? அறிவிப்பை படித்த அடுத்த நிமிஷமே போட்டோகிராபர்கள் முணுமுணுக்க, அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை சிம்பு. டிஆர் மட்டும் காலையில் வந்து ஓட்டுப் போட, பொழுது சாய்வதற்குள் பொட்டியில் கை வைத்துவிட்டார் சிம்பு. வெளியே வந்த அவரிடம், எக்கச்சக்கமான எலக்ஷன் கேள்விகளை கேட்டது பிரஸ். “என்னங்க நீங்கள்லாம்… எங்கிட்ட அரசியல்வாதிகிட்ட கேட்கிற மாதிரி கேட்கிறீங்க?” என்று சிரித்தார் அவர். (அதானே?) இருந்தாலும், ஏன் மாற்றம் வரணும்? எல்லாம் நல்லாதானே போயிட்டு இருக்கு என்று சிம்பு சொன்னதை அவ்வளவு சுலபமான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஒருபுறமிருக்க, சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தை வெளியிடுவதற்குள் தாடி முடியில் பாதியை இழந்து விடுவார் போலிருக்கிறது டி.ஆர். அவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதாம் அவருக்கு. தினந்தோறும் பேசி பேசி டயர்டாகி கிடக்கிறது இது சம்பந்தமான குழு. போகிற வேகத்தையும், கடன் காரர்கள் காட்டுகிற பிடிவாதத்தையும் பார்த்தால், படம் அறிவித்தபடி 20 ந் தேதி வருவது சிரமத்திலும் சிரமம் என்கிறது கோடம்பாக்கம்.

மீண்டும் ரிஸ்க் எடுக்க துணிந்துவிட்டார் டி.ஆர். ஒரு காலத்தில் தன் ஒருவர் திறமையால் கோடி கோடியாக சம்பாதித்தவர், மகனுக்காக எடுக்கிற ரிஸ்க் ஒவ்வொன்றும் பெத்த கடமையன்றி வேறென்ன? முழு தமிழ் கடவுள் முருகனே வந்து வேலால் உசுப்பிவிட்டால் ஒழிய, சிம்பு என்கிற குதிரை இப்போதைக்கு எழுந்து ஓடாது போலிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.