ஜீவா – விமர்சனம்

0

ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின் கோபம்தான் ஜீவா! என்றாலும் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் காதல் வேண்டுமே? ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் நுரைக்க நுரைக்க வைத்து டீன் ஏஜ் பசங்களின் காதல் ஜீன்களையும் டச் பண்ணுகிறார் சுசீந்திரன். இதுவரை மட்டுமல்ல, இனிமேலும் அவரது இந்த துணிச்சலான நடைக்கு பச்சை புல்வெளி அமைத்துத்தர வேண்டிய கடமை இருக்கிறது நல்ல சினிமா ரசிகர்களுக்கு!

குழந்தைகளை நடிக்க வைப்பதென்பது கூனர் குட்டிக்கரணம் அடிப்பதற்கு சமம்! அதை அசால்ட்டாக செய்கிறார் சுசீ. அதுவும் தன் ஒவ்வொரு படத்திலும்….! இந்த படத்திலும் அப்படியொரு பிளாஷ்பேக். அந்த சிறுவன் நடிக்கிறானா, இல்லை நிஜமே அவன்தானா? என்பதை போல நகர்கிறது படம். அந்த பேட் என்ன வெலண்ணே? அதுக்கு பக்கத்துல இருக்கே, அது? இப்படி எண்ணம் முழுக்க ஒரு கிரிக்கெட் பேட் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிற அவனுக்கு அம்மா இல்லை. அங்கேயே படத்தின் ஹீரோவை நம் மனசுக்குள் உட்கார வைத்துவிடுகிறார் சுசீ. அதற்கப்புறம் ஹீரோ வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணமே படத்தை விரட்டுகிறது. முடிவு? கைதட்டல்களுக்குரியது. முயற்சியுடையார் முன்னேற்றம் அடைவார்! என்கிற கேட்டு கேட்டு புளித்துப்போன கர்ண கடுப்பு அறிவுரையை கமர்கட் போல ஊட்டியதற்கு மீண்டும் ஒரு முறை சுசீக்கு கை குலுக்கி….நெக்ஸ்ட்!

ஒரு கப் சர்க்கரை வேணுங்கண்ணா… என்று வந்து நிற்கும் அந்த ஸ்கூல் யூனிபார்ம் ஸ்ரீதிவ்யா- விஷ்ணு காதல் ஒரு அழகான டிராக் என்றால், அதே விஷ்ணு கிரிக்கெட்டே உயிர் மூச்சு என்று வாழ்வதும், என்னைக்காவது இந்தியாவுக்காக விளையாடுவோம் என்று போராடி ரஞ்சி டிராபி வரைக்கும் முன்னேறுவதும் மற்றொரு டிராக்! இவ்விரண்டையும் மிக அழகாக பின்னி பிணைந்து கொண்டு சென்று இறுதியில் பரபரப்பான ஒரு கிரிக்கெட் மேட்சில் படத்தை முடிக்கையில், சுசீந்திரனின் திரைக்கதை அழகு கம்பீரமாக புன்னகைக்கிறது!

விஷ்ணு ப்ளஸ்டூ மாணவராகவும் நடித்திருக்கிறார். குளோஸ் அப்புகளில் நெருட வைத்தாலும், வெகு சீக்கிரம் சகஜமாகிவிடுகிறார் நமக்குள். ஒரு கிரிக்கெட் வீரன் எந்நேரமும் லட்சியம், புண்ணாக்கு என்று அலையாமல், டீன் ஏஜ் குறும்புகளையும் விட்டு வைக்கவில்லை. திருட்டு ஒயின் அடிக்கும் ஸ்ரீ திவ்யாவையும் அவளது தங்கையையும் பிளாக்மெயில் செய்தே அவர் ஒயின் அடிக்கும் அந்த பகுதி கலகல! அதெப்படி பொம்பள புள்ள ஒயின் அடிக்கப்போச்சு என்று குரல் கொடுப்பவர்களுக்கு… சுசீந்திரன் சார்பில் ஒரு விளக்கம். கிறிஸ்துவர்கள் வீட்டில் ஒயின் வைத்திருப்பது சகஜம்தானே? அதற்கப்புறம் லவ் வீட்டுக்கு தெரிந்து இருவரும் பிரிக்கப்படுகையில் குடித்துவிட்டு வரும் விஷ்ணுவை மீண்டும் திருத்துவது எப்படி என்கிற விஷயத்தில் மிக பொருத்தமாக கிரிக்கெட்டை கொண்டு வந்து பொருத்துகிறார் சுசீந்திரன். வெல்!

மிக நுணுக்கமாக நடித்திருக்கிறார் விஷ்ணு. ‘இதுவரைக்கும் நான் விளையாடியதை என் அப்பா பார்த்ததில்ல’ என்று வருந்துகிறவர், அடுத்த ஷாட்டிலேயே கிரவுண்டில் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடுவதும், ஒரு சின்ன குற்ற உணர்ச்சியோடு வினாடி நேரத்தில் கேலரியில் அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்து குனிந்து கொள்வதுமாக… அற்புதம்! ஏகப்பட்ட தவிப்போடு பல வருஷங்களுக்கு பிறகு காலேஜ் வாசலில் ஸ்ரீ திவ்யாவுக்காக காத்திருக்கும் போது கூட அந்த நுணுக்கம் வெளிப்படுகிறது அவரது முகத்தில்!

ஒரு ப்ளஸ் டூ மாணவியின் இன்னொசென்ஸ் நிறைந்திருக்கும முகம்…. அது அப்படியே காலேஜ் போனதும் முதிர்ச்சி என்று என்னமாய் நடித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. காதலனின் கிரிக்கெட் லட்சியம் தன் காதலை தின்று விடுமோ என்கிற கவலையிலும் கவனிக்க வைக்கிறார் அவர். ஊதாக் கலராக உள்ளே வந்து தமிழ்சினிமாவின் வான வில்லாகி விடுவார் போலிருக்கிறது.

மிக சொற்பமான காட்சிகளில் வந்தாலும், கண்களை குளமாக்கிவிட்டு போகிறார் அன்னக்கொடி லட்சுமணன். ஆறு வயசுல கிரிக்கெட் மட்டையை பிடிக்க ஆரம்பிச்சேன். இனி என்ன பண்ணுறதுன்னே தெரியல… என்று புலம்பியபடியே அவர் எடுத்த முடிவு? பயங்கரம். இவரும் சரி, விஷ்ணுவும் சரி. நிஜமான கிரிக்கெட் வீரர்கள் என்பதும், படத்தில் கிரிக்கெட் விளையாடும் துணை நடிகர்களும் கூட கிரிக்கெட் வீரர்கள் என்பதும் படத்தின் வேல்யூவை இன்னும் இன்னும் எகிற வைத்திருப்பதை சொல்லியே ஆக வேண்டும்.

‘ஒரு ரோசா’ என்ற பாடலுக்கு ஆடியிருக்கிறார் சதுரங்க வேட்டை நட்ராஜ். அலட்டல் இல்லாத அசைவுகள். அருமையான வரிகள். படத்தில் சூரியும் இருக்கிறார். பட் அவருடைய தனி ஸ்டைல் காமெடிக்குதான் பஞ்சம். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சிரிக்க வைத்தார்… பிழைத்தோம். மிக சிறிய கேரக்டர்தான் தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு. காதலிக்கும் தன் மகளை கைவிட்டு போகாமல் தடுக்க போராடும் ஒரு அப்பனின் அர்ப்பணிப்பையும் கோபத்தையும் அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகர் உதயமாகியிருக்கிறார்.

ஆங்காங்கே கைதட்டல் வாங்குகிற வசனங்களில் ஆசிட் அல்ல, லட்சோப லட்சம் இளைஞர்களின் ஏமாற்றத்தையும் சேர்த்து கலந்து அடிக்கிறார் வசனகர்த்தா சந்தோஷ். துணிச்சலான வசனங்களை எழுதவே ஒரு துணிச்சல் வேண்டும். அதுவும் முன்னணி மீடியாக்கள் எல்லாம் அவர் சொல்லும் ‘அவர்களின்’ கையிலிருக்கும்போது! ‘அவர் தட்டிக் கொடுக்கிறார்னு நினைச்சேன். ஆனால் தடவி பார்க்கிறார்னு அப்புறம்தான் தெரிஞ்சுது’ , ‘இதுவரைக்கும் நீங்க செலக்ட் பண்ணின 16 பேரில் 14 பேர் உங்க சமூகத்தை சேர்ந்தவங்கதானே?’ என்று கேட்கிற போது, கொஞ்சம் யோசிக்கவும் வேண்டியிருக்கிறது. (ஆனால் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்களின் தனித் திறமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?)

மற்ற எல்லா காட்சிகளையும் விட கிரிக்கெட் கிரவுண்டில் எக்சலண்ட் ஆட்டம் போடுகிறது மதியின் ஒளிப்பதிவு.

ஒரு அழகான மெலடி… அந்த மெலடியையே பல காட்சிகளுக்கு பின்னணி இசையாகவும் பயன்படுத்தி ராஜாவின் ஸ்டைலில் மனசை கொள்ளையடிக்கிறார் டி.இமான்!

ஒரு அற்புதமான தருணத்தில் தன் முகம் காட்டி, தியேட்டரில் விசில் பறக்க வைக்கிறார் ஆர்யா. கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான விமர்சன படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஜீவாவை தயாரித்திருக்கும் நடிகர் விஷாலுக்குதான் எல்லா பெருமையும்!

இந்த படம் தானாக ஓடும். ஆனால் அது ஓட வேண்டிய இடம் இன்னொன்றும் இருக்கிறது. படத்தில் வரும் கேள்விகள் இதை அங்கு கொண்டு போய் சேர்க்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.