ஜோக்கர் விமர்சனம்

1

சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு.

‘முதல்ல டாய்லெட்டை கட்டு. அப்புறம் என் கழுத்துல தாலி கட்டு’ என்கிற காதலியின் ஆசையை நிறைவேற்றக் கிளம்புகிற ஒரு அப்பாவி வாலிபன், அல்ப ஆயுசில் போய் சேர்வதுதான் கதை. நடுவில் அவனை மனநிலை பிறழ வைக்கிறது சுற்றுபுற சுனாமிகள். ‘நானே இந்த நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்வதுதான் சட்டம்’ என்று நம்பி நடமாடுகிற அவனுக்கு துணை போகிற இரண்டு உள்ளங்களும், அவர்களின் வலிகளும், அவர்கள் பேசுகிற வசனங்களும் தியேட்டருக்கு வெளியேவும் பரவினால், புரட்சி நிச்சயம்!

‘போராடலாம் வா…’ என்பதோடு முடிகிறது படம். போலி முகமூடிகளோடு திரியும் அத்தனை அரசியல்வாதிகளையும் நெற்றிப்பொட்டில் வைத்து பேனா செருகியிருக்கிறார் ராஜுமுருகன். சமரசம் இல்லாமல் ஒரு படத்தை இயக்கியிருக்கும் அவருக்கு, அண்டசராசரம் முழங்க ஒரு அதிர்வேட்டு!

ஒரு மணல் லாரி கொள்ளாமல் மணல் ஏற்றிக் கொண்டு கிளம்புவதாக ஆரம்பிக்கிறது படம். அதே மணல் லாரி ஹீரோவின் கதையை முடித்துவிட்டு மறைவதாக முடிகிறது. ஒரு கதையை மட்டுமல்ல, எதையும்… எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதை வெறும் கமா கொட்டேஷன் போட்டு கதையளக்காமல், நச் நச்சென்று புரிய வைக்கும் ராஜுமுருகனின் ஸ்டைல், நேர்த்தியான சிறுகதைக்கு ஒப்பானது. அதுவும் ஹீரோவின் அறிமுகக் காட்சி, இதற்கு முன் வேறெந்த படத்திலாவது இப்படி அமைந்திருக்குமா? செம…

படத்தின் ஹீரோவான சோமசுந்தரம் மட்டுமல்ல, சும்மா போக வருகிற புல் பூண்டெல்லாம் கூட பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். டாய்லெட் திறக்க வரும் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் அந்த முதிய தம்பதிகள் உட்பட! இவர்களே அப்படியென்றால், மெயின் ரோலில் வந்து போகும் பொன்னூஞ்சல், இசை, மல்லிகா, மிலிட்டிரியெல்லாம் எப்படி நடித்திருப்பார்கள் என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா?

மனநிலை சரியில்லாதவர் சோம சுந்தரம் என்பதை படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் புரிய வைத்துவிடுகிறார் டைரக்டர். அதற்கப்புறமும் அவர் பேச்சை கேட்டுக் கொண்டு இசையும் பொன்னூஞ்சலும் ஆக்ஷனுக்கு உதவுகிறார்களே, அது ஏன்? என்கிற கேள்விக்கு, ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கில் பதில் சொல்லிவிடுகிறார் ராஜுமுருகன். பைத்தியக்காரன் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல், அந்த பைத்தியக்காரன் சொல்வதை கேட்கவும் முடியாமல் தவிக்கும் அதிகாரிகளும் கலகலக்க விடுகிறார்கள்.

சோமசுந்தரத்தின் நடிப்பை சொல்ல படத்தில் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும், குளித்துக் கொண்டே ரேடியோ கேட்கும் அந்த காட்சி பிரமாதம். அவர் காது கூட நடிக்கிறதோ என்கிறளவுக்கு அசத்தல். கோட் போட்டவுடன் அந்த உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்கிற கம்பீரம் என்ன? போடுகிற உத்தரவுகள் என்ன? ‘ஒரு கக்கூஸ் கட்றதுல கூட ஊழல் பண்றீங்க. உங்ககிட்ட எப்படி நியாயம் கிடைக்கும்?’ என்று நீதிமன்றத்தில் முழங்குகிற வேகம் என்ன? லைஃப் டைம் கேரக்டர் அவருக்கு. அதே சோமசுந்தரம், பிளாஷ்பேக்கில் ‘சோக’ சுந்தரமாகி அழும்போது, கலங்காத கண்களே இருக்க முடியாது.

இவருக்கு ஜோடி ரம்யா பாண்டியன். ‘உன் கோண மண்டை புடிக்கல’ என்று ஒதுங்கிப் போகும் அவர், பிற்பாடு மெல்ல மெல்ல சோமசுந்தரத்திற்கு வசப்படுகிற காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம். முகத்தில் மேக்கப்புக்கு பதில் சோகத்தை பூசினாலும், அதையும் மீறி வெளிச்சம் பூசுகிறது அந்த கிராமத்து அழகு!

‘முகப்புத்தகத்துல போட்டாச்சா…’ என்று கேட்கிற சோமசுந்தரத்திடம், ‘போட்டாச்சு பிரசிடென்ட்’ என்று பவ்யம் காட்டி, ஜனாதிபதியின் பர்சனல் அசிஸ்டென்ட் போலவே மாறிவிட்ட காயத்ரி கிருஷ்ணா, தமிழ்சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவாக இருப்பார். எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு சிறப்பான கேரக்டர். ‘நானெல்லாம் அந்த கூட்டத்துல நிக்கிறவன் இல்லப்பா…’ என்று கூறிவிட்டு, அடுத்த சில நிமிஷங்களிலேயே கொள்கையை பறக்க விடும் இவரைப்போன்ற கேரக்டர்கள், ஊருக்கு நாலு பேராவது தேறுவார்கள்.

பார்ப்பதற்கு ஜெயகாந்தன் போலவே தோற்றமளிக்கும் அந்த பொன்னூஞ்சல் கேரக்டரில் மு.ராமசாமி. கடைசியில் அவர் பேசும் நாலு வரி வசனத்தை கேட்டால், நாண்டுகிட்டு சாகும் சுயநலக்கூட்டம்!

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அழகு. பின்னணி இசை அதைவிட சிறப்பு. பிற்பாதியில் வரும் லேசான தொய்வை எடிட்டர் வேலுச்சாமி சற்றே சரி செய்திருக்கலாம். ஒரு கிராமத்திற்குள் நுழைந்து வந்ததை போல உணர்வை தருகிறது செழியனின் ஒளிப்பதிவு.

மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிறவனை ஜோக்கராக பார்ப்பதும் அதே மக்கள்தான் என்பதை மிக அழுத்தமாக சொல்ல வருகிறார் ராஜுமுருகன். ஆனால் அவரே சோமசுந்தரத்தை அப்படிதான் காட்ட முயல்கிறாரோ என்கிற டவுட் வருகிறதே… அதை தவிர்த்திருக்கலாமோ?

மற்றபடி, இதுபோன்ற படங்கள் ஓடினால்தான், கரை வேட்டிகள் தங்கள் வேட்டிகளை மட்டுமல்ல, இதயத்தையும் வெள்ளையாக்க முயல்வார்கள்.

ஜோக்கர்- சிரிப்பதற்கு மட்டுமல்ல. வீடு சேர்ந்த பின்பும் கூட யோசிக்க வைக்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

1 Comment
  1. மாரி says

    இந்த படத்தை பார்த்து தய
    வு செய்து திருந்துங்கள்…….

Leave A Reply

Your email address will not be published.