ஜோதிகா என்னோட மகள் சிவகுமார் உருக்கம்!

0

மொழி திரைப்படம் வந்து சரியாக ஏழு வருஷங்கள் ஆகிவிட்டது. அந்த படத்தின் சிறப்பு காட்சியில் பேசிய எல்லாரும் ‘அதுக்குள்ள ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டே ஆகணுமா? சூர்யா சார்…கொஞ்சம் யோசிங்க’ என்று பேசிவிட்டு போனார்கள். அதற்கப்புறம், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று எந்நேரமும் பொறுப்புள்ள குடும்ப தலைவியாகிவிட்ட ஜோதிகாவால், சினிமாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இதோ-

ஏழு வருடங்கள் கழித்து ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஜோதிகாவையும், சூர்யாவையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய வசந்த் வந்திருந்தார். வாயார வாழ்த்தினார். ‘இவங்க ரெண்டு பேரையும் நான் அறிமுகப்படுத்தினேன் என்பது எனக்கு பெருமை. சதாரணமாக ஒரு கல்யாண வீட்டுக்கு போனால் கூட அதுவரை என்னை சாதாரணமாக பார்க்கும் குழந்தைகள், ‘இவர்தான் சூர்யா ஜோதிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்’ என்று சொன்னால் போதும். ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள்’ என்று கூறி தானும் சந்தோஷப்பட்டு, சூர்யா ஜோதிகாவையும் சந்தோஷப்படுத்திவிட்டு போனார். (இறுதியாக பேசிய ஜோதிகா, ‘என்னை அறிமுகப்படுத்தியது பிரியதர்ஷன் சார்தான்’ என்று வசந்தின் ‘சுயநல பெருமையை’ லேசாக இடித்துக் காட்டியது அழகு)

கே.எஸ்.ரவிகுமார், டைரக்டர் பாலா, ராதாமோகன் உள்ளிட்ட சூர்யா பேமிலியின் நலன் விரும்பிகள் அத்தனை பேரும் அங்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ‘இத்தனை வருஷமா நான் போற இடங்களில் எல்லாம் ‘ஏன் ஜோவை நடிக்க வைக்க மாட்டேங்கிறீங்க?’ என்று எங்கிட்ட கோவப்படாத ஜனங்களே கிடையாது. எல்லாருக்கும் நான் ஏதோ ஒரு பதிலை சொல்லி தப்பிச்சு வந்திருக்கேன். அந்த நேரத்தில்தான் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை ரீமேக் பண்ணலாம்னு எங்கிட்ட சொன்னாங்க. அந்த படம் வெறும் படமா மட்டும் இல்லாமல் பெண்கள் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய பல விஷயங்கள் அதில் இருந்தது. அதனால்தான் அதில் ஜோ நடிச்சா நல்லாயிருக்கும் முடிவு பண்ணினோம்’ என்றார் சூர்யா.

எல்லாவற்றையும் விட பெரும் பேறு ஒன்றை பெற்றார் ஜோதிகா. ஒரு காலத்தில் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு குறுக்கே நிற்பவரே அவர்தான் என்று கருதப்பட்ட சிவக்குமார், இந்த விழாவில் அப்படியொரு அற்புதமான வார்த்தைகளால் புகழ்ந்தார் ஜோதிகாவை. ‘எனக்கு இரண்டு மகள்கள். ஒண்ணு நான் பெற்ற மகள் பிருந்தா. இன்னொன்று இறைவனா பார்த்துக் கொடுத்த ஜோ’ என்றார் அவர்.

‘என் உலகமே சூர்யாதான்’ என்று நெக்குருகினார் ஜோ.

குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்ததாக முடிய… கோடம்பாக்கம் ஒரு புதிய நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அது ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தின் ரிலீஸ் தேதியன்றி வேறென்ன?

Leave A Reply

Your email address will not be published.