காடு- விமர்சனம்

0

‘காடுவெட்டி’கள் கவனிக்க வேண்டிய படம்!

காடென்றாலே வீரப்பன்தான் என்றிருந்த தமிழ்சினிமா ரசிகனின் முதுகில் தட்டி, காடு என்றால் அதற்குள் ஒரு ஊர் இருக்கும். அந்த ஊருக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் வருஷம் முழுக்க சச்சரவு இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த ஊர் பெருசுகளுக்கும் வளர்ந்து நிற்கும் மரங்களுக்கும் நடுவே ஒரு உறவு இருக்கும் என்பதையெல்லாம் நிறுத்தி நிதானமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம். ஊரெல்லாம் ஜிகினா கதைகள் மினுமினுவென இறைந்துகிடக்க, இப்படியொரு கதையை படமாக்க துணிந்த தயாரிப்பாளர் நேரு நகர் நந்துவுக்கு முதல் பாராட்டுகள்.

விதார்த் அந்த ஊரில் விறகு சுமந்து பிழைக்கிறவர். இருந்தாலும் காய்ந்த மரங்களில்தான் கை வைப்பாரே தவிர, பச்சை மரங்களை வெட்டுகிறவர்களை அடியோடு வெறுப்பவர். ‘இந்த காடு தர்றதை வச்சு உயிர் வாழ்வோம். அதுக்காக வசதியா வாழணுங்கறதுக்காக காட்டுல இருந்து ஒரு செடியை கூட பிடுங்க மாட்டோம்’ என்று நெஞ்சு நிமிர்த்துவார். அவரையே வளைத்துப்போட்டு மரம் வெட்ட ஆசைக்காட்டுகிறது ஒரு கும்பல். கெட்ட வழி பணத்திற்கு ஆசைப்படாத விதார்த்துக்கு ஒரு நண்பன் கருணா. ஃபாரஸ்ட் ஆபிசர் ஆக வேண்டும் என்று நினைப்பவனிடம் ரெண்டு லட்சத்திற்கு மேல் லஞ்சம் கேட்கிறார்கள். அதற்காக சந்தன மரக்கடத்தலில் ஈடுபடும் அவன் ஒரு நாள் சிக்கிக் கொள்ள, தனது நிலைமையை சொல்லி விதார்த்தை பழியேற்க வைக்கிறான். ஜெயிலுக்கு போகும் விதார்த்திற்கு தான் ஏமாற்றப்பட்டதும், நண்பனின் சூழ்ச்சியும் புரிகிறது. ஆனால் சிறையிலிருந்து அவர் வெளியே வரும்போது தன்னை சிறைக்கு அனுப்பியவனே ஃபாரஸ்ட் ஆபிசராகி நிற்கிறான். அதுவும் தன் கிராம மக்களை ஊரை விட்டே காலி செய்யவும், தனக்காக பழி ஏற்றுக் கொண்டு சிறை சென்ற விதார்த்தை கொல்ல துணிகிற அளவுக்கும்! என்ன செய்தார் ஹீரோ என்பது க்ளைமாக்ஸ்.

மலைகிராம இளைஞனாகவே மறு அவதாரம் எடுத்திருக்கிறார் விதார்த். இவரது ஆக்ஷன் காட்சிகளை விடவும், ஜெயில் காட்சிகளை விடவும், அந்த காதல் போர்ஷன் இனிப்பு. அதுவும் கீழே குனியும் காதலியை லேசாக எட்டிப்பார்த்து ஏமாற்றமடைவதெல்லாம் டூமச் என்றாலும், சுவை மச்! ஆரம்பத்திலிருந்தே பொறுப்புணர்ந்து வளர்ந்தாலும், அந்த அப்பாவி பெண்ணை விட்டுட்டு இப்படி அநியாயமாக சிக்கிக் கொண்டாரே என்று ரசிகர்களை பதற விடுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் அடிபட்டு மிதிபட்டு கிடக்கையில் காதலி வந்து அந்த அறையை சுத்தம் செய்கிற காட்சியில் இன்னொரு சேதுவாகவே மாறி விடுகிறார். சண்டைக்காட்சிகளில் பொறி பறக்க விடுகிறார். (எல்லாம் சரி. நீங்க மேல வரணும்னா பழைய பாக்யராஜ் டைப் படங்கள் அவசியமண்ணே…)

விதார்த்துக்கு ஜோடியாக சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். வண்ணத்துப்பூச்சி மீது மழைச்சாரல் விழுந்த மாதிரி, அப்படியொரு அழகு. ஆனால் அந்த மலை கிராமப் பெண்களுக்கு பொருந்துகிற மாதிரி டிரஸ் பண்ணனும் அல்லவா? ம்ஹும். காட்சிக்கு காட்சி கண்களை மிரட்டுகிறது விதவிதமான அலங்காரமும் ஆடைகளும். இப்படி நேட்டிவிட்டியை நெட்டித்தள்ளினாலும், சமஸ்கிருதியின் அழகுக்காக வாய் பொத்ஸ்!

முத்துக்குமார் என்ற புதுமுகம், கருணா என்கிற துரோகியின் கேரக்டரை சுமந்திருக்கிறார். என்ன பொருத்தம் இப்பொருத்தம் என்பதை போலவே இருக்கிறது அவரது நடவடிக்கைகள். நல்ல தேர்வு.

படத்தில் தம்பி ராமய்யாவும் சிங்கமுத்துவும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள். அதுவும் ‘நான் ஒண்ணு சொல்வேன். அதுக்கு நேர் எதிரா நீ ஒண்ணு சொல்லணும்’ என்று தம்பி ராமய்யா ஆரம்பித்து வைத்து, பின்பு அந்த படுகுழியில் அவரே விழுந்து தவிக்கையில் தியேட்டரே கலீர் கலீர் ஆகிறது. ஆனால் இந்த காமெடி சில காட்சிகளில்தான் குலுங்க வைக்கிறதே தவிர, பல காட்சிகளில் அலங்க மலங்க வைக்கிறது நம்மை.

சமுத்திரக்கனிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது படத்தின் செகன்ட் பார்ட்தான். சிறைக் கைதி. புரட்சிகரமான வெயிட்டான ரோல். சேகுவாரா எழுதிய புத்தகத்தை சக கைதிகளுக்கு வாசித்து காட்டுகிற காட்சியால் மட்டுமல்ல, அவரது நடை, உடை, பார்வை, அதட்டல் எல்லாமே ‘கனியிருப்ப கவலையெதுக்கு?’ என்கிற சிந்தனையை ஓட விடுகிறது. ‘இந்த காட்டுல இருக்கிற ஒவ்வொரு மரமும் உன் பாட்டன், பூட்டன், முப்பாட்டனோட ஆன்மா. அதை வெட்றவங்களை நீ வெட்டு’ என்கிற டயலாக்கை அவர் வாயால் கேட்கிற போது நரம்பெல்லாம் சிலிர்க்கிறது. இப்படியே எல்லா படங்களிலும் தனக்கான கேரக்டரை அவர் மெனக்கெட்டு தேர்ந்தெடுத்தால், தமிழ்சினிமாவின் கருப்பு எம்ஜிஆராகவும் கொண்டாடப்படலாம். கௌப்புங்க…. இருந்தாலும் அவர் யாரு? எவரு? எதுக்காகப்பா ஜெயிலுக்கு வந்தாரு? என்பதையெல்லாம் வசனமாக ஒப்பித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.

கே யின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சர்வ பொருத்தம். இன்னொரு இமான் படம் பார்த்த உணர்வு. வெல்டன் கே.

மண்ணையும் மரங்களையும் நேசிக்கும் ஒருவன், நண்பனுக்காக ‘நான்தான் சந்தன மரம் வெட்டினேன்’ என்று பொய்யாகக் கூட சொல்வானா? இந்த இடத்தில் அடிநாதத்தையே அல்லாட விட்டிருக்கிறார் இயக்குனர் ஸ்டாலின். ‘காட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவனுக்கெல்லாம் காட்டிலாகாவில் பொறுப்பு கொடுக்கறதை விட காட்டிலேயே வாழும் மக்களிடமே அந்த பொறுப்பை கொடுக்கலாமே?’ என்கிற சுத்தியடி யோசனைக்கு மட்டும் ஒரு பெரிய சபாஷ்.

திரைக்கதையிலும் காட்சிகளின் சுவாரஸ்யங்களிலும் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் காட்டின் அடர்த்தி கூடுதலாக இருந்திருக்கும்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.