ரஜினி படத் தலைப்புக்கு சிக்கல்! வேறொருவர் கையில் காலா தலைப்பு?

2

பா.ரஞ்சித், ரஜினி இருவரும் இணையும் புதிய படத்திற்கு ‘காலா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நூறு கோடி செலவு செய்தால் கூட, அது கடைகோடி வரைக்கும் போய் சேருமா தெரியாது. ஆனால் தலைப்பை அறிவித்த அரை மணி நேரத்திற்குள் நாடெங்கிலும் எட்டிவிட்டது இத்தலைப்பு. பொருத்தமாக ரஜினியின் சூப்பர் ஸ்டைல் புகைப்பட டிசைனுடன் அன்று மாலையே வெளியிடப்பட்ட போஸ்டர்கள் உலகம் முழுக்க இருக்கிற ரஜினி ரசிகர்களை ஆஹா ஓஹோ என குஷிப்படுத்தியது.

இந்த சந்தோஷ சாரலுக்கு தடுப்பணை கட்டிவிட்டார் ஒரு தயாரிப்பாளர். பல வருஷமாகவே தமிழ்சினிமா இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் பாடாய் படுத்தி வரும் தலைப்புக்குழப்பம் ‘காலா’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் தலைப்புகளை பதிவு செய்ய மூன்று அமைப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘கில்டு’ என்ற அமைப்பு. மிக மிக சொற்ப தொகையில் இங்கு பதிவு செய்து தலைப்பையும் பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், பெருமாள் கோவிலில் சுண்டல் வாங்குவது போல கூட்டம் கூட்டமாக சேர்ந்திருக்கிறார்கள் கில்டு உறுப்பினர்கள். அப்படியொரு தயாரிப்பாளர்தான் இந்த காலா தலைப்பையும் அங்கு பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்த விஷயத்தை தெளிவாக அறிந்து கொள்ளாமல், காலா தலைப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

அவ்வளவுதான்… கில்டு அமைப்பின் கதவைத் தட்டி, “ஐயா அநியாயம் நடந்து போச்சு. என் தலைப்பை ரஜினி சுட்டுட்டாரு. நீதி வேணும். நிம்மதி வேணும்” என்று கூக்குரல் போடுகிறாராம் தலைப்புக்கு அதிகாரபூர்வமான சொந்தக்காரர்.

நியாயமா அவருக்கு என்ன வேணும்? எப்படி வேணும்? என்கிற பஞ்சாயத்து அடுத்து ஆரம்பிக்கும். ஒத்து வருவாரா? விட்டுத் தருவாரா? இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? நெஞ்சை பிளந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது கோடம்பாக்கம்.

2 Comments
  1. sidhique says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த மாபெரும் வெற்றி படைப்பு காலா .
    ஊழல் அரசியல் வியாதிகளுக்கு அவர் காலன். தமிழ் மக்களுக்கு அவர் தான் காவலன்

  2. Ravi says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த மாபெரும் வெற்றி படைப்பு காலா . ஊழல் அரசியல் வியாதிகளுக்கு அவர் காலன். தமிழ் மக்களுக்கு அவர் தான் காவலன் காலா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த வெற்றி வைர மகுடம் என்றால் அது மிகை இல்லை. தலைவர் ரஜினி அவர்களின் காலா மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.