கபாலிக்கே கட் மேல் கட்! டென்ஷன் ஏற்படுத்திய சென்சார்?

1

எந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது பிரச்சனை. இந்த அறிவிப்பை அவர் சந்தோஷத்தோடும், ஒருவித சுதந்திர நிலையிலும்தான் வெளியிட்டிருப்பார் என்பதில் துளி சந்தேகம் இருக்க முடியாது. ஏன்?

கபாலி 15 ந்தேதி ரிலீஸ் என்று காத்திருந்த உலகம், அது தள்ளிப் போனதும் தானாகவே 22 ந் தேதி ரிலீஸ் என்று நாள் குறித்துக் கொண்டதுடன் டிக்கெட் விற்பனையிலும் கன ஜோராக இறங்கிவிட்டது. முதலில் இந்த டெம்ப்ரேச்சரை தாணுவுக்கு வரவழைத்த நாடு மலேசியா. சாலைகளில் பிரமாண்டமாக வினைல் போர்டே வைத்துவிட்டார்கள். 22 ந் தேதி ரிலீசை நோக்கி கொண்டாட்டங்களையும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இங்குள்ள மண்டல தணிக்கை அதிகாரி அந்த செய்திகளையெல்லாம் பார்த்து செம கோபம் ஆகிவிட்டாராம். “இன்னும் சென்சார் ஆகாத படத்திற்கு எப்படி ரிலீஸ் தேதியை நிர்ணயித்தீர்கள்?” என்று அவர் தாணுவிடம் கேட்க, “ஆர்வத்துல ரசிகர்கள் பண்றதுக்கெல்லாம் நான் என்ன பண்ணுறது?” என்றாராம் அவர். எப்படியோ…, சென்சார் நடைபெறும் தேதிக்கு அனுமதி வாங்கினார் தாணு.

போர்பிரேம்ஸ் அல்லது அரசுக்கு சொந்தமான பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் அமைந்துள்ள பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்கும் வழக்கமுடைய சென்சார் அதிகாரிகளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தாராம் தாணு. இங்கு சென்சார் செய்தால் எப்படியோ செய்தி வெளியே போய்விடுகிறது. அதனால் நாம் ஏற்கனவே தெறி படத்திற்கு சென்சார் செய்த அதே ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கலாம் என்று கேட்க, அதற்கு சம்மதம் தெரிவித்தாராம் மண்டல அதிகாரி. பாஃப்ட்டா என்ற பிலிம் இன்ஸ்ட்டியூட் இயங்கி வரும் இடம் அது.

சென்சார் அதிகாரி மதியழகனிடம், கடந்த ஒரு வாரமாகவே தணிக்கை குழுவில் எங்களையும் அனுமதியுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம் ஏராளமான உறுப்பினர்கள். இவர்களில் யாரை அழைப்பது என்பதை கடைசி வரை மிக மிக ரகசியமாகவே வைத்திருந்த மதியழகன், சம்பந்தப்பட்ட பைலை தன்னுடன் வீட்டுக்கே கொண்டு போய்விட்டாராம். அதே போல படம் திரையிடப்படும் இடத்தை உறுப்பினர்களுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு சொன்ன மதியழகன், பார்க்கப் போவது என்ன படம் என்பதையும் அவர்களுக்கு கடைசி வரை சொல்லவே இல்லையாம். அங்கு வந்த பின்புதான் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

ஆனால் படம் முடியும்போது தங்கள் கைகளில் வைத்திருந்த கட் லிஸ்ட்டை அவர்கள் காட்ட, தயாரிப்பாளர் தாணு மற்றும் பா.ரஞ்சித் இருவரும் அந்த கட்டுகள் இல்லாமல் படத்தை வெளிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் பகீரத முயற்சி எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. சுமார் பத்து இடங்களில் கட் கொடுத்த சென்சார் அதிகாரி மதியழகன், “இந்த கட்டுகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் மறு தணிக்கைக்கு செல்லுங்க” என்றாராம் உறுதியாக.

இப்பவே ரிலீசுக்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். படம் பார்க்கும் ஆர்வம் தலைக்கேறிக் கிடக்கிறது மக்களுக்கு. மறுதணிக்கை அது இது என்று காலத்தை நீட்டிக் கொண்டிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த தாணு, அரை மனசுடன்தான் இந்த கட்டுகளுக்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. படம் தொடர்பான கட் குறிப்புகளை மறுநாள் ஆபிசுக்கு வந்து வாங்கிக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிய சென்சார் அதிகாரி, அந்த பைல் பிறர் கண்களில் பட்டுவிடக் கூடாது என்கிற அக்கறையில் பியூனிடம் கூட கொடுக்காமல் தன் பிரிப்கேசில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாராம்.

பொதுவாக இதுபோன் கட் லிஸ்ட்களை அலுவலக பணியாளர் மூலமே பெற்றுக் கொள்ளும் வழக்கம் தயாரிப்பாளர்களுக்கு உண்டு. ஆனால் கட் லிஸ்ட்டில் இருக்கிற காட்சிகள் கூட வெளியே கசிந்துவிடக் கூடாது என்று நினைத்த தயாரிப்பாளர் தாணு அவரே நேரில் சென்று இன்று காலையில் அந்த லிஸ்ட்டை பெற்றுக் கொண்டிருக்கிறார்-

1 Comment
  1. sandy says

    இதுஎல்லாம் உண்மையாகவே இருந்தாலும், நீங்க பண்ற பில்டப்பும், அளப்பரையும் தாங்கமுடியலடா சாமி…. என்னமோ தாணுவே எழுதினமாதிரி இருக்கு இந்த கட்டுரை…

Leave A Reply

Your email address will not be published.