கடம்பன் /விமர்சனம்

0

இயற்கையை வணங்குற கூட்டத்துக்கும், இயற்கையை சுரண்டுற கூட்டத்துக்கும் நடுவே நடக்கிற சண்டை சச்சரவுகள்தான் கடம்பன்! காடு, மரம், பனி, பட்டர் ப்ளை, தேன், தித்தித்திப்பு என்று மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை ஸ்டைலையும் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு அவிய்ங்க வாழ்க்கை புரியாது. அவிய்ங்களுக்கு நம்ம ஷோக்கு தெரியாது. அவனவன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால், தொந்தரவு இல்லே என்பதுதான் படத்தின் சைட் நீதி. ஆனால், மெயின் நீதி ‘காட்டை அழிக்காதீங்கடா… அழிஞ்சு போயிருவீங்க’ என்பதே!

சுமார் நூறு பேர் கொண்ட குடும்பங்கள். காட்டின் நடுவில் வசிக்கும் அவர்களில் வாலிப பசங்களுக்கு பொழுதுபோக்கு அபாய மலைக் குகைகளுக்கு நடுவே ஆச்சர்யத் தாவுத் தாவி தேன் எடுப்பது. அப்படியொரு அசகாய சூரரான ஆர்யாவை, அதே ஊரிலிருக்கும் கேத்ரீன் தெரசா காதலிக்கிறார். இவனை விட எவன் பொருத்தமாக வந்து வாய்க்கப் போகிறான்? என்ற துப்பு துளி கூட இல்லாமல், எல்லா காதலுக்கும் குறுக்கே நிற்பது போல, கேத்ரீனின் அண்ணனும் இந்த காதலுக்கு குறுக்கே நிற்கிறார். நல்லவேளை… மெயின் கதை அது இல்லய்யா என்று அவ்வப்போது நினைத்துக்கொள்ளும் டைரக்டர் ராகவா, கார்ப்பரேட்டுகளின் அத்துமீறலை காட்ட யத்தனிக்கிறார். அப்புறமென்ன? அந்த சின்னஞ்சிறு கிராமத்தை காட்டிலிருந்து கிளப்பிவிட, ரேஞ்சர், போலீஸ், சமூக ஆர்வலர் குழு என்று பல முனை திருகல் அரங்கேற்றப்படுகிறது.

என் பாட்டன், பூட்டன் வாழ்ந்த இடம் இது. இதை விட்டுட்டு கிளம்ப மாட்டேன் என்று நெஞ்சை புடைக்கும் ஆர்யா அண்டு கோஷ்டிக்கு கார்ப்பரேட்டால் வரும் தொல்லை என்ன? அதிலிருந்து தப்பித்து தங்கள் காட்டை அவர்கள் எப்படி காப்பாற்றினார்கள் என்பது மீதி.

பேராண்மை மாதிரி புரட்சி பேச வேண்டிய கதையை எவ்வளவு வறட்சியாக சொல்ல முடியுமோ, அவ்வளவு வறட்சியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் ராகவா. படத்தில் புதுசா ஒரு சீன் இருந்தா சொல்லுங்க என்று போட்டி வைத்தால், பேய் முழி முழிப்பீர்கள். எல்லா காட்சிகளும் யூகத்திற்கு உட்பட்ட காட்சிகளே. இந்த கதையை கேட்டு முதலில் ஓ.கே சொல்லியிருந்தாலும், ஸ்கிரீன் ப்ளே, காட்சியமைப்புகள் என்று எதையும் அதற்கப்புறம் கேட்டிருக்க மாட்டார் போலிருக்கிறது ஆர்யா.

ஆனால் தனது ஜிம் பாடியை ச்சும்மா புடைத்துக் கொண்டு அவர் நிற்கும் போதெல்லாம், இந்த டைரக்டரை நம்பி அவர் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. ஆர்யாவின் உழைப்பெல்லாம், தீப்பெட்டி மேல் ஒட்டப்பட்ட வெறும் லேபிள் ஆகிப்போனதே என்கிற வருத்தம்தான் நமக்கு வருகிறது.

கேத்ரீன் தெரசாவுக்கு இருக்கிற அழகுக்கு அவர் நல்ல படங்களாக செலக்ட் பண்ணி நடித்தால், இன்னும் நாலைந்து வருஷத்துக்கு பச்சை பசேலென இருக்கலாம்! இருந்தாலும் இந்தப்படத்தில் அவரும், ஆர்யாவுடனான அவரது காதலும் மனசுக்குள் சாரலடிக்க விடுகிறது. நல்லவேளை… வில்லன் கோஷ்டி ஹீரோயினை கடத்தி வைத்துக் கொண்டு ஆர்யாவை அலற விடுகிற அநாவசியங்கள் இப்படத்தில் இல்லை. அதற்காகவே ஒரு நன்றி டைரக்டர்.

இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில், நகைச்சுவைக்கென்று இவர்கள் தேர்வு செய்திருப்பது ஆடுகளம் முருகதாஸ்சை. அவரும் முடிந்தவரை நம்மை எரிச்சலில் முக்கியெடுக்கிறார். போங்கய்யா… நீங்களும் உங்க ஆர்ட்டிஸ்ட் செலக்ஷ்னும்!

அந்த ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று உள் நுழைந்து கூட்டத்தை வளைக்கும் பணியில் ஒய்.ஜி.மகேந்திரனும் அவரது மகள் மதுவந்தியும். சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் ‘மகிந்த’ என்ற எழுத்துடன் பாதிவரை ஷாட் வைக்கப்பட்ட வேனிலிருந்து தரப்படும் இலவசங்கள் டைரக்டரின் இலங்கை பிரச்சனை பற்றிய அக்கறையை எடுத்துச் சொல்கிறது. அதே போல வில்லனாக வரும் ரேஞ்சரின் பெயர் கூட கருணா. அட…!

அந்த மலை கிராமத்தை விட்டு கீழே இறங்கவே இறங்கிப் பழக்கப்படாத அந்த இளைஞர்கள், அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான லாரிகளை எப்படி ஓட்டிக் கொண்டு போயிருக்க முடியும்? அவர்களுக்கு எப்படி டிரைவிங் தெரியும். இப்படி படம் முழுக்க நிறைய கேள்விகள். ஆனால் எதற்கும் பதில்தான் இல்லை.

அந்த கிளைமாக்ஸ் பிரமாண்டத்திற்காகவே இன்னொரு முறை படத்தை பார்க்கலாம். நூற்றுக்கணக்கான யானைகள் புடைசூழ, தன் அகன்ற தோள்களோடு ஆர்யா ஓடிவரும் அந்த காட்சி, ஆங்கில படங்களுக்கு இணையானது. எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு அழகுக்கு தனி பாராட்டுகள்.

இசை யுவன்சங்கர்ராஜா. பாடல்கள் அவ்வளவு மெச்சும்படி இல்லையே? நல்லவேளை பின்னணி இசையில் தன் பாராம்பரிய பெயரை தாங்கிப் பிடிக்கிறார் யுவன்.

பிரமாண்டத்திலும், பொருட் செலவிலும் வைத்த அக்கறையை ஸ்கிரீன் ப்ளே எழுதிய ஒரு குயர் பேப்பரில் காட்டியிருந்தால், மஞ்சப்பை ராகவாவின் இந்தப்படம் நெஞ்சப் பையை நிறைத்திருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.