கடுகு / விமர்சனம்

0

‘பார்த்தா கடுகு. பாய்ஞ்சா எருது’! இந்த ரெண்டே வரிகளில் அடங்கிவிடுகிற ஒரு நீதிக்கதையை, நேர்த்தியாகவும் நிஜமாகவும் சொல்ல முயல்கிறார் விஜய் மில்டன்! கடுகுக்காக இவர் தேடிக் கொண்டு வந்த மனுஷன், அந்த கேரக்டருக்குள் அப்படியே அச்சு அசலாக பொருந்திவிடுவதே இப்படத்தின் முதல் சக்சஸ். அதற்கப்புறம் தான் வைத்திருந்த அந்த சின்னக் கதைக்கு சிங்கார வண்ணம் தீட்ட ஆரம்பிக்கிற விஜய் மில்டன் காட்டுகிற வித்தைகள், ரசிகனை பரவசமூட்டுகிறதா, பல்லிளிக்க விடுகிறதா?

தரங்கம்பாடிக்கு மாற்றல் ஆகி வரும் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷுடன் வந்திறங்கும் சமையல்காரர்தான் புலிவேஷப் புகழ் ராஜகுமாரன். வந்த இடத்தில் தானுண்டு தன் சமையலுண்டு என்று இருக்கும் இவரையும் பேஸ்புக்கில் கவர்கிறாள் ஒருத்தி. அவளுக்குப் பின் இருக்கும் சோகம்… அந்த சோகத்தில் மிதக்கும் புலி. நடுவில் நடக்கும் படு பயங்கரமான இன்சிடென்ட். எல்லாம் சேர்ந்து அந்த புலிவேஷக் கலைஞனை நிஜப் புலியாக்க, நடுவில் சிக்கிய அந்த நபர் யார்? எதற்காக இந்த போர்? இதுதான் கடுகு படத்தின் ஜீவநாடி.

சமானியர்களின் வாழ்வை நரிகள் மேய்ந்தால், அந்த நரிகளை சும்மா விடாதே என்பதுதான் இந்தப்படத்தின் ஆகப்பெரிய அட்வைஸ்!

புலியின் வால் சைசுக்கு கூட இல்லாத ராஜகுமாரன், இப்படத்தில் புலி வேஷம் கட்டுகிற கலைஞன். இந்த முரண்பாடு முதலில் திகைக்க வைத்தாலும், அழகாக பேலன்ஸ் பண்ணுகிறது விஜய் மில்டனின் வசனங்களும், படத்தில் நிகழும் சூழ்நிலைகளும். ‘நான்லாம் ரொம்ப பாவங்க’ டைப் கதையல்லவா? கண்ணில் உள்வாங்கி, முகத்தில் கொப்பளித்திருக்கிறார் ராஜகுமாரன். தன் கையாலேயே பார்த்து பார்த்து சமைத்து பரிமாறியவருக்கு, அதே இன்ஸ் கொடுக்கும் அடி உதையும் அதற்கப்புறம் ஒருவேளை சாப்பாட்டுக்கு ஏங்கி, கிடைத்த சாப்பாட்டையும் மீனுக்கு போட்டுவிட்டு பட்டினியாக படுக்கும் அவனது சுரணையையும் அவ்வளவு ஆழமாக வெளிப்படுத்துகிறார் ராஜகுமாரன். இவருக்கும் பரத்திற்குமான அந்த பைட், எலியை யானையாக்கி யானையே சேனையாக்குகிறது. (பைட் மாஸ்டருக்கு ஒரு பலே)

இந்த கேரக்டரில் நடிப்பதற்கு எப்படிதான் பரத் ஒப்புக் கொண்டாரோ? மிகத் தெளிவான வில்லன் வேஷம்தான் அது. (கடைசி நேரத்தில் ‘ஐயோ பாவம்டா பரத்’ என்று நினைத்திருக்கலாம். வில்லன் இமேஜை மறைப்பது போல ஒரு பேண்டேஜை கட்டுகிறார் விஜய் மில்டன். ஸோ சேட்)

அனிருத் என்ற புனைப்பெயருடன் ராஜகுமாரனுடன் சேர்ந்து கொள்ளும் அந்த புதுமுக இளைஞர் பார்க்க விஜய் மில்டன் போலவே இருக்கிறாரே… என்று குழம்பும் அன்பர்களுக்கு ஒரு தகவல். அவர் மில்டனின் தம்பியாம். முதல் படத்திலேயே முழு மார்க் வாங்கியிருக்கிறார்.

ராதிகா பிரசித்தாவுக்கு ஸ்கூல் டீச்சர் வேஷம். அவரது பிளாஷ்பேக் மேட்டூர் டேம் நிரம்பி வழிகிற அளவுக்கு இருக்கிறது. நல்லவேளை… அதையெல்லாம் ஓவியமாக சொல்லி ஒரு இஞ்ச் சோகத்தை குறைத்தார் மில்டன். முகம் தெரியாத தோழியாக அறிமுகம் ஆகி, அப்படியே ரயிலில் பக்கத்து ஜன்னல் வழியாக ராஜகுமாரனின் கையை பிடிக்கும் அந்த காட்சி… அற்புதமான பொயட்டிக் சுச்சுவேஷன்! அதே ஸ்பரிசத்தை கொண்டு மீண்டும் ராஜகுமாரன் அடையாளம் காணும் அந்த இன்னொரு காட்சியும் அதே பொயட்டிக் பொக்கே.

இன்னொரு ஹீரோயின் சுபிஷாவுக்கு கூட்டத்தில் நின்று புன்னகைப்பதை விட பெரிய வேலையில்லை.

மினிஸ்டராக வரும் தாடி வெங்கட்டின் நடிப்பு ஆஹா. ஆனாலும் அந்த கேரக்டர் படு செயற்கை. அவ்வளவு பெரிய பள்ளிக்கூட ஆண்டுவிழாவில், மினிஸ்டர் தனியாக போய்… (யோவ். போங்கப்பா)

வசனங்களில் கோபத்தையும் குறும்பையும் இழையோட விடுகிறார் மில்டன். “எண்பதுக்கு பிறகு தொன்பதுன்னுதானே இருக்கணும்? ஏன் இல்ல? எட்டு நூறுக்கு பிறகுதான் தொண்ணூறு வரணும்” என்றெல்லாம் எப்படிதான் யோசித்தாரோ?

அனுப் சீல் என்ற புதிய இசையமைப்பாளர் பின்னணி இசையில் பிரசன்ட் சார் என்கிறார். பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ?

“தாளிச்சுருவேன் பார்த்துக்க…” என்று மிரட்டுகிற தலைப்புதான். ஆனால் தாலாட்டியிருக்கிறார் விஜய் மில்டன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

Leave A Reply

Your email address will not be published.