கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்! – டி சிவா அறிவிப்பு

0

‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

லிங்கா படத்தை திருச்சி – தஞ்சை பகுதியில் வெளியிட்ட சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“திருச்சி – தஞ்சை பகுதியில் லிங்கா படத்தை நான் வெளியிட்டு இருந்தாலும், சேலத்தை சேர்ந்த 7G பிலிம்ஸ் சிவா மட்டுமே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் கண்டிஷன் போடப்பட்டது. 6.5 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வசூலித்து தருவதாக ஒப்பந்தம் போட்ட சேலம் 7G சிவா திரையரங்குகளில் இருந்து 6.5 கோடி வசூலித்து விட்டு 5 கோடி 88 லட்சம் மட்டுமே செலுத்தினர். மீதி 62 லட்சத்தை செலுத்தவில்லை. சேலம் 7G சிவா தான் தற்போது கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட இருக்கிறார். சேலம் 7G சிவாவிடமிருந்து தனக்கு பணம் வர வேண்டும் என்றும் இந்த படம் வெளியானால் தனக்கு பணம் கிடைக்காமல் போய்விடும்” என்று சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆதாரங்களை பார்த்த நீதிபதி படத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, மதியம் நீதிபதி எம் எம் சுந்தரேஷ் அவர்களிடம் தன் தரப்பை மனுவாக அளித்ததோடு, இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

அதன் அடிப்படையில் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவே, தயாரிப்பாளர் சிவா தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா கூறுகையில், “வழக்கு விசாரணையே நாளைதான் நடைபெற உள்ளது. ஆனால் படத்தை முடக்க சிங்காரவேலன் தரப்பினர் பொய்யான செய்திகளை மீடியாக்கள் மூலம் பரப்புகிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது… இரு விநியோகஸ்தர்களுக்கான தகராறில் ஒரு தயாரிப்பாளரின் படத்தை முடக்க நினைப்பது எத்தனைப் பெரிய தவறு? திட்டமிட்டபடி படம் வெளியாகும்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.