ஆறு படத்துல ஹீரோ! ஆனால்? தீராத எரிச்சலில் கலையரசன்

0

‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகமான கலையரசனை அதற்கப்புறம் தானே தத்தெடுத்துக் கொண்டார் கபாலி புகழ் பா.ரஞ்சித்! மெட்ராஸ் படத்தில் இவருக்கு முக்கிய ரோல் கொடுத்தாரல்லவா? அதற்கப்புறம் பிய்த்துக் கொண்டது கலையரசன் மார்க்கெட்! இருந்தாலும் மெட்ராஸ் அளவுக்கு வேறு எந்தப்படமும் அவரை காப்பாற்றவில்லை. கடைசியாக வந்த ‘ராஜா மந்திரி’ கூட நல்லப்படம் என்று பெயரெடுத்ததே தவிர, கலையரசனுக்கு தம்படி பிரயோஜனம் தரவில்லை.

தற்போது ‘பட்டினப்பாக்கம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் கலையரசன், இந்தப்படத்திற்காக கொடுத்த கால்ஷீட் வெறும் 16 நாட்கள்தான். “ஆனால் படம் முழுக்க அவர் இருப்பார். இவ்வளவு குறுகிய காலத்தில் மளமளவென தன் சீன்களை நடித்துக் கொடுத்த பிரமாதமான ஆர்ட்டிஸ்ட் அவர்” என்று நெஞ்சார புகழ்கிறார் டைரக்டர் ஜெயதேவ். இவர் நடிகை பாவனாவின் ஒரிஜனல் தம்பி! (அப்படின்னா டூப்ளிகேட் தம்பின்னு இருப்பாங்களா என்று கேட்கக் கூடாது. சினிமாவில் யார் வெற்றியடைந்தாலும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பெரியப்பா, சித்தப்பா என்று டூப்ளிகேட்டுகள் கூடி கூடி தின்பார்கள். அதனால்தான்…)

குறுகிய காலத்தில் பெரும் பணக்காரன் ஆகிவிட நினைக்கும் ஒருவன் போடும் திட்டம் எப்படியெல்லாம் பலரையும் சிக்கலுக்குள்ளாக்குகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் ஜெயதேவ். இந்தப்படமும் மிஷ்கின் ஸ்டைலிலேயே இருக்கும் என்று நம்புவோம். அந்த நம்பிக்கையை கூட்டும் விதத்தில், நான் இந்தப்படத்துக்காக ரொம்பவே காத்திருக்கேன் என்றார் கலையரசன். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனஸ்வரா.

சரி கலையரசனின் எரிச்சல் என்ன என்று பார்க்கலாமா?

ஆறு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார் கலையரசன். அந்த ஆறு படங்களுமே அவருக்கு ஆறாத ரணத்தை கொடுத்துவிட்டதாம். ஏன்? சம்பள பாக்கி! அதுக்காக நான் பணத்தை கொடுத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னதில்லை சார். கொடுத்தால் வாங்கிப்பேன். இல்லேன்னா… போகட்டும்னு இருந்திருவேன். ஏன் பேசிய பணத்தை கொடுக்க மாட்டேங்கிறாங்க என்கிற வருத்தம் மட்டும் நிறைய இருக்கு என்றார். (கபாலியில் இவர் கெஸ்ட் ரோல்தானே? அதனால் அந்த படத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்)

யப்பா… பழைய பாக்கிக் காரர்களே. கலையரசனுக்கு சேர வேண்டியதை செல்லாத நோட்டாக கொடுத்தாவது கணத்தை முடிஞ்சுருக்கங்கப்பா!

Leave A Reply

Your email address will not be published.