வெறும் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம்தானா? கமல் ஆதங்கப்பட்டது ஏன்?

0

பாரதியார் பூணூலை அறுத்துப் போட்ட கதையாக பல விஷயங்களை அறுத்துப் போட்டு அலற வைத்துக் கொண்டிருக்கிறார் கமல். அதில் ஒன்று உடல் தானம்! நடிகர்கள்… அதுவும் கமல் மாதிரியான கல்வெட்டு நடிகர்கள் தங்கள் இறப்புக்கு பின்னும் யாராவது தங்க பஸ்பம் ஊட்டிவிட்டா தேவலாம் என்பது போலவே நடந்து கொள்வார்கள். ஆனால் துணிச்சலாக தன் உடலை தானம் செய்து சிலரது விமர்சனத்திற்கும் ஆளானார் அவர். (யாருங்க விமர்சனம் பண்ணினாங்க என்றெல்லாம் கேட்பவர்களுக்கு உட் குழப்பம் தெரிந்திருக்க நியாயமில்லை)

அப்படிப்பட்ட கமல்தான், வெறும் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம்தானா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பிரபல ஹீரோவான கமல், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பத்திரிகையாளராக இருக்கும் தேவராஜின் செயல் குறித்து வியப்படைந்ததுடன், அவரை தன் வீட்டுக்கே வரவழைத்து பாராட்டியும் இருக்கிறார். அப்படியென்ன செய்துவிட்டார் தேவராஜ். வேறொன்றுமில்லை. கமலின் அடியொற்றி அவரைப்போலவே தன் உடலையும் தானம் செய்துவிட்டார். தனது பிறந்த நாளில் அவர் செய்த இந்த காரியத்தை பாராட்டினாராம் கமல்.

அப்போது உடல்தான சீரியலின் படி தனது எண் என்னவென்று சொல்லியிருக்கிறார் தேவராஜ். “ஆயிரத்து ஐநூற்று அறுபதாவது நபர் நான்தான்” என்று இவர் சொல்ல…. “ஏழு கோடி பேருக்கு மேல் வாழுற தமிழ்நாட்டில் உடல் தானம் செய்தவர்களின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்து சொச்சம்தானா?” என்று வருந்தியிருக்கிறார் கமல்.

‘உடல் மண்ணுக்கு… உயிர் தலைவனுக்கு’ என்று கொடி பிடிக்கும் குப்புற புத்திகள், ‘உடல் மருத்துவமனைக்கு. உயிர் தலைவனுக்கு’ என்று குரல் கொடுத்தால் ஒருவேளை இந்த எண்ணிக்கை லட்சங்களை தாண்டி கோடிகளை தொடுமோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.