கட்டாய ரெஸ்ட்! அதையும் பணமாக்கினார் கமல்! எப்படி? எப்படி? நடந்தது எப்படி?
பிச்சைக்காரன் கையெழுத்துக்கும் பேங்க் மேனேஜர் கையெழுத்துக்குமான வித்தியாசம்தான் நடிகர்களின் சம்பளத்திற்கும், அன்றாடக் கூலிகளின் சம்பளத்திற்குமான வித்தியாசம். இது மற்றவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ? சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கு நன்றாகவே புரியும். கால்ஷீட் வேஸ்ட் ஆவுது. அடுத்த படத்துக்கு போகணும் என்று அரித்துக் கொண்டேயிருப்பார்கள். வடிவேலு மாதிரியான நடிகர்கள் தினக்கூலியாக பத்து லட்சத்தை தாண்டிய கதையெல்லாம் இன்டஸ்ட்ரி அறிந்ததுதானே? அதிலும் இந்த சந்தானம், வடிவேலையே தாண்டி தினக்கூலியாக இருபது லட்சம் வரை எகிறியதெல்லாம் விநோதம் மட்டுமல்ல… வேடிக்கை!
இவர்களே இப்படியென்றால் கமல் மாதிரியான திமிங்கலங்களின் சம்பளக் கணக்கு என்னவாக இருக்கும்? அவ்வளவையும் அடித்து நொறுக்கிவிட்டது அந்த விபத்து. கால் முறிந்து மருத்துவமனையில் பல வாரங்கள் ஓய்வெடுக்கும்படி ஆனது கமலுக்கு. அதற்கப்புறம் வீட்டுக்கு வந்தவரை இன்னும் துரத்திக் கொண்டிருக்கிறது ட்ரிட்மென்ட். அவர் மீண்டும் நடிக்கப் போக வேண்டும் என்றால், அதற்கு சில மாதங்கள் பிடிக்கும் போல தெரிகிறது. நடுவில் சும்மாயிருந்தால்… ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லாஸ் அல்லவா?
அதற்குதான் சரியான ஒரு வேலை செய்திருக்கிறார் கமல். பல வருடங்களாகவே அவரை வளைத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சியின் சீரியல் ஒன்றில் கமிட் ஆகிவிட்டார். வடக்கில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி பெருமையை தேடிக் கொண்ட ஸ்டார் தொலைக்காட்சி, அதே ஸ்டைலை விஜய் டி.வி யில் விதைத்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்க திட்டமிட்டது. அதில்தான் கமல் தோன்றுவதற்கு சம்மதித்திருக்கிறாராம்.
இரண்டு நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட்ட போத்தீஸ் விளம்பரத்திற்கே பத்து கோடி சம்பளமாக வாங்கிய கமல், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எத்தனை கோடி பேசியிருப்பாரோ?
வரவர கோடீஸ்வரர்களின் நிழல் கூட தங்கக் கலரில் ஜொலிக்கும் போலிருக்கிறது!
ஆனாலும், நேரத்தை வெட்டியாக கழிக்காமல், ஒவ்வொரு நிமிஷத்தையும் வேலையாகவும் அதற்கன கூலியாகவும் நகர்த்துகிற யுக்தியை கையாண்ட கமலை பாராட்டுவதுதான் உத்தமம்!