தமிழால அடிச்சுப்புடுவேன் பார்த்துக்க! கமல் ட்விட்டும், கதி கலங்கும் அரசியல் மார்க்கெட்டும்!

1

தமிழ் இலக்கியத்தையெல்லாம் அள்ளிப் போட்டு பிசைஞ்சு ஆற அமர உட்கார்ந்து செஞ்சாலும், அப்படியொரு சென்ட்டென்ஸ் அமைஞ்சுருக்காது. அது… ‘சேரத் தூக்கி அடிச்சுப்புடுவேன் பார்த்துக்க’தான்! விஜயகாந்தின் அந்த வெள்ளந்தியான மிரட்டலை, போட்டு போட்டே சேனல் டி.ஆர்.பியை ஏற்றியவர்களுக்கு, நேற்று கமலின் ட்விட் ‘அதுக்கும் மேல… அதுக்கும் மேல…’ ஆனது!

தனக்கேயுரிய புரியாத தமிழில் ‘புரிஞ்சவன் புரிஞ்சுக்க. புரியலேன்னா பொத்திக்க’ ரகத்தோடு அமைந்த அந்த ட்விட், சினிமா மார்க்கெட்டை மட்டுமல்ல, அரசியல் மார்க்கெட்டையும் ராத் தூக்கம் இல்லாமல் ஆக்கியது. சில அமைச்சர்கள் சக அமைச்சர்களுக்கு போன் போட்டு, “என்னய்யா சொல்ல வர்றாரு அந்தாளு? நமக்கு ஒண்ணும் பீஸ் புடுங்கற மாதிரியில்லையே?” என்று கவலைப்பட்டார்களாம். சிலர் தமிழறிஞர் பெருமக்களுக்கும், பட்டிமன்ற நாவலர்களுக்கும் போன் போட்டு சந்தேகம் கேட்க, “நீங்க வெறும் தாஸ்சா, இல்ல லாட் லபக்கு தாஸ்சா?” ரேஞ்சுக்கு எதிர்முனைகள் அதிர்ச்சியானதாகவும் தெரிய வருகிறது.

அறிவு நிறைந்த(?) அமைச்சர்களே இப்படி தடுமாறினால் அப்பாவி ரசிகர்கள் என்னாவார்கள்? “தலைவன் என்னவோ சொல்ல வர்றாப்ல, ஆனா நமக்குதான் ஒண்ணிமே ப்பிரிய மாட்டேங்குது” என்று கவலையால் நசுங்கினார்கள்.

“அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்”

இதுதான் கமல் போட்ட ட்விட். முதல் இடி அடங்குவதற்குள் தலைவன் அடுத்த இடியை இறக்க, உலகம் இன்னும் கொடூர தேடலுக்கு ஆளானது.

இடித்துரைப்போம்
யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம்
மனதளவில் உம்போல்
யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம்
அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழன் என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன்

நான்

இதுதான் அந்த ரெண்டாவது ட்விட். நல்லவேளை… முதல் ட்விட்டளவுக்கு இது மோசமில்லை ரகம். ஓரளவுக்கு புரிந்தது. இருந்தாலும், இந்த இரண்டாவது செய்யுள் மூலம் உலகம் அறிந்து கொள்ளத் தவறியதை நாளை ஆங்கில பத்திரிகையை பார்த்து தெரிந்து கொள்ள சொல்லியிருக்கிறார் கமல். அதுதான் இன்னும் அதிர்ச்சி.

ஆங்கிலத்தில் புரியாததை தமிழில் புரிய வைப்பதுதான் வழக்கம். இங்கு தமிழில் புரியாததை ஆங்கிலத்தில் புரிய வைக்க முயலும் கமல், எல்லாரையும் இங்கிலீஷ் காரனாக்கிட்டுதான் ஓய்வார் போல!

கமலை சீண்டிய அந்த முதல் அரசியல்வாதி யாரோ… அவருக்கே போய் சேரட்டும், புரியா ஜனங்களின் அம்புட்டு சாபமும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Sundar says

    “இங்கு தமிழில் புரியாததை ஆங்கிலத்தில் புரிய வைக்க முயலும் கமல், எல்லாரையும் இங்கிலீஷ் காரனாக்கிட்டுதான் ஓய்வார் போல!”

    தமிழ் புரியாமல் ஆங்கில பேப்பரை பார்த்து புரிவதற்கு நீங்களும் நானும் தான் வெட்கப்படவேண்டும். அதற்கு அவர் என்னமோ எல்லாரையும் இங்கிலீஷ் காரனா மாற்றுவது போல சொல்லுறீங்களே?

Leave A Reply

Your email address will not be published.