கன்னட ஹீரோவுக்கு தமிழ் பட ஆசை! நடிகன்டா…!

0

பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிராவல் ஆனதையே ஒரு படமாக எடுத்தால் கூட, 100 நாளைக்கு ஓடும் போலிருக்கும்! அவ்வளவு அவஸ்தைப்பட்டு சென்னைக்கு வந்தது ஒரு சினிமாக்குழு. (எல்லாம் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் நடத்தும் ஆர்ப்பாட்டம், மற்றும் பந்த் பஞ்சாயத்துகள்தான்) இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவர்கள் எடுக்கப் போகும் படமே கூட, ‘ரோட் சைட் மூவி’ என்று சொல்லப்படும் டிராவல் பட வரிசையில் அமைந்ததுதான்!

சஞ்சாரி விஜய் என்ற கன்னட ஹீரோ நடிக்கவிருக்கும் இப்படத்தின் பெயர் ‘பீரங்கிபுரம்’. படத்தை இயக்குபவர் திருத்தணியை சேர்ந்த ஜான் ஜானி ஜனார்த்தன். “உங்க பேரே பட தலைப்பு போல இருக்கே?” என்று வியந்தார், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை அறிமுகம் செய்ய வந்த செல்வி நமீதா! ஹீரோ சஞ்சாரி விஜய்யை பற்றி முதலில் சொல்லிவிட்டால், இந்த படத்தின் மீது உங்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படலாம்.

2015 ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியவர் இவர். சுமார் முப்பது வயதுள்ள இவரை, படத்தில் அறுபது வயது பெரியவராக காட்டுகிறாராம் ஜான் ஜானி ஜனார்த்தன். நானு அவனுள்ள அவளு என்றொரு படத்தில் திருநங்கையாக நடித்திருக்கும் இவர், அதற்காக குவித்த விருதுகள் சொல்லில் அடங்காது என்று புளகாங்கிதப்படுகிறார் இந்த ஜா.ஜா.ஜ!

தமிழ்சினிமாவில் முதன் முறையாக ராஜஸ்தான் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகதான் இருக்கப் போகிறது என்று பீரங்கிபுரம் பற்றி பெருமைப்படுகிற இயக்குனர், “இப்படத்தில் நடிக்கிறவங்க வேணும்னா கன்னடத்தை சேர்ந்தவங்களா இருக்கலாம். ஆனால் எனக்கு தமிழ்ல படம் பண்ணனும்ங்கறதுதான் ஆசை. அதனால்தான் இந்தப்படத்தை தமிழ், கன்னடம், மலையாளம்னு மூன்று லாங்குவேஜ்ல எடுக்குறோம்” என்றார்.

இந்த சினிமா நிச்சயம் பேசப்படும் என்பதற்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லலாம். அது? யாரோ நடிக்கவும் பணம் போடவும் ஆள் கிடைச்சுட்டாங்க என்றதும் நேராக ஷுட்டிங் கிளம்பிவிடாமல், முன் தயாரிப்பு பணிக்கே ஆறு மாதங்களாக ராப்பகல் பாராமல் தயாராகியிருக்கிறார் ஜான் ஜானி ஜனார்த்தன்!

ஆவலை தூண்ட்றீங்களேப்பா!

Leave A Reply

Your email address will not be published.