காற்றின் மொழி / விமர்சனம்

1

அநேக பெண்களின் ‘கடுப்ப’ங்கரையே, அடுப்பங்கரைதான்! இந்த ‘புகைச்சல்’ மனங்களுக்கு ஒரு புல்லாங்குழல் பீட் போட்டால், அதுதான் ‘காற்றின் மொழி’! ‘என்னால முடியும்’ என்ற மந்திரச் சொல்லை, கிடைக்கிற இடத்திலெல்லாம் பயன் படுத்துங்கள். வெற்றி… உங்கள் வீட்டு வாசலில் என்கிற தன்னம்பிக்கை தத்துவத்தை படு ஸ்மார்ட்டாக சொல்கிறது ராதாமோகனின் திரைக்கதை! கூடவே பொன்.பார்த்திபனின் வசனங்களும் வலு சேர்ப்பதால், பீச்சில் காற்று வாங்கிய நிம்மதியோடு வெளியே வருகிறோம். சாரை சாரையாக வேலைக்கு செல்லும் பெண்களை புத்தம் புதுசாக பார்க்கிறது மனசும் கண்களும்!

அளவான குடும்பம், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அக்காக்கள் என்று சந்தோஷமாக நாட்கள் நகர்ந்தாலும், வேலைக்கு போகணும் என்கிற ஆசை அரித்துக் கொண்டேயிருக்கிறது ஜோதிகாவுக்கு. கரண்ட் பில் கட்டப் போவதே கிச்சனை விட்டு வெளியே வருவதற்கான சுதந்திர தருணம் என்று சந்தோஷப்படுகிற அவருக்கு, ஹலோ எப்.எம்.ல் ரேடியோ ஜாக்கி வேலையே கிடைக்கிறது. விடுவாரா? ஹல்ல்லோவ்… என்று ஹஸ்கி வாய்சில் அழைத்து, ‘நான் மது பேசுறேன்’ என்று துவங்குகிற ஜோவுக்கு, அதே நிகழ்ச்சியால் அநேக இடைஞ்சல். குடும்பமே குதூகலம் இழக்கிறது. நிலைமை முற்றிய பின் வேலையை விட்டாரா, தொடர்ந்தாரா? கிளைமாக்ஸ்!

நிஜ வாழ்விலும் குடும்ப தலைவியாகிவிட்ட ஜோதிகாவுக்கு இதுபோன்ற கேரக்டர்கள் அல்வா துண்டு! அதே துள்ளல், அதே புத்துணர்ச்சி. ஒற்றை ஆளாக நின்று சாதிக்கிறார் மனுஷி! ராத்திரி பத்தரை மணிக்கு ஹஸ்கி வாய்சில் நேயர்களுடன் உரையாடுகிற நிமிஷங்கள் அவை! ஏ-டா கூடமாக பேச ஆரம்பிக்கும் ஆண்களை ஒரு மனோதத்துவ டாக்டரின் பக்குவத்தோடு அணுகுகிற ஜோ, பேசுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் தத்துவ தலகாணி. குறிப்பாக ரயில் டிரைவரின் கேள்விக்கு ஜோ அளிக்கும் பதில். (ஓ… இப்படியொரு விஷயம் இருக்கான்னு நமக்கே தோணுகிற நேரம் அது) ஜோதிகாவை மட்டுமல்ல, ஒரு ரேடியோ ஸ்டேஷன் இயங்குகிற விதத்தையும் வெகுஜனம் வெகுவாக ரசிக்கும்.

ஹீரோயினையே சுற்றி சுற்றி வருகிற ஸ்கிரிப்ட்டில், விதார்த்துக்கு என்ன வேலை வந்துவிடப் போகிறது? நமக்கு தோன்றியது அவருக்கும் தோன்றியிருக்கலாம். எலி பிடிக்கிற பூனை போல காத்திருந்து பிடிக்கிறார் சில காட்சிகளை. போனில் ஜோதிகாவுடன் பேசுகிற அந்த தருணம்… கேட்ச் பண்ணிட்டீங்க விதார்த்!

சுமார் அறுபது பேர் வேலை பார்க்கிற ஒரு நிறுவனத்தை, தன் கட் அண்ட் ரைட் கம்பீரத்தால் கையாள்கிற ஆபிசர் கேரக்டரில் லட்சுமி மஞ்சு. கேரக்டர் தேர்வுக்கு தனியா ரூம் போட்டு யோசித்தார்களோ என்னவோ? பத்துப் பொருத்தமும் பச்சக் என்று பொருந்தியிருக்கிறது அவருக்கு!

அப்புறம், ராதாமோகன் படங்களுக்காகவே பிறந்த ரெகுலர் நடிகர்கள். குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா என்று நீள்கிற பட்டியலில், பாஸு பின்னிட்டார். கடுகடு பூனை ஒரே நாளில் உறவுப் பூனையாகி ஒவ்வொருவருக்கும் வணக்கம் வைக்கிற போது மனசு நிறைகிறது. ‘நதியெங்கே போகிறது… கடலைத் தேடி…’ பாடல் கூட எவ்வளவு பொருத்தம், 96 படத்தில் வரும் ‘யமுனை ஆற்றிலே’ போல!

கொஞ்ச நேரமே வருகிறார் மயில்சாமி. மயிலு மயிலுதான்!

படம் நெடுகிலும் சென்ட் அடித்தது போல கலகலப்பு வசனங்கள். ஸ்பெஷல் பாராட்டுகள் பொன்.பார்த்திபன். எக்சாம்பிள்- ‘ஹனிமூன் நேரத்துல ஒன்பது மணிக்கு ரூம் பாய் வந்து டி.வி. ரிப்பேரான்னு கேட்டதுக்கு அந்த குதி குதிச்சே?’ ஜோதிகா கேட்க, ‘அன்னைக்கு நீ புதுசு. டி.வி பழசு’ என்று என்று விதார்த் சொல்லும் அந்த பதில் ஒன்று போதும்!

ஆங்… ஒரு காட்சியில் சிம்பு வருகிறார். ‘லேட்டா வந்ததுக்காக எங்கிட்ட ஸாரி கேட்ட ஒரே ஆள் நீங்கதான்’ என்று ஜோதிகாவிடம் அவர் கேட்பதை புரிந்து கொண்டு கைதட்டுகிறது தியேட்டர்.

ஏ.எச்.காசிஃப் இசையில் பின்னணி இசை அழகு. (இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மைத்துனர்) பொண்டாட்டி சாங் பென்ட்டாஸ்டிக்! ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலை அப்படியே இறக்கி வைத்திருப்பதால், இசையமைப்பாளருக்கு வேலை கம்மி. நமக்கும் என்டர்டெயினிங்! மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் எம்.எஸ்.பாஸ்கர் கூட அழகாக இருக்கிறார்(?!) ஜோதிகாவுக்கு கேட்கணுமா?

டிஸ்கரேஜ் செய்கிற வாய்களுக்கெல்லாம் ‘டிஞ்சர்’ தெளித்திருக்கிறார் ராதாமோகன்.

‘காற்றின் மொழி’ கலகலப்பு மட்டுமல்ல, கிச்சனுக்குள் சிறை பட்டிருக்கும் ஒட்டுமொத்த பெண்களுக்குமான சித்த வைத்தியம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Steadymoves.org says

    Great article.

Leave A Reply

Your email address will not be published.