கட்டப்பாவ காணோம் /விமர்சனம்

0

“ஆட்டை நடிக்க வச்சாய்ங்க, மாட்டை நடிக்க வச்சாய்ங்க. மீனையும் நடிக்க வச்சுருக்கானுங்களாம்ல?” என்று புல் டவுட்டோடு உள்ளே போகிற அத்தனை பேரும், அதே டவுட்டுடன் வெளியே வந்தால், அதுதான் ‘கட்டப்பாவ காணோம்’! மைசூருக்கும் மைசூர் போண்டாவுக்கும் இருக்கிற சம்பந்தம்தான், இப்படத்தில் மீனுக்கும் அதன் நடிப்புக்கும்! (சிஜி செலவுலயாவது மீனை பேச வச்சுருக்கலாம்) ஆனால், தலைப்புக்கும் படத்திற்கும் சர்வ பொருத்தம்டோய்… காணாமல் போன ஒரு, தொட்டி மீனை தேடி வெட்டி அலைச்சலுக்கு ஆளாகும் ஒரு கும்பலின் கதைதான் இது.

நார்த் மெட்ராஸ் ரவுடி மைம் கோபி ஆசையாக வளர்க்கும் வாஸ்து மீன் திடீரென திருட்டுப் போகிறது. ‘அவ்ளோதான் அதிர்ஷ்டம். போச்சு போச்சு எல்லாம் போச்சு’ என்று கதறும் அவர் அந்த மீனைத் தேடி ஒரு பக்கம் அலைந்து திரிய… இன்னொரு பக்கம் அந்த மீன், புதுமண தம்பதிகளான சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் வந்து சேர்கிறது. அது வந்த கொஞ்ச நாளிலேயே அந்த வீட்டுக்கு வரும் ரவுடிக்கூட்டம் ஒன்று தம்பதிகளை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி இம்சை கொடுக்க…. மீன் வந்திச்சு. அதிர்ஷ்டம் வரலையே என்று கவலைப்படும் தம்பதிக்கு கிடைக்கும் பரிசென்ன? பண்டல் என்ன? மிக நீண்ட இழுபறிக்குப் பின் ஆறுதல் தரும் க்ளைமாக்ஸ்…

படத்தின் ஹீரோ சிபிராஜ் இந்தப்படத்தின் மூலம் அடைந்த லாப நஷ்டம் என்ன என்று கணக்குப் போட்டால், ஒன்றிரண்டு சீன்களில் ஹீரோயின் ஐஸ்வர்யா மீது விழுந்து புரண்டதை தவிர வேறொன்றும் இருக்கப் போவதில்லை. இடைவேளைக்கு சற்று முன்புதான் கதையே ஆரம்பிக்கிறது. அதற்கு முன் வந்த சிபிராஜின் காதல் எபிசோடை தனியாக நறுக்கினால், இப்படத்தின் போக்குக்கும் அதற்கும் ஒரு கனெக்ஷனும் இல்லை.

கட்டப்பாவின் ஒரே ப்ளசன்ட் ஐஸ்வர்யா ராஜேஷ்தான். அழகு, நடிப்பு, என்று அத்தனை ஆங்கிள்களிலும் கொள்ளை கொ(ல்)ள்கிறார். ஐஸ்வர்யா நடிக்கும் படங்களிலெல்லாம் கதைன்னு ஒண்ணு கெட்டி உருண்டை போலிருக்குமே… அது எங்கங்க பாஸ்?

மீனுக்கு ஆசைப்பட்டு, அது கிடைக்காமல் போவதை தன் கண்களில் வழியும் ஏக்கத்தால் நிரூபிக்கிறாள் குழந்தை மோனிகா. அருமையான நடிப்பு. குழந்தைகளை நடிக்க வைப்பதுதான் உலகத்திலேயே கஷ்டம். அதை மிக மிக சிறப்பாக கடந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மணி சேயோன். இந்த குழந்தைக்கும் மீனுக்குமான கதையை டெவலப் செய்திருந்தால் கூட, வலை முழுக்க பாராட்டுகளை அள்ளியிருக்கலாம். பட்… பெரியவர்களுக்கும் சேராமல், குழந்தைகளுக்கும் சேராமல், தத்தளிக்கிறது படம்.

பொசுக்கென கவர்கிற இன்னொருவர் காளி வெங்கட். மனுஷன் வாயை திறந்தால் டபுள் மீனிங் தெறிக்கிறது. அதை அந்த அப்பாவி முகம், ஆத்திரம் கொள்ள வைக்காமல் தடுக்கிறது. படம் முழுக்க நீளும் ஏ சமாச்சாரத்தை ரசிக்க வேண்டுமானால் ஒரு யூத் கூட்டம் உள்ளே வரலாம்.

படத்தில் மிக மிக சிறிதான அளவே வருகிறார் யோகி பாபு. அப்படியே சீல் அடித்த மாதிரி ஜிவ்வென கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டு வந்த வேகத்தில் பறந்துவிடுகிறார். (இனிமே படத்துல பத்து சீன் கூட இல்லேன்னா கால்ஷீட் இல்லேன்னு சொல்லிடுங்க தல. ஏமாற்றமா இருக்குல்ல?)

சின்ன சின்ன விஷயங்களில் நிறைய யோசித்திருக்கிறார் டைரக்டர். படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுக்கும் மீன்களின் பெயரையே சூட்டியிருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு பெயிண்ட் அடிச்சவர், கதவு வராண்டாவெல்லாம் கண்டுக்காம வுட்டுட்டாரேங்கறதுதான் ஷாக்.

சந்தோஷ் தயாநிதியின் இசை ஓ.கே. ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு ஆஹா.

வாசனையே இல்லாத வஞ்சரம். கைதட்ட வேணும் நெஞ்சுரம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.