கவண் /விமர்சனம்

2

சேனல் உலகத்தின் கோணல் மானல்கள்தான் கவண்! முன்னாள் பத்திரிகையாளர் கே.வி.ஆனந்த், ஏற்கனவே வாயார மனசார ருசித்த பாலை இன்னும் கொஞ்சம் சர்க்கரை ஏலக்காய் போட்டு உறிஞ்சி துப்பியிருக்கிறார். சேனல் முதலாளிகளே… முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இந்தப்படத்தின் கதை வசனத்தில் பங்கெடுத்திருக்கும் கபிலன் வைரமுத்துவும் ஒரு சேனலில் பணியாற்றியவர் என்ற விதத்தில், இண்டு இடுக்கு அழுக்குகளை கூட இழுத்து வந்து பந்தி பரப்பியிருப்பதால், இனி அவரவர் கையிலிருக்கிற ரிமோட்டிற்கும் உயிர் வரக்கூடும்!

ஒரு சேனலில் பணியாற்றும் விஜய் சேதுபதி, மடோனா, ஜெகன் உள்ளிட்ட நண்பர்கள் அந்த சேனலுக்காக உயிரை கொடுத்து உழைக்கிறார்கள். டி.ஆர்.பியை ஏற்றுவதற்காக சேனல் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, பிரபல அரசியல்வாதி போஸ் வெங்கட்டை பேட்டியெடுக்க தயாராகிறார் விஜய் சேதுபதி. முன்னாள் சாராய கேஸ் ரவுடியான இவரது ஜாதகத்தை அலசி ஆராய்ந்து வைத்திருக்கும் சேதுபதி படு பயங்கரமான கிடுக்கிப்பிடி கேள்விகளோடு அமர… ‘கேள்விய மாத்து. சொகுசா தடவிக் கொடு’ என்கிறது சேனல் நிர்வாகம். ஆனாலும் விடாமல் முரட்டுக் கேள்விகளால் வெங்கட்டை புரட்டி எடுக்கிறார் விஜய் சேதுபதி. இந்த லைவ் நிகழ்ச்சி நாடெங்கிலும் கைத்தட்டல்களை வாங்கிக் கொடுக்க… சட்டென்று கமர்ஷியல் பிரேக் விடும் நிர்வாகம் சிலபல கோல்மால்கள் உதவியுடன் அதே விஜய் சேதுபதியின் உருவத்தை மேட்ச் பண்ணி பேட்டியை ஐஸ் ஆக்குகிறது. அப்புறமென்ன?

சேனலை விட்டு வெளியே வரும் நண்பர்கள் கோஷ்டி, டி.ராஜேந்தர் நடத்தும் பொட்டிக்கடை சேனல் ஒன்றில் தஞ்சம் புகுகிறார்கள். அங்கு போகும் இவர்களால் முன்னாள் சேனலின் முகத்திரை கிழிவதுதான் முழு படமும். தொழிற்சாலை கழிவு, தீவிரவாத முழக்கம், போராட்டப் பெண் கற்பழிப்பு என சிற்சில ஜிகிர்தண்டா(ல்)கள் எடுத்து சுவாரஸ்யத்தை தக்க வைத்தாலும், இரண்டே முக்கால் மணி நேரத்திற்கும் மேல் படம் ஓடுவதால், ‘ஙே’ என விழிக்கிறான் ரசிகன். (ஓவர்டோஸ் உடம்புக்கு ஆகல கே.வி.ஆனந்த்)

விஜய் சேதுபதியும் மடோனாவும் சேனலுக்கு வருவதற்கு முன்பே லவ்வர்ஸ் என்பதும், அந்த லவ் பிரேக்கப் ஆவதற்கான காரணமும் பெரிய அழுத்தமில்லை என்றாலும், மடோனாவின் சுபாவத்தை நிமிஷத்திற்கு ஒருமுறை விஜய் சேதுபதியின் கன்னம் பழுக்க பழுக்க காட்டுகிறார் டைரக்டர். அவ்வளவு பெரிய நடிகர். கன்னத்தில் அறைவாங்கவும், சமயத்தில் மடோனா கையில் செருப்பெடுத்துக் காட்டுவதையும் ஈகோ இல்லாமல் பொருத்துக் கொள்கிறார். கிரேட் விஜய் சேதுபதி!

ஆனால் அதே விஜய் சேதுபதி தன்னை நம்பி ஒரு சினிமா மார்க்கெட் இருக்கிறது, ரசிகர்கள் இருக்கிறார்கள், பல கோடி ரூபாய் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்கிற துளி அக்கறையும் இல்லாமல் தக்காளி மூட்டை போல தின்று கொழுத்துக் கிடப்பதுதான் வேதனை! பருத்த தொந்தியும் பல்கி கன்னங்களுமாக சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கிற குடிகாரனை விடவும் கேவலமாக இருக்கிறார். (இனிமேலாவது அலர்ட் ஆகுங்க தலைவா)

முன் கோப மடோனாவுக்கு சிறப்பான ரோல். தன் பேச்சை கேட்காத விஜய் சேதுபதியிடம் அதற்கப்புறம் அவரது நியாயம் புரிந்து பாராட்டுகிற காட்சியும் அந்த ஸ்பெஷல் கிஸ்சும் சிறப்………பு!

தன் குறள் டி.வி மூலம் டி.ராஜேந்தர் யு ட்யூப்பில் பண்ணிய சேட்டைகளின் ரிப்பீட்டாகதான் இருக்கிறது அவரது பர்பாமென்ஸ். அவரை அப்படியே பட்டி பார்க்காமல், பதப்படுத்தாமல் கொண்டு வந்து ஸ்கிரினில் விட்டதால் ரசிக்க வேண்டிய பல காட்சிகள் தேமே என்று நகர்கிறது. பல கோடி ரூபாய் பேரத்தையே அசால்ட்டாக வேண்டாம் என்று மறுக்கும் ஒரு லட்சியவாதி, கேவலம்… பஜனை லேகியம் விற்பது போல காட்சி படுத்தியிருப்பது அந்த கேரக்டரையே குழி தோண்டி புதைத்துவிடுகிறது.

கே.வி.ஆனந்த் படங்களில் கட்டாயம் நண்டு ஜெகன் இருப்பார் என்பது ஜனங்களுக்கு மனப்பாடமாக தெரிந்துவிட்டால், அதைவிட ஆபத்து வேறொன்றும் இல்லை. அடுத்தடுத்த படங்களிலாவது தனது கூட்டாளி மனப்பான்மையை கே.வி.ஆனந்த் மாற்றிக் கொண்டால், ‘ஜெகனால் எரிச்சலடைவோர் சங்கம்’ மன்னிக்கும்.

படத்தின் மெயின் வில்லன் ஆகாஷ்தீப், கோட் சூட் போட்டிருக்கிற கோமாளியாக தெரிகிறாரே தவிர, வில்லனுக்குரிய ஒரு மிரட்டலும் இல்லை.

ஒரு லோக்கல் அரசியல்வாதியாக பாடி லாங்குவேஜிலும், வசன உச்சரிப்பிலும் மிரட்டியிருக்கிறார் போஸ்வெங்கட். விக்ராந்த்தும் இருக்கிறார். கொடுத்தவரைக்கும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா இசையில் பாடல்கள் எதுவும் பிரயோஜனம் இல்லை. ஆனால் பின்னணி இசை மிரட்டுகிறது. கே.வி.ஆனந்த் படங்களில் ஒளிப்பதிவு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்தப்படத்தில் அதுவும் மிஸ்சிங்.

இவ்வளவு ஓட்டை உடைசல்கள் இருந்தும், திறமையான திரைக்கதை யுக்தியால் ரேஸ் வேகம் காட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பல இடங்களில் வசனங்களே ஒரு தன்னம்பிக்கை புத்தகம் படித்த உணர்வை தருவதால் படம் பார்க்கும் இளைஞர்களில் சிலராவது மோட்டிவேட் செய்யப்படுவது உறுதி.

கவண், தோட்டாவாக பாய்ந்திருக்க வேண்டிய படம்! துப்பட்டாவாக கழுத்தை சுற்றியிருக்கிறது. அட போங்கப்பா…!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Kumar says

    அந்தணன்: அருமையான நியாமான விமர்ஷணம். நீங்க யூடூப்பில வரணும். பாண்டா பிரசாந்த் மாறி ஆளுங்க காசு வாங்கிட்டு பெரிய படங்களை நியாயமாக விமர்ஷணம் பண்ணுவதில்லை. சின்ன படங்களை வெச்சி செய்துவிடுகிறார்கள். மிகவும் சரி, விஜய் சேதுபதி அரிசி மூட்டை கணக்கா இருக்கிறார். என்னத்த சொல்ல? ஹிப் ஹாப் ஆதி பாடல்கள் சரியில்லை. KV ஆனந்தின் திறமை படத்தை கடைசியில் காப்பாற்றிவிடுவதென்னவோ உண்மை. இருந்தாலும் தைரியமா Vijay சேதுபதி, ஹிப் ஹாப் தமிழன் குறைகளை சுட்டி காட்டியதுக்கு அந்தணனுக்கு ஒரு சல்யூட்!

  2. இராமமூர்த்தி.நா says

    ஆக்ஸிஜன் தந்தாயே பாடலை கேட்டதிலேர்ந்து முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறேன், ஒளிப்பதிவும் மிகச்சிறப்பு. ஒளிப்பதிவு, பாடல்கள் சரியில்லை என்பது ரொம்ப தவறு. மற்ற பாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை, ஆனால் ஒளிப்பதிவு படமுழுவதும் சிறப்பு. சாலையில் தடுமாறும் வண்டி சறுக்கி கீழே உருளும் காட்சியை மிகச்சிறப்பாக படம்பிடித்திருக்கிறார்கள், மற்றும் படம் பரபரப்பாக செல்கிறதென்றால் ஒளிப்பதிவு நன்றாகவே இருப்பதாகவே அர்த்தம். விமர்சனம் எழுதும்போது ஏதாவதொரு குறையை சொல்லியாகவேண்டும் என்று அவசியம் எப்போதுமே இல்லை. அப்படியொரு பொறுப்பற்ற முறையில் விமர்சனம் எழுதுவது உங்களுக்கும் அழகல்ல. 10 வருங்களுக்கு மேலாக உங்கள் சினிமா விமர்சனங்களை படித்து வருகிறேன். இந்த படம் நான் சமீபத்தில் பார்த்த படங்களில் நல்ல படம். ஒருவாட்டி கூட என் மொபைலை தொடவே இல்லை படம் முடியுற வரை. இந்த படத்தின் குறை, நீளம். சில காட்சிகள் போரடித்தன என்பது உண்மை, சில
    காட்சிகள் கே.வி.ஆனந்தின் முந்தைய படங்களை ஞாபகப்படுத்தின, முக்கியமாக “கோ”, மற்றும் சில டி.ஆர் பேசும் வளவளா வசனங்கள் தவிர்க்க அல்லது குறைக்கப்பட்டிருக்கலாம். இவைகள் தவிர்த்து படம் அருமை.

Reply To Kumar
Cancel Reply

Your email address will not be published.