கீர்த்தி சுரேஷின் மனசை கொள்ளையடித்த ஓவியர்!

0

ஓவியங்களின் மீது காதல் கொள்கிற எல்லாருக்கும்  ஸ்ரீதரையும் தெரிந்திருக்கும். ‘நவீன ரவிவர்மா’ என்றே இவரை கொண்டாடுகிறது சினிமா நட்சத்திரங்களின் மனசு. தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் மனம் கவர்ந்த ஸ்ரீதர் எல்லாரையும் ஓவியமாக்கி அவரவர் வீட்டில் தொங்கவிட்ட அதிசய மனிதராச்சே, இருக்காதா பின்னே?

இப்படி பல்வேறு ஹீரோக்களின் மனம் கவர்ந்த ஓவியர் ஸ்ரீதர், இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் மனசையும் கொள்ளையடித்துவிட்டார். ‘‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. அவர் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் சார் கிட்ட இன்னும் நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார் ” என்றார் கீர்த்தி சுரேஷ். அப்படி என்னதான் நடந்தது?

சென்னை ஈசிஆர் சாலையிலிருக்கும் விஜிபி கோல்டன் பீச்சில் ஸ்ரீதருக்கென தனி அரங்கம் இருக்கிறது. அங்குதான் லண்டன் அமெரிக்கா போன்ற மிகக்பெரிய நாடுகளில் மட்டுமே இருக்கும் சிலிகான் மியூசியத்தை வடிவமைத்திருக்கிறார் ஸ்ரீதர். அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் இங்கு சிலிகான் சிலைகளாக உயிர் பெற்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

முதலில் இவர்களை படமாக வரைந்து கொண்ட ஸ்ரீதர், அதற்கப்புறம் சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழுவைக் கொண்டு செய்து முடித்தார். இன்று பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த சிலைகளை தடவிப் பார்க்காத குறையாக சந்தோஷத்தோடு ரசித்தது ஒரு பெரும் கூட்டம். ஆளுயரத்தில் நின்ற அமிதாப்பச்சனையும், அசத்தலாக நின்ற சார்லி சாப்ளினையும் ஒரு குழந்தை போல கண்டு குதூகலித்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த வளர்ந்த குழந்தையின் குதூகலத்தையும் சேர்த்து ரசித்தது கூட்டம்.

Leave A Reply

Your email address will not be published.