தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?

0

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார்.

திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய ‘பறவையின் நிழல் ‘ மற்றும் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. ‘ ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ‘பறவையின் நிழல்’ நூலை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பெற்றுக் கொண்டார். பட்டிமன்றப் பேச்சாளரும் பேராசிரியருமான முனைவர் கு. ஞானசம்பந்தன் விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசினார். அவர்பேசும் போது ,

” இது உணர்வு பூர்வமான விழா மட்டுமல்ல பலரையும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்துள்ள விழா. எப்போதும் என் உலகம். முரண்பாடானது. கல்லூரியில் நான் வகுப்பு எடுத்தால் மாணவன் காது கொடுத்துக் கேட்கமாட்டான். கூட்டங்களில் எப்போது பேசினாலும் காசு கொடுத்துக் கேட்பார்கள். பட்டிமன்றத்தில் நானே பேசிக்கொண்டிருக்க வேண்டும்.சினிமாவில் எது பேசினாலும் தப்பு என்கிறார்கள். இப்படியாக முரண்பாடாக உள்ளது என் உலகம். இப்போதெல்லாம் படம் வரும் முன்பே பார்த்து விட்டோம் என்கிறார்கள். அவ்வளவு வேகம். பிருந்தா சாரதி நல்ல படிப்பாளி,படைப்பாளி.இவரது கவிதைகளில் பெண்களை அழகாகவும் அறிவாகவும் காட்டிப் பேசுகிறார்.

நம் தமிழ்ச் சினிமாவில் கதாநாயகியைப் பாருங்கள் அவள் லண்டனில் படித்தவளாக இருப்பாள். கதாநாயகன் இவன் ஒர்க்ஷாப்பில் ‘நட்’ கழற்றுபவனாக இருப்பான் .அவனிடம் அவள் காதலில் விழுந்து விடுவாள். அப்படி விழுபவள் ‘நட்டு’ கழண்டவளாவே இருக்க வேண்டும் .தமிழ்ச் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே கிடையாதா? ஆனால் அப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் இவர் பெண்களை அழகாகவும் அறிவாகவும் தன் கவிதைகளில் காட்டுகிறார்.

பிருந்தா சாரதி இந்த தொகுப்பில் நல்ல கவிதைகள் பலவற்றை எழுதி இருக்கிறார்.இப்போதெல்லாம் நல்ல தமிழ் பேசினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். படங்களில் கூட நல்லதமிழ் பேசினால் அது ஆங்கிலப் படம் என்றாகி விட்டது. . ஆங்கிலப் படத்தில் ஜாக்கிசான் கூட’ யாகாவாராயினும் நாகாக்க ‘என்கிறார்.ஆங்கிலத்துடன் பேசினால் அது தமிழ்ப்படம் என்றாகி விட்டது. நம் மரபு எதுகை மோனையுடன் கலந்ததுதான் .திட்டினால் கூட எதுகை மோனை இருக்கும். ‘கமுக்கமான கத்தாள ;காதுல கிடக்குது பித்தாள’ என்று எதுகை மோனையுடன்தான் திட்டுவோம். நம் தமிழ் வளத்தை என்றும் மறந்து விடவேண்டாம். கோடீஸ்வரன் பிச்சை எடுக்கலாமா? நம் வளமான மொழி இருக்க வேறு இரவல் மொழி எதற்கு? ” என்றவர் விழாவை நகைச்சுவைச் சாரலில் குளிர வைத்தார்.

நடிகர் நாசர்பேசும் போது ,

” நான் இங்கே வாழ்த்த வரவில்லை. மற்றவர்கள் பிருந்தாசாரதியைப் புகழ்வதைப் பார்த்து மகிழ வந்திருக்கிறேன்.அவனை முதலில் அங்கீகரித்தது நான் என்கிற பெருமிதம் எனக்கு உண்டு. பெருமிதத்தைவிட பெரிய நிம்மதி வேறில்லை. இவனுக்கு கவிதை எழுதுவது மூச்சு விடுவது மாதிரி விடவே மாட்டான் எழுதிக் கொண்டே இருப்பான்.” என்று வாழ்த்தினார்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பேசும் போது,

” நான் தீவிர கவிதை வாசகன் இல்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. அது போலவே இசை கேட்கும் பழக்கமும் இல்லை. கவிதை செய்கிற முதல்பணியே கதையை வெளியேற்றுவதுதான். நான் கதையை விரும்புகிறவன். இருந்தாலும் முக்கியமான நல்ல கவிதைகளை வாசிக்காமல் விடுவதில்லை. தமிழ்க்கவிதைகள் இரு விஷயத்தைப் பின்பற்றி வருகின்றன. வியத்தலும் வருந்துதலும் அவை. சங்ககாலைக் கவிதைகள் பிரிவு பற்றி அதிகம் பேசுகின்றன. இவரது ‘இறுதி மலர்கள,’புரியாதபுத்தகம்’ கவதைகள் பல தளங்களில் எதிரொலிப்பவை. கவிதை நெம்பு கோலாக வேண்டாம். கனிவு தந்தால் போதும் என்பேன். இவரது கவிதைகளில் தன் அங்கீகாரம் மறுக்கப் பட்டவனின் குரல் ஏக்கமாக ஒலிக்கிறது. ” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசும் போது,

” நான் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.எனவே முன்தயாரிப்புடன் வரவில்லை. இந்த பாராட்டைக் கேட்க, பார்க்கவே இங்கு விரும்பி வந்தேன். இதற்கெல்லாம் பிருந்தாசாரதி முழுத் தகுதியானவர்தான் .எங்களுக்குள் 25 ஆண்டு கால நட்பு உண்டு என் எல்லா நல்ல முடிவுகளிலும் பின்னால் அவர் இருப்பார். நான் சரியாக தீர்மானமாக முடிவெடுக்க உதவுவார். ‘சதுரங்கவேட்டை’ படத்தை அவர் கொடுத்த தைரியத்தில்தான் வாங்கி வெளியிட்டேன் காவிரி ஆற்றங்கரையில் அவருடன் பேசியபோது ‘ஆனந்தம்’ கதையைப் படமாக்கும் முடிவு தெளிவானது. ‘ஆனந்தம்’ படத்தின் கதையை 500 பேரிடமாவது சொல்லி இருப்பேன். சொல்லும் போது எப்போது எது விடுபட்டது என்று அவர் சரியாகச் சொல்வார். பிருந்தாசாரதி சிறந்த கவிஞர் என்பதைப் போலவே சிறந்த இயக்குநராகவும் வருவார்.” என்றார்.

நூலாசிரியர் பிருந்தாசாரதி தன் ஏற்புரையில், அனைவருக்கும் நன்றி கூறியவர், ” உங்கள் அன்புக்கு முன்னால் என் சொற்களுக்கு அர்த்தமில்லை. பலமுமில்லை. நெகிழ்ந்து போய் விட்டேன்.” என்றார் மனங்கொள்ளாத நெகிழ்ச்சியுடன்.

இவ்விழாவில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரவிமரியா, மணிபாராதி, பன்னீர்செல்வம், தாமிரா.
எம்.ஆர்.பாரதி, கவிஞர்கள் அறிவுமதி, அமுதபாரதி, குகை மா. புகழேந்தி, யுகபாரதி,கலை இயக்குநர் ஜேகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.