கோச்சடையான் / விமர்சனம்

முதலையை மோர் பானையில் மூடி வைத்த மாதிரி, இத்தனை காலமும் இந்த பிரமாண்டமான கோச்சடையானை வதந்திகளே மூடி வைத்திருந்தன! அவிழ்த்தால்…. அதே ஆக்ரோஷம் கொஞ்சமும் குறையாத ரஜினி அண்டு ரஜினி! ராணா படத்தைதான் சுல்தானாக்கி, சுல்தான் படத்தைதான் கோச்சடையான் ஆக்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் முன்பு எழுதப்பட்ட வதந்தியாளர்களின் திரைக்கதைக்கு ‘பெப்பே’ காட்டுகிறது ரஜினியின் வழக்கமான ஸ்டைலும், வரிஞ்சு கட்டி நிற்கும் பரபரப்பும். எல்லாமே கே.எஸ்.ரவிகுமாரின் கதை திரைக்கதை வசன மாயாஜாலங்களன்றி வேறில்லை!

சவுந்தர்யா நம்பிய மோஷன் கேப்சர் எப்படியிருக்கு? படம் தொடங்கி கொஞ்ச நேரம் வரைக்கும், ‘எல்லா பொம்மையுமே நெளிஞ்சிருக்கே’ டைப்பிலிருக்கிறது. அதற்கப்புறம் அதுவே பழகிவிட, கதைக்குள் வலுக்கட்டாயமாக நம்மை வளைத்து இழுத்துக் கொள்கிறார் கே.எஸ்.ரவிகுமார். படம் முடிகிற வரைக்கும் நம்மை முன் சீட்டில் தள்ளுகிறது ராஜ குடும்பங்களின் சூழ்ச்சி, வீழ்ச்சி சமாச்சாரங்கள்.

ஆற்றில் குதித்து கலிங்காபுரியில் அடைக்கலமாகும் சிறுவன்தான் ராணா. அந்த நாட்டிலேயே போர் பயிற்சி பெற்று கலிங்காபுரியின் போர்ப்படை தளபதியாகவும் உருவெடுக்கிறான். அங்கு அடைபட்டிருக்கும் தனது நாட்டு அடிமைகளின் கவுரவமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறான். அதற்கப்புறம் வளர்ந்த நாட்டுக்கே துரோகம் இழைத்துவிட்டு அங்கிருந்து ஏராளமான படை வீரர்களோடு தனது சொந்த நாடான கோட்டை பட்டினத்திற்கு தந்திரமாக தப்பி வருகிறான். வந்த இடத்தில் மன்னரின் மகளையும் டாவடிக்கிறான். அந்த காதல் நிறைவேறும் நேரம் பார்த்து சொந்த நாட்டு மன்னனையும் கொல்ல அதே ராணா வாளெடுக்க, அதிர்ந்து போகும் மன்னன், ‘யார்றா நீ?’ என்று சிறைக்குள் அடைக்கிறான். பிளாஷ்பேக்….

நாட்டின் முன்னாள் போர்ப்படை தளபதி கோச்சடையானின் மகன்தான் இந்த ராணா. இதே மன்னரான நாசர் தன் அப்பாவுக்கு மரண தண்டனை விதிப்பதை கண்டு அதிர்ந்து போய், அதே மன்னனை பழிவாங்கதான் ரிட்டர்ன் ஆகியிருக்கிறான். அப்புறமென்ன? பகை நாடான கலிங்க நாட்டு மன்னனுக்கு மகளை திருமணம் செய்து வைத்து ராணாவையும் போட்டுத்தள்ள முயல்கிறார் மன்னர், அதிலிருந்து தப்பி எப்படி மன்னனை கொல்கிறான் ராணா? அவரது மகளை கை பிடித்தானா என்பது கைதட்டல்களுக்குரிய கடைசி நிமிடங்கள். இந்த அழகான திரைக்கதையுடன் மோஷன் கேப்சர் தொழில் நுட்பம் முழுமையாக கை கோர்த்திருந்தால், இந்திய சினிமாவின் இணையில்லா ‘தங்க நாற்கர சாலை’யை உருவாக்கிய பெருமை சவுந்தர்யாவை சேர்ந்திருக்கும். பட்…? கம்ப்யூட்டர் வல்லுனர்களில் பாதி பேர் , கம்ப்யூட்டர் கொல்லுனர்களாவும் இருந்தால் அப்பளம் உடைஞ்சேதான் பொறியும். என்ன செய்ய?

ரஜினியை தவிர மற்ற கேரக்டர்கள் எதற்கும் ஃபினிஷிங் இல்லை. அதுவும் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கும் ருக்குமணியை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே என்று பக்கத்து சீட், எதிர் சீட் புண்ணியவான்களிடம் க்விஸ் வைத்து கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. சரத்குமார் சொந்த குரலில் பேசியதால் தப்பித்தோம். இல்லையேல், அதற்கும் தனி க்விஸ் வைக்க வேண்டியிருக்கும். தீபிகா படுகோனே மட்டுமல்ல, படத்தில் வரும் எல்லா பெண் பாத்திரங்களுக்கும் பின்புறம் இட்லி பானையை பிக்ஸ் பண்ணியதை போல தோற்றம். ஆனாலும் பல காட்சிகளில் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள் அதே கம்ப்யூட்டர் புலிகள். குறிப்பாக தீபிகா ஆடும் ஒரு டூயட் பாடலில் இவரும் ஆட, இவருடன் சேர்ந்து வெள்ளை மயிலும் ஆடுவது போல காட்சி. அழ்ழ….கு!

கோச்சடையான், கடலில் நடத்தும் அந்த ஆக்ரோஷ சண்டையையும் மிக அற்புதமாக வடிமைத்திருக்கிறார்கள். சண்டை இயக்குனருக்கும், சிஜி வல்லுனர்களுக்கும் தனி பாராட்டுகள். அந்த சிவதாண்டவ ஆட்டத்தில் சிலிர்க்க வைக்கிறார்கள் இவர்கள். பிளாஷ்பேக்கில் வரும் கோச்சடையான் கேரக்டரின் சென்ட்மென்ட் காட்சிகளும், வீர தீர காட்சிகளும் மனதிற்குள் மறுபடியும் ரீவைண்ட் அடிக்கும். சந்தேகமில்லை. கொஞ்சம் புதுசாக, ஆனால் அழகாக யோசித்திருக்கிறார்கள் நாகேஷ் கேரக்டரை. அவரை பார்க்க பார்க்க சந்தோஷம் பொங்குகிறது.

அந்தகால திருநீலகண்டர் படம் மாதிரி, ஐந்து நிமிடத்திற்கொரு முறை பாடல் வருவதால், ‘ஐயகோ ’ ஆகிறார்கள் ரசிகர்கள். பாடல்களை தனியாக ரசிக்க வைத்தாலும், பின்னணி இசையில் அசரடிக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை முன்னால் நின்று கே.எஸ்.ரவிகுமார் இழுக்க, பின்னாலிருந்து தள்ளுகிறார் ரஹ்மான். அதற்கப்புறம் விறுவிறுப்புதான் வேறென்ன?

ஒரு மணி நேரம் ஐம்பது நிமிட படம் ஒரு ஜானர் என்றால், படத்தின் முன்னாலும் பின்னாலும் ரஜினியை சவுந்தர்யா இயக்குகிற அழகை பார்க்க வேண்டுமே! அதற்காகவே தியேட்டருக்குள் முதல் ஆளாக நுழைந்து, கடைசி ஆளாக வெளியே வரலாம் ரசிகர்கள்.

யானை தும்மினாலும் ஏழு ஊருக்கு சாரல்டா….!

ரஜினி சார்… கோச்சடையான் பார்ட் 2 எப்ப?

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments
  1. kamalakannan. AIR says

    Nanbare. Vanakkam. Kochadaiyan padam naan paarkkavilli? Enakku preview paarkka SMS maattru Mail. Varavillai enbathai varuthathudan therivikindran. Nandri ungalin vimarsanathirku. By C.Kamalakannan. AIR. Chennai. 4

  2. dinesh says

    Vimarsanam super..kuraigaley correct aha sonnergal ..also 3d effect is not proper..

  3. jessy says

    அனிமேஷன் குறைபாட்டுகளை தள்ளிவெச்சிட்டு பார்த்தா கண்டிப்பாக ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோச்சடையான் வெளியாகும் தியேட்டர்கள் விபரம் (தமிழ்நாடு மட்டும்)

Chennai - city 1 Chennai Sathyam A/c Dts 2 Santham A/c Dts 3 Sherien A/c Dts 4 R K salai...

Close