தஞ்சையின் தவிப்பு! க.ராஜீவ்காந்தியின் கொதிப்பு!

0

விகடனின் விளைச்சல்களுக்கு எப்போதுமே ஒரு ‘பவர்’ உண்டு. சுசிகணேசன் மாதிரியான பொழுதுபோக்கு இயக்குனர்களாகட்டும்… சிம்புதேவன் மாதிரியான பேன்ட்டஸி இயக்குனர்களாகட்டும்… ராஜு முருகன் மாதிரியான சமுதாய அக்கறை மிகு இயக்குனர்களாகட்டும்… கரு.பழனியப்பன் போன்ற கலவை இயக்குனர்களாகட்டும்… விகடனின் வளர்ப்புக்கு எப்போதும் இன்டஸ்ட்ரியில் ஒரு மரியாதை உண்டு. க.ராஜிவ்காந்திக்கும் அப்படியொரு அடையாளம் வரப் போவதற்கான முன்னோட்டம்தான் ‘கொலை விளையும் நிலம்’.

நஞ்சையும் புஞ்சையும் விளைந்த தஞ்சைதான் ராஜீவுக்கும்! வான் பொய்த்து, நிலம் பொய்த்து, மத்திய மாநில அரசுகள் பொய்த்து நைந்து போயிருக்கும் தஞ்சையின் வலியை ராஜீவை விட யார் வலிமையாக சொல்லிவிட முடியும்?

விவசாயிகளின் தற்கொலைகளையும், அதன் பின்னணியையும் ஒரு ஆவணப்படமாக்கியிருக்கிறார் ராஜீவ்காந்தி. இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாக சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் கவலைகளையும் அப்படியே திரைக்குள் இறக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிகள் சொல்லாததை, பத்திரிகைகள் எழுதாததை, புலனாய்வு இதழ்களுக்கு புரிபடாததை கூட இந்த ஆவணப்படத்தில் காட்சி படுத்தியிருக்கிறாராம் ராஜீவ்.

வண்ணத்திரை வாரியணைத்துக் கொள்ள வேண்டிய ராஜீவின் இந்த முயற்சிக்கு பொருளாதார ரீதியாக உதவியிருக்கிறார்கள் நா.சதக்கத்துல்லா, மற்றும் பத்திரிகையாளர் கவிதா இருவரும்.

பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றவுடனேயே எவ்வித சம்பளமும் வாங்காமல் இதில் பங்காற்றி பெருமை சேர்த்திருக்கிறார்கள் திரையுலக பிரபலங்களான சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், டைரக்டர் ராஜுமுருகன், மற்றும் இசைமைப்பாளர் ஜோகன் ஆகியோர்.

விவசாய நிலத்தில் பயிர்களுக்கு கீழே படர்ந்திருக்கும் வேர்கள், தூக்கு கயிறுகள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தின் போஸ்டரே பல கதைகள் சொல்கிறது.

திரைக்குள் இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சிகளை வைத்திருப்பாரோ ராஜீவ்காந்தி?

Leave A Reply

Your email address will not be published.