கொலைகாரன் / விமர்சனம்

1

கடந்த சில படங்களாகவே நிஜ கொலைகாரனாக(?) மாறி ரசிகர்களை மிரட்டி வந்த விஜய் ஆன்ட்டனி, தானே தன் சரிவை தடுக்க எடுத்த முயற்சிதான் இந்த கொலைகாரன்! ‘சற்றே குழம்பினாலும் நடு மண்டையில் புஸ்வானம்தான்…’ என்கிற அபாயத்தை உள்ளங்கையில் வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறது இப்படம். இந்த சிக்கலை தன் சர்வபெரிய திறமையால் கட்டிக் காப்பாற்றுகிறார்கள் இயக்குனர் ஆன்ட்ரு லூயிசும், டெக்னீஷியன்களும், மற்றும் அர்ஜுனும்!

ரீலுக்கு ஒரு திருப்பம், நிமிஷத்துக்கு ஒரு பரபரப்பு என்று படக் படக்கென தாவும் திரைக்கதையில்தான் எப்படியொரு அசாத்திய லாவகம்!

முதல் காட்சியிலேயே ஒரு கொலை. அடுத்த காட்சியில் சரண்டர் ஆகிறார் விஜய் ஆன்ட்டனி. அப்படியே பிளாஷ்பேக் விரிகிறது. எதிர்வீட்டில் குடியிருக்கிற ஆஷிமாவை பின் தொடரும் விஜய் ஆன்ட்டனி யார்? ஆஷிமாவை அடைய நினைக்கும் மினிஸ்டரின் தம்பியை கொலை செய்தது விஜய் ஆன்ட்டனியா, ஆஷிமா அண் கோவா? போலீஸ் அதிகாரியான அர்ஜுனின் விசாரணை வளையத்திற்குள் வந்த விஜய் ஆன்ட்டனியின் நியாயம் என்ன? இப்படி கேள்விகளும், முடிச்சுகளுமாக நகரும் படம் அதற்கான விடையை நோக்கி பரபரவென நகர்வதில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்!

ஒரு கதாநாயகனுக்குரிய பெருமளவு ஸ்பேஸ், அப்படியே அர்ஜுனால் அபகரிக்கப்படும் என்று தெரிந்தும் அதை விட்டுக் கொடுத்த விஜய் ஆன்ட்டனிக்கு முதல்பாராட்டு. இறுக்கமான முகம், முள் அறுந்து போன ஸ்பீடா மீட்டர் பேச்சு என்று தன் வழக்கமான வேகத்தை அப்படியே மெயின்டெயின் செய்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. அதுவே இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருப்பதுதான் ஆச்சர்யம். ஏனென்றால் அந்த கேரக்டருக்கு இதுதான் சரி.

அர்ஜுன் அதிகம் அலட்டிக் கொள்ளவே இல்லை. கேஷுவலாக ‘இன்’ ஆகி, ரெண்டே கேள்விகளை கேட்டுவிட்டு அதே கேஷுவல் ‘அவுட்’ ஆகிறார் மனுஷன். அந்த இன்… அவுட்… இரண்டையுமே ரசிக்க முடிகிறது. கடைசிவரைக்கும் அர்ஜுனின் காக்கி சட்டைக்கு சுருக்கமே விழாது போலிருக்கே! (எந்த யுனிவர்சிடியாவது கவுரவ ஏ.சி பட்டம் வழங்கி கவுரவிங்க ஆசானே)

கதாநாயகி ஆஷிமா சொத்தையுமில்லை. வித்தையுமில்லை. இருந்தாலும், இந்த பெண்ணுக்கு இப்படியொரு சோகமா என்று உருக விடுகிறார். அவர் விரும்பினால், கோடம்பாக்கம் இன்னும் நாலைந்து படங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கக்கூடும்.

படத்தில் நிறைய கேள்விகள் இல்லாமலில்லை. இது ஏன் இப்படியாச்சு? அது ஏன் அப்படியிருந்திச்சு? என்று சந்தேகங்கள் முளைக்கின்றன. அதை தன் சாமர்த்தியத்தால் கடக்கிறார் இயக்குனர். கண்ணை மறைத்து கடையை பிடுங்குவதுதானே மந்திரவாதியின் டெக்னிக். கேள்வி கேட்க விடாமல் படத்தை ரசிக்க வைப்பதும் அப்படியொரு மந்திரவாதி டெக்னிக்தான் போல!

ஆடியன்ஸ் நினைப்பதை நாசரை விட்டு கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல டெக்னிக்! பட்… அவரே கேட்காத பல கேள்விகள் நமக்குள் உரைக்கிறது. சீதா, சம்பத் ராம், பகவதி பெருமாள் என்று சில தெரிந்த முகங்கள் இருப்பது சற்றே ஆறுதல்!

பாடல்களையும் அதற்கான காட்சிகளையும் முன் கூட்டியே உருவாக்கி வைத்திருந்து, அதை ‘கேப்’பில் திணித்திருக்கிறார்கள். ஒட்டியும் ஒட்டாமலும் படுத்தி எடுக்கிறது. ஆனால் பாடல்களை தனியே கேட்டால் இன்பம்… இன்பம்… இசையமைப்பாளர் சைமன் கே.கிங், பின்னணி இசையில் கிங்தான்… சந்தேகமில்லை!

பெயின்ட்டிங் போன்ற முகேசின் ஒளிப்பதிவும், லைட்டிங் அழகும் நம்மை கதைக்குள் அப்படியே இழுத்துக் கொள்கிறது.

படத்தில் ஏராளமான திருப்பங்கள் இருந்தும், ஸ்பீட் போதலையோ… என்கிற உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

வாளென்று நினைத்தவர்களுக்கு கத்தியாகவும், கத்தியென்று நினைத்தவர்களுக்கு அருவாள் மனையாகவும் தோற்றமளிக்கிறான் கொலைகாரன்! நல்லவேளை… பிளேடாக தோற்றமளிக்கவில்லை, அதுவரை நிம்மதி!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Jeeva says

    Sorry sir. I heard that Kolaigaran crew remade that film with buying proper remake rights. If so, then very sorry to make wrong comments above. Please I will get my comments back – Please delete my comments above.

Leave A Reply

Your email address will not be published.