குஷ்புவே நமஹ 5 -ஸ்டான்லி ராஜன் – ” குஷ்பு இதயக்கனி ஆனது இப்படிதான் ”!

0

இந்த காலகட்டத்தில் தமிழில் குஷ்பூ நம்பர் 1 நடிகையாக இருந்தபொழுதிலும் மற்ற தென்னக மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துகொண்டே இருந்தார். சுருக்கமாக சொன்னால் தென்னிந்திய சினிமா உலகின் ராணியாக அவர் முடிசூட்டபட்ட நேரம் அது. அந்த கிரீடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கின்றது.

அவர் நடிக்க வந்த 4 வருடங்களில் கிட்டதட்ட எல்லா வேடத்திலும் நடித்து குவித்திருந்தார். குஷ்பூவும் தனக்கு எல்லா வேடங்களிலும் நடிக்க வரும் என அட்டகாசமாக நிரூபித்துகொண்டிருந்தார் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை அந்த 4 வருடத்திலே ஏராளம். எந்த வேடத்தில் யாருடன் நடித்தாலும் அதில் பார்வையாளர் கவனத்தை தன்மீதே தக்கவைக்கும் வகையில் அவரின் நடிப்பும் தோற்றமும் அமைந்திருந்தது. சாவித்திரி, பானுமதி போன்ற மிக சில‌ நடிகைகளுக்கு பின் குஷ்பூவிற்கு அந்த இடம் கிடைத்தது

கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தூள் பறத்தினார். நம்பர் 1 நடிகையாக இருந்தபொழுதும் குழந்தைக்கு தாய் எனும் அம்மா வேடத்தில் அவர் நடிக்க தயங்கியதுமில்லை, அவரின் தொழில்பக்தியும் அப்படி இருந்தது. அவரை இயக்கிய இயக்குனர்கள் சொல்வார்கள், சோக காட்சியில் கூட கிளிசரின் இன்றி அழுவார் குஷ்பூ. இந்த இடத்தில் சரியாக கண்ணீர் கொட்டவேண்டுமென்றால் இம்மியும் பிசகாமல் அவரால் கொட்டமுடியும், வசனங்களை முகபாவத்திலே அவரால் காட்டமுடியும்.

இப்படி அருமையான நடிகையாக இருந்ததால்தான் அந்த உயரத்தை அவரால் எட்ட முடிந்தது. அவருக்கான‌ ரசிகர் கூட்டம் மட்டுமல்ல, திரையுலகம் உட்பட‌ மொத்த‌ தமிழகமே அவரை கொண்டாடி தீர்த்தது. அந்த காலமே குஷ்பூவிற்கானது சேலை முதல் இட்லி வரை குஷ்பூ பெயரில் வந்தது, சில இடங்களில் பெங்களூர் தக்காளி, மல்லிகைபூ கூட அவரின் பெயரால் அறியபட்டன

எங்கும் குஷ்பூ எதிலும் குஷ்பூ என வியாபித்திருந்தார்.

புருஷலட்சணம் படத்தில் மிக சிறப்பான நடிப்பினை கொடுத்திருந்தார், விளக்குகள் மத்தியில் அவர் பாடிய அம்மன் பாடலுக்கு தியேட்டரே ஆடியது. பெண்களுக்கு சாமி வந்து ஆடினார்கள், ஆண்களுக்குள் குஷ்பூ அம்மன் இறங்கியிருந்தார்.

இன்றளவும் எல்லா அம்மன் ஆலயங்களில் எல்லாம் பாடபடும் பாடல் அது, அது ஒலிக்கும்பொழுதெல்லாம் தமிழருக்கு குஷ்பூ அம்மனே கண்ணுக்குள் தெரிந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி என்ற ஒரு குறுகிய வட்டத்தில் அவர் தன்னை நிறுத்தவில்லை அப்படி நினைத்திருந்தால் ரஜினி கமலுடன் அடுத்த ஸ்ரிதேவியாக பல ரவுண்டுகள் வந்திருக்கலாம். ஆனால் அவரோ தன்னை நிரூபிக்கும் படங்களை தேடி தேடி நடித்தார், கேப்டன் மகள் போன்றவை அம்மாதிரியான படங்கள்.

அதில் வைரமுத்து எழுதிய “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடல் குஷ்பூவிற்கு இன்னொரு மகுடம். பொதுவாக நாட்டு நடப்பினை தன் பாடல்களில் வைக்கும் வைரமுத்துவின் கால கல்வெட்டு அப்பாடல். எந்த அளவு குஷ்பூ அலை அடித்திருந்தால், அண்ணாமலையில் “கூடையில் என்ன பூ குஷ்பூ” என்றொரு வரியினை வைரமுத்து வைத்திருபார்?

பாடல்வரிகளில் இடம்பெற்ற ஒரே நடிகை பெயர் இன்றுவரை குஷ்பூதான்.

கோலங்கள் எனும் படத்தில் மிக சவாலான பாத்திரத்தில் நடித்திருந்தார். மிக சிறந்த நடிப்பினை அதில் கொடுத்திருந்தார். மிக மிக பண்பட்ட குஷ்பூவினை அதில் பார்க்க முடிந்தது. அந்த படம் வரும்பொழுது குஷ்பூவிற்கு வயது 25 தான், ஆனாலும் மிக மிக பண்பட்ட இயல்பான நடிப்பினை கொடுத்திருந்தார். அதற்கு விருது கொடுத்து தமிழக அரசும் சிறப்பித்தது

இந்த படங்கள் வந்த காலமெல்லாம் அவர் உள்ளம் உடைந்திருந்த காலகட்டங்கள், ஆயினும் தனிபட்ட வாழ்க்கை சினிமா வாழ்க்கையினை பாதிக்காத வண்ணம் அவரின் சினிமா பயணம் சென்றுகொண்டே இருந்தது. நடனமோ, காமெடியோ பாடலோ குணசித்திரமோ எந்த காட்சியிலும் பின்னி எடுத்தார். எல்லா காட்சியிலும் குஷ்பூ மட்டுமே தெரிந்தார்

அவருக்கான மக்கள் அபிமானம் அப்படியே இருந்தது கொஞ்சமும் குறையவில்லை

குஷ்பூவும் தனக்கு மிக பொருத்தமான வேடங்களிலே நடித்தார், வாய்ப்புக்காக தரம் தாழ்ந்த உடைகளிலோ காட்சிகளிலோ அவர் வரவே இல்லை. நாட்டாமை போன்ற படங்களில் தனித்து நின்றார். அப்படத்தில் மனோரமாவிற்கு அடுத்து சிறப்பான நடிப்பினை கொடுத்தவர் சாட்சாத் குஷ்பூதான். அந்த அண்ணி வேடம் மறக்க முடியாதது.

தான் கொங்குநாட்டு மருகமள் என அப்பொழுதே முடிவு செய்திருந்தாரோ எனும் அளவில் அவரின் நடிப்பு இருந்தது. நடிக்க வந்து 7 வருடமாக அவர் அப்படியே கண்ணியமாக நடித்துகொண்டிருந்ததே மிக பெரும் வெற்றி, இறுதிவரை அந்த பெருமை அவருக்கு உண்டு. அப்பொழுதுதான் முறைமாமன் என்றொரு படத்தில் ஒப்பந்தமானார், அது தன் வாழ்வினை மாற்றும் படம் என அவருக்கு தெரியவில்லை

அங்குதான் சுந்தர்.சி எனும் புதுமுக டைரக்டரை முதலில் கண்டார், முதலில் நடிகையாகத்தான் பழகினார். பெரும் டைரக்டர்களிடம் எல்லாம் பணியாற்றிய குஷ்பூவிற்கு சுந்தர் முதலில் சாதரணமாகத்தான் தெரிந்தார். அது பம்பாய் படம் வந்திருந்த நேரம், கோவைபக்கம் முறைமாமன் படபடிப்பில் இருந்த குஷ்பூவும் சுந்தரும் அப்படம் பார்க்க சென்றனர், கூட்டம் குஷ்பூவினை அடையாளம் கண்டுவிட்டது

தேனீக்கள் ராணி தேனியினை சூழ்வது போல கூட்டம் சுற்றியது, குஷ்பூ எதிர்பார்க்கவில்லை கலங்கினார். அசம்பாவிதம் ஏற்படும் சூழலில் மிக திறமையாக சமாளித்து குஷ்பூவினை காப்பாற்றி காரில் ஏற்றி சென்றார் சுந்தர்.சி. சுந்தர் மீது குஷ்பூவிற்கு நம்பிக்கை வந்தது அப்பொழுதுதான், அந்த நம்பிக்கை காதலாயிற்று.

சுந்தர்.சியின் நிலையோ அண்ணா எம்ஜிஆரினை பற்றி சொன்னது போன்றது “மரத்தின் உச்சியில் கனி தொங்கிகொண்டிருந்தது, எல்லோரும் கைவிரித்து கைபற்ற காத்திருந்தனர், நல்லவேளையாக அது என் மடியில் விழுந்தது, அதனை நான் இதயத்தில் வைத்தேன், அது இதயக்கனி ஆனது”

அப்படி வராது வந்த மாமணியான குஷ்பூ சுந்தரின் இதய கனி ஆனார், குஷ்பூவும் நிரந்தரமாக தமிழகத்தில் தங்க மகிழ்ச்சியுடன் ஆயத்தமனார். (உண்மையில் ஒரு விஷயம் ஆச்சரியமானது, அதுவரை பெரிய இடமில்லாத சுந்தரின் சினிமா வாழ்வு, குஷ்பூவினை காதலிக்க தொடங்கிய பின் அவரின் வளர்ச்சி வேகமானது, மணமுடித்த பின் சுந்தர்.சி எங்கோ சென்றுவிட்டார்)

தொடக்கத்தில் இது கிசுகிசு என சொல்லபட்டாலும் அவர்களுக்குள் ஆழ்ந்த காதல் அன்றே தொடங்கியிருக்கின்றது. குஷ்பூ தமிழக சினிமாவிற்கு வந்து 8 ஆண்டுகள் ஆயின, சினிமாவில் அவருக்கான இடம் அப்படியே இருந்தது, அசைக்க யாராலும் முடியவில்லை. குஷ்பூவினை வீழ்த்த இன்னொரு குஷ்பூ வந்தால்தான் முடியும் என்ற நிலை

இடைஇடையே திவ்யா பாரதி, குஷ்பூ போல இருந்த பலரை அழைத்து வந்தாலும் அவரை அசைக்க முடியவில்லை. ஒரே குஷ்பூ என்பதில் தமிழகம் உறுதியாக இருந்தது. விளைவு குஷ்பூவின் குடும்ப பாங்கான நடிப்புக்கு ஒரு நடிகை, அவரின் மார்டன் பாத்திரத்திற்கு ஒரு நடிகை என பல நடிகைகள் திட்டமிட்டு இறக்கபட்டனர்

குஷ்பூவின் ஒவ்வொரு பலத்திற்கும் ஒவ்வொரு நடிகை இறக்கப்பட்டார்..

மீனா, நக்மா, ரோஜா போன்றோரின் வரவுகள் அப்படி இருந்தன, ஆனாலும் இருவராலும் குஷ்பூவிற்கு சவால் கொடுக்க முடியவில்லை. அவர் அவரின் வழியில் சென்றுகொண்டே இருந்தார் இன்னும் பலர் வந்தாலும் அவரை நெருங்க முடியவில்லை. நாட்டாமை போன்ற படங்களில் எல்லோரும் இருந்தும் தன் நடிப்பில் தனி இடம் பெற்றிருந்தார் குஷ்பூ, நடிப்பு பொறுப்பு என பின்னியிருந்தார். நாட்டுபுற பாட்டு போன்ற நடனங்களில் கிராமத்து நடன வேடத்தில் பின்னி எடுத்த நேரங்களில் மறுபுறம் வீ.சேகரின் குடும்பபாங்கான வேடத்தில் ஜொலித்துகொண்டிருந்தார்

காலங்கள் செல்ல செல்ல சினிமாவிற்கே உரிய சில அரசியல்களிலும் அவர் பாதிக்கபட்டார், உதாரணம் என் ஆசை ராசாவே போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக அவரைத்தான் நிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் பல காரணங்களுக்காக அவர் நிறுத்தபடவில்லை, சினிமா அரசியலில் இதுவும் ஒன்று

ஏராளமான நடிகைகளின் வருகை, சினிமா அரசியல் இன்னபிற இக்கட்டுக்களையும் தாண்டி அவர் ஜொலித்துகொண்டிருந்தார். அவர் தமிழகத்திற்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் பெரும் உயரம் வந்து அதில் நிலைத்தும் நின்றார். ஒரு வகையான பக்குவமும் அவரிடம் தென்பட்டது, மிக பெரும் தன்னம்பிக்கையும் தைரியமும் குடிகொண்டது. சினிமா அவர் நேசித்த தொழில் என்பதால் எல்லா வேடங்களிலும் நடிக்க தொடங்கினார், அக்கா அண்ணி போன்ற வேடங்களிலும் தயக்கமின்றி நடித்தார்.

மிக மிக பக்குவமான நடிகை என்ற அடையாளம் இருந்ததால் சினிமா ஸ்டூடியோக்களின் கதவு அவருக்காய் எப்ப்பொழுதும் திறந்தே இருந்தது. எல்லா மொழி ஹீரோக்களுடனும், எல்லா மொழி நடிகையருடனும் , எல்லா வகை நடிகர்களுடனும் பல சுற்று நடித்திருந்தார் குஷ்பூ சினிமாவில் கரைகண்டாயிற்று, கூடவே புகழின் உச்சிக்கும் சென்றாயிற்று எந்த நடிகையும் பெறாத புகழையும், மக்கள் அபிமானத்தையும் பெற்றாயிற்று, இனி என்ன என அவர் சிந்திக்கும் பொழுது வயது 29 எட்டிற்று.

மிகபெரும் நடிகையாக ஜொலித்த அவர், தனக்கான குடும்ப வாழ்வினை சிந்திக்க‌ தொடங்கினார், அதனை விட முக்கியம் அவர் தமிழகத்தில் நிலைத்தது. பொதுவாக ஆப்கானிய மன்னர்கள் இந்தியா வருவார்கள், கொள்ளையடிப்பார்கள் பின் ஆப்கன் சென்றுவிடுவார்கள். பாபர் மட்டும்தான் இந்தியாவில் ஆள நினைத்தார், இந்தியாவிலே தன் சாம்ராஜ்யத்தை நிறுவினார், இந்தியா அவருக்கு பிடித்திருந்தது.

குஷ்பூவும் வந்து சம்பாதித்துவிட்டு மும்பை பறந்திருக்கலாம், அவர் செய்யவில்லை தன்னை கொண்டாடிய தமிழகத்தை விட்டுசெல்ல அவர் விரும்பவில்லை, தமிழச்சியாகவே நிலைத்தார்.

தன் கைவசம் இருந்த படங்களை முடித்துவிட்டு திருமண வாழ்க்கைக்கு தயாரானார் குஷ்பூ.

(பூ பூக்கும்)

Leave A Reply

Your email address will not be published.