குஷ்புவே நமஹ 7 -ஸ்டான்லி ராஜன் ”குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்?”

0

தமிழகத்தை பல கண்கள் கவனித்துகொண்டே இருக்கும், யாராவது சீர்த்திருத்த கருத்தோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லா கருத்தையோ பேசிகொண்டு மக்கள் அபிமானத்தை பெற்றும் இருந்தால் அக்கண்கள் குறிவைக்கும். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சிக்கவைத்து கதறவைத்து அவர்களை பொதுவாழ்க்கையிலிருந்தே அப்புறபடுத்தி அடையாளமில்லால் ஆக்கும் கொடூர கண்கள் அவை.

அவர்கள் யார்? என்ன செய்கின்றார்கள் என தெரியாது. ஆனால் மிக கடுமையாக நேரம் பார்த்து அடிப்பார்கள். முதலில் இந்த சூழ்ச்சியில் சிக்கியவர் என்.எஸ் கிருஷ்ணன். அவருக்கு இருந்த மக்கள் ஆதரவு அன்று மிக பெரிது. சீர்திருத்த கருத்துக்களை அவர் நகைசுவையாக சொன்ன அளவிற்கு, மூட நம்பிக்கைகளை அவர் சினிமாவில் சுவைபட கிழித்தெறிந்த அளவிற்கு இன்னொருவர் வரமுடியாது

தாழ்த்தபட்ட இனத்திலிருந்து வந்து பெரும் உச்ச கலைஞராக மின்னியவர் என்.எஸ் கிருஷ்ணன். அவரை குறிவைத்த அந்த கூட்டம், மிக சரியாக லஷ்மி காந்தன் கொலைவழக்கில் அவரை சிக்கவைத்து, அலற வைத்து, அவர் சொத்துக்களையும் சினிமா வாய்ப்பினையும் இழக்கை வைத்து, அவரை இளமைகாலத்திலே முடக்கி அழிக்கவும் செய்தது. அடுத்து மிக அதிரடியான கருத்துக்களை சொன்ன அற்புத கலைஞன் எம்.ஆர் ராதாவினை குறிவைத்தது, பல வழக்குகள் அவர் மீது பாய்ந்தாலும் அவர் தப்பிவந்தார். இறுதியாக ராமசந்திரன் மீதான கொலைமுயற்சி என சிக்க வைத்தது

நீதிமன்றத்தில் எம்.ஆர் ராதா “எங்கள் இருவர் கையிலும் துப்பாக்கி இருந்தது சுட்டுகொண்டோம்” என சொன்ன குரல் எந்த சபையிலும் ஏறவில்லை. இப்படியாக சமூகத்தில் சலசலப்பினை ஏற்படுத்தும் எந்த பிரபல நடிகர்களையும் அந்த கும்பல் விடாது, பிற்காலத்தில் அதிரடியாக கிளம்பிய ரஜினிகாந்த் கூட அமைதியாக்கபட்டார், அந்த அமைதி இன்றும் தொடர்கின்றது

பெரும் அபிமானம் பெற்று கிளம்பிய பாக்கியராஜூம் தன் முதல் மனைவி மரணத்தில் சிக்கிய சர்ச்சையும் உண்டு, பாலுமகேந்திரா எனும் மகத்தான கலைஞனுக்கும் வந்த சோதனைகள் கொஞ்சமல்ல‌. அதாவது தமிழக பிரபலங்கள் சில நம்பிக்கைகளை தகர்ப்பதாக பேசிகொண்டிருந்தால் இந்தபாடுதான் பட்டாக வேண்டும் என்பதுதான் விதி

இதில் இறுதிவரை சிக்காமல் இருந்த வித்தகர்கள் பெரியாரும் கலைஞர் கருணாநிதியும் மட்டுமே. மற்ற எல்லோரையும் அக்கும்பல் முடக்கிவிடும். குஷ்பூவிற்கு இவை எல்லாம் அன்று தெரியவில்லை. மனதில்பட்டதை பேசிவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என வெளிப்படையாகவே சொல்லிவந்த குஷ்பூவினை குறிவைத்தார்கள். இந்தியா டூடே எனும் பத்திரிகை, எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசுவதாக அவரை பேட்டி காண வந்தது.

எய்ட்ஸ் என்றால் கண்டிப்பாக பாலியல் சமாச்சாரங்களை பேசவேண்டும், தைரியமாக பேசும் நபர் வேண்டும் என்றுதான் திட்டமிட்டு குஷ்பூவிடம் வந்தார்கள். எத்தனையோ பேட்டிகளை அனுதினமும் கொடுத்திருந்த குஷ்பூ , அந்த வஞ்சக வலையில் வீழ்ந்தார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கண்ணியமாகத்தான் பதிலளித்தார். எய்ட்ஸ் நோய்க்கு இப்போதைய மருந்து பாதுகாப்பான உடலுறவு என்பதுதான் மருத்துவர் முதல் பலநாட்டு அதிபர்கள் வரை சொல்லும் தீர்வு, அதனைத்தான் குஷ்பூவும் சொன்னார்

பாதுகாப்பான உறவுதான் எய்ட்ஸ் பரவாமல் இருக்க ஒரே வழி, முறையற்ற உறவுகளில் அது மிக அவசியம் என்பதுதான் குஷ்பூ சொன்னது. அப்பத்திரிகை திருப்பி கேட்டது, முறையற்ற உறவென்றால் திருமணத்திற்கு முன்பு வைத்துகொள்ளும் உறவு தானே? குஷ்பூ சொன்னார், “இது அவரவர் விருப்பம், அவர்கள் எந்த உறவிலும் இருக்கட்டும், ஆனால் இம்மாதிரி பாதுகாப்போடு இருக்கட்டும், அதுதான் நல்லது”

“அப்படியானால் திருமணத்திற்கு முன் உறவு கொள்கின்றார்கள் என ஒப்புகொள்கின்றீர்களா?” என கிடுக்கிபிடி கேள்வியினை கேட்டது பத்திரிகை. மறுபடியும் சொன்னார் குஷ்பூ “இது அவரவர் விருப்பம், ஆனால் எல்லோரும் திருமணத்திற்கு பின்புதான் உறவு வைத்திருப்பார்கள் என சொல்ல முடியுமா? சிலர் அவசரபடலாம், அவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” என சொல்லிவிட்டு அவர் போக்கில் சென்றுவிட்டார்.

ஏராளமான பேட்டிகள் கொடுப்பதால், இது பற்றி அவர் பெரிதாக எடுக்கவில்லை.

ஆனால் பத்திரிகை தன் விஷமத்தை காட்டிற்று. அவ்வளவுதான் கலாச்சார காவலர்கள் பொங்கினர், தமிழகத்தில் யாருக்குமே கற்பில்லை என குஷ்பூ சொன்னதாக பெரும் கூட்டம் கிளம்பிற்று. குஷ்பூ தமிழகத்திலே இருக்க கூடாது என்றன சில குரல்கள், குஷ்பூவே இருக்க கூடாது என்றது சில குரல்கள்.

எங்கெல்லாம் நீதிமன்றம் கண்ணில்பட்டதோ அங்கெல்லாம் குஷ்பூ மீது வழக்கு தொடுக்கபட்டது. கிட்டதட்ட வழக்குகளின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியது. தொலைகாட்சி தொடர், குடும்பம், திரைப்படம் என பிசியாக இருந்த குஷ்பூவிற்கு நெருக்கடிகள் தொடங்கின. எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்தவர்தான் குஷ்பூ. அதெல்லாம் தனிபட்ட பிரச்சினை ஆனால் முதன் முதலாக கொந்தளித்து நிற்கும் சமூக பிரச்சினையினை பார்க்கின்றார்

நாம் என்ன சொல்லிவிட்டோம் என சிந்தித்துபார்த்தால் ஒன்றுமே இல்லை, இது பத்திரிகை விளையாட்டு என்பது புரிந்தது. தான் பேட்டியளித்தது பத்திரிகைக்கு, அவர்கள்தான் கட்டுரை வெளியிட்டார்கள், நீதிமன்றத்தில் அவர்களும் பதில்சொல்லவேண்டும் என்ற குஷ்பூவின் குரல் எல்லாம் யார் காதிலும் ஏறவில்லை. அந்த பத்திரிகையும் நைசாக நழுவியது. அதுவரை பத்திரிகை தர்மம் என்றால் என்ன? என தெரிந்த குஷ்பூவிற்கு, பத்திரிகை கிசுகிசு என்றால் என்ன? என தெரிந்த குஷ்பூவிற்கு அன்றுதான் பத்திரிகை சதி, பத்திரிகை அதர்மம் என்றால் என்னவென்று புரிந்தது.

தலைக்கு மீறி வெள்ளம் சென்றது, ஏராளமான வழக்குகள் பதியபட்டன. கிட்டதட்ட அன்று என்.எஸ் கிருஷ்ணன் இருந்த நிலைக்கு சென்றார் குஷ்பூ. ஆனால் அவரின் உறுதி அப்பொழுடதுதான் வெளிபட்டது. முடங்கவில்லை அசரவில்லை கண்ணீர் சிந்தி கதறவில்லை. மிக்க உறுதியுடன் அந்த பெரும் சவாலை எதிர்கொண்டார். மொத்த வழக்கினையும் ஒரே வழக்காக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றினார், விடாமல் துரத்தினார்கள். பின் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார் குஷ்பூ.

கிட்டதட்ட 5 வருடமாக இழுத்த இந்த வழக்கினை 2010ல் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது, இது ஒரு விஷயமே இல்லை, குஷ்பூ தவறாக ஒன்றும் சொல்லவில்லை என சொல்லி தள்ளுபடி செய்தது. உண்மையும் அதுதான் மருத்துவர்களும், ஐ.நாவின் எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பும், நம் தமிழகத்து மாத்ரூபூதம் வரை சொன்ன விஷயம்தான். பிடித்தால் அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே போட்டிருக்கவேண்டும்.

குஷ்பூவினை ஒரு காலத்தில் மனதால் காயபடுத்திய பெரும் அடையாளம் ஒருவர் பின் கால சக்கரத்தில் சிக்கி சாதாரண நபராக தெருவோரம் நடந்தது போல, குஷ்பூவினை சிக்க வைத்த அந்த பத்திரிகையும் மூடுவிழா கண்டது. கற்பு பற்றி பெரியார் என்னவெல்லாமோ பேசியிருக்கின்றார். குஷ்பூ அதில் 1% கூட பேசவில்லை, எய்ட்ஸ் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லவைத்து, சிக்கவைத்தனர் சதிகாரர்கள்.

வழக்கு நடக்கும்பொழுதும் விடவில்லை, குஷ்பூ சாமி சிலைமுன் கால்மேல் கால்போட்டு அமர்ந்தார் என்றெல்லாம் கிளம்பினார்கள். அது ஒரு சினிமா பட செட், அந்த கட் அவுட் முன்னால்தான் குஷ்பூ கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். அதுவும் அவர் காலை அவரின் இன்னொரு கால்மீதுதான் போட்டிருந்தார்

அடுத்தவர் மேலோ அல்லது சாமிபடத்தின் மீதோ அல்ல. அதனை பெரும் பிரச்சினையாக்கி மறுபடியும் சர்ச்சையாக்கியது அக்கும்பல். ஒரு கட்டத்தில் குஷ்பூ யோசிக்க ஆரம்பித்தார். ஏன்? என்னை மட்டும் அடிக்கின்றார்கள்? தமிழகத்தின் நிலைதான் என்ன? இங்கு எதுதான் சிக்கல்? வழக்கும் வீட்டிற்கும் அலைந்துகொண்டிருந்த பொழுதுதான் “பெரியார்” படத்தில் மணியம்மை வேடத்தில் நடித்தார்.

நிச்சயமாக மணியம்மை எனும் பாத்திரத்தை அப்படத்தில் கண்முன் நிறுத்தியிருந்தார் குஷ்பூ, அப்படத்தில் குஷ்பூவின் நடிப்பு பேசபட்டது. பெரியார் படத்தில் நடிக்கும்பொழுதுதான் பல விஷயங்கள் குஷ்பூவிற்கு புரிந்தது. பெரியார் போராட்டம் என்றால் இப்படியா? மத நம்பிக்கை இல்லை என ஒரு பிரபலம் சொன்னால் இப்படி எல்லாம் ஓட அடிப்பார்களா?

என்.எஸ் கிருஷ்ணன், எம்.ஆர் ராதா என பலர் கண்ட போராட்டம் அவர் கண் முன் ஓடியது. இதற்காகத்தான் தன்னையும் விரட்டினார்கள் என கண்டுகொண்டார், இனி தான் தமிழகத்தில் தொடர்ந்து வாழ தான் பெரியார் வழி இயக்கத்தில் இணைவதுதான் பாதுகாப்பு என்பது அவருக்கு புரிந்தது.

தனி குரல் என்றால் சீறுவார்கள், அது ஒரு இயக்கத்தின் குரல் என்றால் அவர்கள் அடங்குவார்கள் என்பது அப்பொழுதுதான் அவருக்கு புரிந்தது. குஷ்பூ இப்படி சிந்திக்க, கலைஞர் எனும் திமுகவின் பிதாமகன் கட்சியில் சில மாற்றங்களை செய்துகொண்டிருந்தார்.

அதாவது பெண்கள் வோட்டு என்றுமே திமுகவிற்கு குறைவு, அது ராமசந்திரனின் அதிமுகவிற்கு அதிகம், அது ஜெயலலிதாவிற்கும் தொடர்ந்தது. கட்சிக்கு பெண்கள் வாக்குகளை அதிகபடுத்தும் முடிவிற்கு கலைஞர் வந்திருந்தார். கனிமொழி, பெண் கவிஞர்கள் என பல அடையாளம்பெற்ற பெண்கள் கட்சிக்குள் வந்தனர்.

எனினும் மக்கள் அபிமானம் பெற்ற ஒரு மிகமுக்கிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு தேவைபட்டார். கலைஞரிடம் ஒரு குணம் உண்டு, மக்கள் அபிமானம் பெற்றவர்கள் யாராயினும் தன் பக்கம் அமர்த்திகொள்வார். 1950களில் இருந்தே அவரின் சாமார்த்தியம் அது.

தமிழகத்தில் பெரும் அபிமானம் பெற்றிருந்த குஷ்பூவினை அவர் கழகத்தில் சேர்க்க திட்டமிட்டார்.

(பூ பூக்கும்)

Leave A Reply

Your email address will not be published.