குஷ்புவே நமஹ 3 – ஸ்டான்லி ராஜன் – “வசூல் ராஜ மாதா குஷ்பு“

1

வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண செய்திருந்தார் குஷ்பூ.

வருஷம் 16ல் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கலுடன், ‘‘கண்ணத்தான்…” என்று கார்த்திக்கிடம் கேட்கும் குஷ்பு, முதல் மரியாதை எனக்கு என தாத்தாமுன் நிற்கும் குழந்தை தனமான குஷ்பூ, பாவாடை சட்டையில் அழகு பெட்டகமான குஷ்பூ, இரட்டை ஜடையுடன் தோன்றும் குஷ்பு என ஏகபட்ட குஷ்பூக்கள் படம் முழுக்க தெரிந்தார்கள்

கார்த்திக்கிடம் காதல் வயப்படும்பொழுது மெல்ல மெல்ல அத்திபழ கன்னத்தோடு வெட்கபடும் பொழுது கவுண்டருக்கு சென்று அடுத்த காட்சிக்கான‌ டிக்கெட்டுக்கான பணத்தை கொடுக்க சொன்னது பலரின் மனது, பூப்பூக்கும் மாதம் பாடலில் தை மாத மேகமென குஷ்பூ ஆடிய நளினத்தில் தியான அமைதியில் அமர்ந்திருந்தது கூட்டம். அப்படமே அப்படி குஷ்பூவினை ஆக்கிவைத்தபின்புதான் சின்னதம்பி அவரை நங்கூரமிட்டு நிறுத்த வந்தது. அரைத்த சந்தனம் அழகு குங்குமம் என்ற பாடலில் குஷ்பூ அப்படத்தில் அறிமுகமாகும் பொழுது தியேட்டர் ஆர்ப்பரித்தது, சிரித்த முகமாக குஷ்பூ அறிமுகமாகும் அக்காட்சியில் தியேட்டர் குதூகலித்தது.

அப்படத்தில் குஷ்பூ பல இடங்களில் ஜொலித்தார், அண்ணன்கள் முன்பு பாசமான தங்கை குஷ்பூவாக, உலகம் காண துடிக்கும் ஏக்கமான குஷ்பூவாக, சின்னதம்பியினை முதலில் வேடிக்கையாக பார்க்கும் வெள்ளந்தி குஷ்பூவாக, போவோமா ஊர்கோலம் பாடலில் அவருக்காகவே ஆண்டவன் படைத்த அந்த லொக்கேஷனின் குஷ்பூவாக அற்புதமாக நடித்திருந்தார்

அதுவும் காதல் வந்தபின், சின்னதம்பியினை தாலிகட்ட வைத்தபின் நடிப்பின் அடுத்த பரிமாணத்திற்கு சென்றார் குஷ்பூ, இறுதியில் சகோதரர்களிடம் சீறும் பொழுது நடிப்பில் ஜொலிப்பார். அந்த கோபத்திலும் அவர் முகத்தில் ஒரு அழகு தெரிந்தது தான் குஷ்பூவின் அபூர்வம், கோபத்திலும் அவர் அப்படி ஒரு அழகு. எல்லா அழகிக்கும் உச்ச அழகு என ஒரு கணம் வரும், சின்னதம்பியில் குஷ்பூ ஒரு காட்சியில் உச்ச அழகில் ஜொலிப்பார்

ஊர்சுற்றிய பின் குஷ்பூவிற்கு காய்ச்சல் வந்து, பிரபு உண்மையினை மறைத்து அடிவாங்கிய பின் அவருக்கு மாத்திரை கொடுப்பார், அந்த காட்சிதான், அதில் நொடிப்பொழுதுதான்

மெல்ல சொல்வார் பாருங்கள்

லேசாக குனிந்த தலையோடு, முகத்தில் கொஞ்சம் குறும்போடு, உதடுகளை லேசாக குவித்தபடி “சின்னதம்பி நீங்க ரொம்ப நல்லவரு” என சொல்லும் காட்சியில் அழகின் உச்சிக்கு சென்றார் குஷ்பூ, அட அந்த காட்சியினை பார்க்கும் பொழுது எல்லா கடவுளும், முப்பது முக்கோடி தேவர்களும் நம்மை ஆசீர்வதிக்கும் மங்கள இசை ஒலி காதில் கேட்கும்

இப்பொழுதும் அக்காட்சியினை பாருங்கள், மிக மிக அழகாய்ய் தெரிவார் அவர்.

படத்தில் அவர் சிரித்தால் தியேட்டர் சிரிக்கும், அவர் ஆடினால் கூட்டம் ஆடும், அவர் யோசித்தால் கூட்டம் யோசிக்கும், அவர் அழுதால் எல்லோரும் அழுதார்கள், அதுவும் கண்ணாடி மேல் குஷ்பூ நடக்கும்பொழுது எல்லோர் கண்களிலும் ரத்தமே வந்தது. தமிழர்கள் ஒவ்வொரு பிரேமாக ரசித்தபடம் என்றால் அதில் சின்னதம்பியும் ஒன்று, அப்படி அணுஅணுவாய் ரசித்தார்கள், குஷ்பூவிற்காய் என்பதை தவிர சொல்லி தெரியவேண்டியதில்லை

ஒளிப்பதிவாளர் ரவிந்தரும் குஷ்பூவினை மிக அழகாக காட்டினார் என பத்திரிகைகள் எழுதின, நிலாவிற்கு என்ன? எல்லோர் கேமராவிலும் அது அழகுதான்.

விபிசிங் பிரச்சாரம், ராஜிவ் கொலை, தமிழக அசாதாரண நிலை, புலிகள் கைது, பெரும் கலவர சூழல் எதுவும் அப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. அது தன் வழியே தன் வசூலை கொட்டிகொண்டே இருந்தது, குஷ்பூவினை காண வந்துகொண்டே இருந்தார்கள். படம் ஓடிய வசூல் கட்டியம் கட்டி சொன்னது, இனி குஷ்பூ இன்றி தமிழக சினிமா இல்லை.

அந்த வெற்றியில் அதுவரை தமிழக கனவு கன்னியாக வந்த அமலா தெலுங்கிற்கு தலைதெறிக்க ஓடினார், அங்கேயே நாகர்ஜூனாவிடம் அடைக்கலமானார், அதன் பின் இப்பக்கம் வரவே இல்லை. மிக பெரும் வரவேற்பான நடிகையாக இருந்த நதியாவும் குஷ்பூ எனும் பெரும் நதிமுன் நிற்க முடியாமல் மறைந்தது.

இன்று பெரும் நடிகையாக ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன் அன்று எழமுடியாமல் போனதற்கு குஷ்பூ பல வழிகளில் காரணம். தமிழக திரையின் ஏகபோக நாயகியானார் குஷ்பூ, அவரில்லாத படங்கள் இல்லை, எல்லா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வார்த்தைகளும், பேச்சுகளும் குஷ்பூ இன்றி முடிவதில்லை.

எல்லோருக்கும் பிடித்த குஷ்பூவினை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பிடித்திருந்தது, அப்படத்திற்கான சிறந்த நடிகை விருதையும் தமிழக அரசு வழங்கியது. குஷ்பூ காட்டில் அடைமழை கொட்ட தொடங்கியது, இனி அவரோடு நடிக்காவிட்டால் தங்கள் ஸ்டார் பட்டம் நிலைக்காது என உச்ச நட்சத்திரங்கள் நினைக்க தொடங்கின

குஷ்புவோடு நடித்த எந்த புதுமுக நடிகரும் சூப்பர்ஸ்டார் ஆகும் வாய்ப்பும் இருந்தது, குஷ்பூவின் பிரபலம் அப்படி

சின்னதம்பிக்கு பின் பிரபுவோடு கிழக்கு கரையில் நடித்தார், அதன்பின் வசூல் கணக்கில் தயாரிப்பாளர்கள் ரஜினி குஷ்பூ, கமல் குஷ்பூ என்றே கணக்கிட்டனர், காலம் அப்படித்தான் குஷ்பூவினை உயர நிறுத்தியிருந்தது,

சின்னதம்பிக்கு பின் அடுத்த உயரத்திற்கு சென்றார் குஷ்பூ, தமிழகத்தின் நிரந்தர நடிகை ஆனார். எல்லா நடிகைகளையும் ஓரங்கட்டிவிட்டு, புதுமுகம் யாருமே தேவையில்லை என தமிழ்திரையுலகம் குஷ்பூவிடம் மண்டியிட்டு சரணடைந்தது. சின்னதம்பி குஷ்பூவினை எல்லோரும் ரசித்தார்கள், பத்மினி கால ரசிகர்கள் கூட இப்படி சொன்னார்கள்

“கொஞ்சம் உயரமாய் இருந்திருந்தால் அப்படியே பத்மினி போலவே இருந்திருப்பார்..”, சிவாஜி பத்மினி ஜோடிக்கு பின், பிரபு குஷ்பூ ஜோடி பேசபட்டது இப்படித்தான். பத்மினி எனும் பேரோளியின் அடையாளமும் உயரமும் மிக பெரிது, அசால்டாக இரு படத்திலே அதனை தாண்டினார் குஷ்பூ. இரு மாபெரும் வெற்றிக்கு பின்னால் ரஜினி எனும் உச்சத்துடன் ஜோடியாகும் முன்னால் அந்த இடைவெளியில் சத்யராஜுடன் பிரம்மா படத்தில் வந்தார்

அதில் அந்த ஜெனிபர் குஷ்பூவினை யாரால் மறக்க முடியும்? அப்படம் வந்தபின் கான்வென்ட் எல்லாம் குஷ்பூவால் நிரம்பியதாக எல்லோரும் எண்ணி கொண்டார்கள். கிராண்ட்ஸ்லாம் நாயகிகள் மோனிகா செலஸையும், ஸ்டெபிகிராப்பையும் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களை குஷ்பூவாக கண்டது தமிழகம். அப்படம் குஷ்பூவின் பிரபலத்தை இன்னும் கூட்டியது, குஷ்பூ கவர்ச்சி நடிகை அல்ல, அவர் குறும்பும் அழகும் கலந்த ஒரு நாயகி,

ஆனாலும் ஒரு பாடல் அப்படத்தில் சர்ச்சையானது

அதன்பின் அம்மாதிரி பாடல்களில் குஷ்பூ வரவே இல்லை, அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. வருடம் 16 வந்த பின் அடுத்த பல‌ ஆண்டுகள் குஷ்பூவின் கொடி உயர பறந்தது, அதனை அசைக்க யாருமில்லை, தனிகாட்டு ராணியாக கோலோச்சினார். எல்லா நடிகைகளும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பின்புதான் வெற்றி பெறுவார்கள், ஆனால் முழுவெற்றி பெற்றபின்புதான் ரஜினியுடன் பாண்டியன் படத்தில் வந்தார் குஷ்பூ.

ரஜினியும் அப்பொழுதே சூப்பர் ஸ்டார் இடத்தில் அமர்ந்திருந்தார், புது நடிகையும் ஆனால் வெகு பிரபலமாகிவிட்ட குஷ்பூவும் இணைந்து நடிப்பது பெரும் எதிர்பார்ப்பினை கூட்டிற்று. ரஜினியின் புகழுக்கு கொஞ்சமும் குறையாமல் புகழை அப்படத்தில் அசால்ட்டாக குவித்தார் குஷ்பூ. அது மங்கா புகழுக்கு அவரை அழைத்து சென்றது. லேடி சூப்பர்ஸ்டார் ஆகிகொண்டிருந்தார் குஷ்பூ, ரஜினி வசூல் சக்கரவர்த்தி என்றால் குஷ்பூ வசூல் ராஜமாதா எனும் அளவிற்கு காலம் அவரை கொண்டாட வைத்தது.

ரஜினியோடு குஷ்பூ நடித்த படங்கள் வந்தன, பெரும் ஆரவார சத்தங்கள் எல்லாம் தமிழகத்தில் கேட்டன, அது குமரிமுனை அலையோசை போல விடாமல் ஒலித்துகொண்டே இருந்தது..

(தொடரும்..)

1 Comment
  1. Nm says

    Keerthi suresh kaalathil irunthu kondu innu nee kushboo paththi pesi kondirukire.

Leave A Reply

Your email address will not be published.