குஷ்புவே நமஹ 4 -ஸ்டான்லி ராஜன் “குஷ்புவுக்குதான் கோவில்!“

0

சின்னதம்பிக்கு பின் மாதம் ஒரு குஷ்பூ படம் வந்து கொண்டே இருந்தது, பவுர்ணமி வரும்பொழுதெல்லாம் குஷ்பூ படமும் வெளிவந்துகொண்டிருந்தது, அவ்வளவு வேகமாக நடித்தார் குஷ்பூ, எல்லா நாட்களிலும் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. சின்னதம்பியின் பெருவெற்றியினை கொண்டாடிகொண்டிருக்கும் பொழுதுதான் 13 ஏப்ரல் 1992ல் சிங்காரவேலன் படம் வந்தது.

மிக அழகான குஷ்பூ வந்த படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தில் அவர் தலையில் தொப்பியோடு ஒரு நடை நடப்பார். அந்த கம்பீரமான, அசால்ட்டான, ஸ்டைலான நடையினை யாராலும் நடக்க முடியாது. குஷ்பூ ரோஜா பூ கூட்டம்போல‌ போல இருந்த படம் அது.

கமலஹாசனுக்கு போட்டியாக நடிப்பு, நடனம் , அழகு என மிக பெரும் சவாலை கொடுத்திருந்தார். சில இடங்களில் கமலஹாசன் திணறியதும் தெரிந்தது, சிங்காரவேலன் படம் அவரை சிங்கார தேவதையாக கொண்டாட வைத்தது. அடுத்தடுத்து சிக்ஸர்களாக விளாசும் பேட்ஸ்மேன் போல அடுத்து அட்டகாசமான படம் கொடுத்தார் குஷ்பூ, அது 1992 ஜூன் மாதம் ‘அண்ணாமலை’ படமாக வந்தது. எம்ஜிஆர் காலத்திற்கு பின் ரஜினி, அதுவும் 1990க்கு பின் வேகமாக வளர்ந்தார். அந்த வேகத்தினை குஷ்பூவின் புகழும் வேண்டியிருந்தது

‘அண்ணாமலை’ படத்தில் குஷ்பூ மிக சிறப்பான இடத்தினை பெற்றார், அந்த சுப்புலட்சுமியாக அவர் சிரித்த சிரிப்பிற்கே படம் ஹிட், படத்தின் கதை, ரஜினி எல்லாம் அடுத்த வகை.

படத்தில் குஷ்பூ ரஜினியின் இளவயதிற்கும் பொருந்தினார், பிற்பாதி முதிய வயதிற்கும் இளநரையுடன் அட்டகாசமாக பொருந்தினார். கடந்த வருடம் கபாலியில் ரஜினி முதியவராக வந்தபொழுது, எல்லோர் மனதிலும் இவருக்கு ஜோடியாக அண்ணாமலை குஷ்பூ அல்லவா வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக தோன்றியது அதனால்தான்.

அந்த அளவிற்கு ரசிகர் மனதில் இடம்பிடித்தார் குஷ்பூ, இன்றும் காலா படத்தின் போஸ்டரை கண்டால், அடடா இதில் குஷ்பூ நடித்தால் பொருத்தமாக இருக்குமே என ஏங்குவதுதான் தமிழன் உள்ளம், குஷ்பூவின் தாக்கம் அப்படி. பின்னாளில் மூப்பனாருக்காக ரஜினி சைக்கிள் சின்னத்தை ஆதரித்தபொழுது, அண்ணமலை சைக்கிளோடு போஸ் கொடுத்தபொழுது, இச்சின்னம் ரஜினிக்கு மட்டுமா? குஷ்பூவிற்கு பங்கு இல்லையா? என்றெல்லாம் குரல்கள் கேட்டன.

அண்ணாமலைக்கு பின் குஷ்பூ வந்த அனைத்து பாடல்களும் தமிழகத்து தேசிய கீதமாயின, எல்லா தியேட்டர், டிவி, அன்றைய கேபிள் டிவி, திருட்டு கேசட், ரேடியோ என எல்லா இடத்திலும் குஷ்பூ பாடல்தான் இருந்தது. அதுவும் வைரமுத்து எழுதிய கொண்டையில் தாழம்பூ பாடல், தமிழகத்து தேசிய பாடல் ஆயிற்று, “இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி” என்ற கவிஞரின் வரிகள் 100% அக்காலத்தில் உண்மையாய் இருந்தது

வருஷம் 16ல் அழகு நடிகை, சின்னதம்பியில் முழு தேவதையாக ஜொலித்த குஷ்பூ, அண்ணாமலைக்கு பின் ரசிகர்களால் இன்னமும் உயர்த்தபட்டார். ஆம், அவருக்கு அந்த காலத்தில்தான் கோயில் கட்டபட்டதாக செய்திகள் வந்தன, குஷ்பூ நமஹ, குஷ்பாம்பிகை போற்றி என்ற ஸ்லோகங்கள் அப்பொழுதுதான் கேட்டன. எத்தனையோ நடிகைகளை கொண்டாடிய தமிழகம் தான், எத்தனையோ நடிகைகள் கோலோச்சிய இடம்தான் , ஆனால் கோயில் எந்த நடிகைக்கும் இருந்ததுமில்லை, இருக்க போவதுமில்லை.

அந்த அளவிற்கு மிக அபிமான ரசிகர்கள் இருந்தார்கள், குஷ்பூ முகத்தில் கடவுளை காணும் அளவிற்கு குஷ்பூ அவர்களை ஆக்கிரமித்திருந்தார். திருச்சியில் அக்கோயில் கட்டபட்டதாக செய்திகள் வந்தன, சிலர் அதெல்லாம் சும்மா என்பார்கள், நெருப்பின்றி புகையாது, விஷயம் நடந்திருக்கின்றது. இப்படியாக தெய்வம் என கொண்டாடபட்டார் குஷ்பூ, எந்த நடிகையும் எட்டாத தெய்வம் எனும் உயரத்தை எட்டிய ஒரே நடிகை இன்றுவரை குஷ்பூதான்.

அண்ணாமலையினை தொடர்ந்து, ரஜினியின் பாண்டியன் படமும் வந்தது, அதில் ஜொலித்த குஷ்பூ, ஒரு பாடலில் அபூர்வ அழகாக தெரிந்தார், “அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ..” பாடலில் எல்லா உடையிலும் வருவார், எல்லாமே அழகு என்பதுதான் ஆச்சரியம்.

அதுவும் சுற்றிய புடவையில் தலையில் சூடிய மல்லிகையோடு அவர் வந்த காட்சியில் அட ஒரு கோயில் என்ன? உலகெல்லாம் கோயில் கட்டலாம் என தோன்றும், அப்படி ஒரு அழகு

இவருக்கு கோவில் கட்டாவிட்டால் பின் யாருக்கு கோவில் என்ற அளவிற்கு குஷ்பூ மின்னிகொண்டிருந்தார்

புகழின் உச்சியினை வெறும் 23 வயதில் எட்டிபிடித்தார் குஷ்பூ, எந்த நடிகைக்கும் அது இங்கு சாத்தியமே இல்லை, புகழின் சிகரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார், அதன் பின் அடைய எந்த உயரமுமில்லை.

தமிழகம் வந்தாயிற்று, சம்பாதித்தாயிற்று, வந்த வேலை முடிந்தது என திரும்பி செல்வதுதான் பெரும்பாலும் மும்பை நடிகைகள் வழக்கம் ஆனால் குஷ்பூவின் மனம் வேறுமாதிரியானது, எவ்வளவு உறுதியும் , நம்பிக்கையும் கொண்ட மனமோ அவ்வளவிற்கு நன்றியும் கொண்டது

தனக்கு கோயில் கட்டுமளவு சென்ற தமிழகத்தை பிரிய அவர் தயாரில்லை, இனி வாழ்வு இந்த தமிழகத்தில் தான் என முடிவே செய்தார். தமிழக ரசிகர்களும் அவர் அமெரிக்கா சென்றாலும் இழுத்து வந்து கேமரா முன் நிறுத்துவது என்பதில் கருத்தாய் இருந்தனர்

குஷ்பூ தமிழக பெண் ஆனார், தமிழக அடையாளமும் ஆனார், எங்கு சென்றாலும் தமிழ்பெண்ணாக தழைய முடிந்த சேலையில்தான் வருவார், இன்றும் அந்த பழக்கமே அவரிடம் உண்டு. தமிழகம் தனக்கான வீடு என கண்டுகொண்டார், தொழிலில் பெருவெற்றி பெற்ற அவர், அதுவும் உச்சத்தில் இருந்த அவர் வாழ்வின் அடுத்தகட்டம் செல்ல விரும்பினார். அது எல்லா பெண்களுக்கும் வரும் ஆசை, எல்லா நடிகைகளுக்கு வரும், அக்கால ஜானகி முதல் ஷோபா, ஷாலினி , ஜோதிகா வரை வந்த ஆசை புகழ் சிகரத்தின் உச்சியில் இருந்த குஷ்பூவிற்கும் வந்தது

தன் விருப்பபடி அவர் திருமணம் செய்ய அவர் தயாரான பொழுதுதான் பெரும் புயல் அவர் வாழ்வில் வீசியது. இன்னொரு நடிகை என்றால் அந்த புயலில் காணாமலே போயிருப்பார், அல்லது தற்கொலை அது இது என வாழ்வினை முடித்திருப்பார்

அதுவரை அழகு பெண்ணாக மட்டும் அறியபட்ட குஷ்பூ, மிக தைரியமான பெண்ணாக மாறியது அக்கால கட்டத்தில்தான். நிச்சயமாக அவருக்கு அது சோதனையான காலகட்டம், அடுத்த மாநிலம், அடுத்த மக்கள், ஆனால் அவருக்கு சோதனையினை கொடுத்தது மிக பெரிய இடம், அதில்தான் நம்பர் 1 நடிகையாக குஷ்பூவினால் நிலைக்க முடிகின்றது

ஆனால் குஷ்பூவின் விதி , அவரின் திருமணம் தொடர்பாக பெரிய இடத்தோடு மோத வைத்தது, அவர்கள் திரைதுறையின் மிக பெரிய அடையாளம்,

அவர்களிடம் கொஞ்சம் முறைத்தாலும் திரைவாழ்வே கேள்விகுறி, கோபுரத்தில் இருக்கும் குஷ்பூவினை நொடியில் தரைக்கு கொண்டுவரும் வல்லமை படைத்தவர்கள் அவர்கள், அங்குதான் தனிபட்ட வாழ்வின் பெரும் ஏமாற்றத்தை கண்டார்.

ஏமாற்றம்தான், வலிதான், பெரும் சோகம் தான் ஆனால் வெறும் 23 வயது பெண்ணாயினும் மிக நிதானமாக அச்சிக்கல்களை கடந்தார்

அந்த சலசலப்புகள் அவர் திரைவாழ்வினை பாதிக்காதவாறு பார்த்துகொண்டார், ஆனால் மனதிற்குள் அழுதிருக்கலாம், துடிக்க துடிக்க அழுதிருக்கலாம். மீன்கள் அழுவதும், விண்மீன்கள் தங்களுக்குள் எரிவதும் யாருக்கும் தெரியாது, அப்படி குஷ்பூ கண்ணீரை தனக்குள் புதைத்துகொண்டு திரைவாழ்வினை தொடர்ந்தார்

ஆனால் அவரின் கண்ணீர் நியாயமானதும் உண்மையானதுமாக இருந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரின் கன்ணீருக்கு காரணமானவர்கள் அப்படி பெரும் வீழ்ச்சி கண்டிருக்க மாட்டார்கள், அவ்வளவு பெரும் சிக்கலையும், அவமரியாதையினையும் கண்டிருக்கமாட்டார்கள்

குஷ்பூவினை அழவைத்தவர்கள் பின்னாளில் கதற கதற கண்ணீர் விட்டதையும், பெரும் இடத்தில் இருந்த அவர்கள் சாலையோரம் தனியாக அடிமை போல நடந்த்து சென்றதையும் தமிழகம் காணத்தான் செய்தது, குஷ்பூவின் கண்ணீரில் சில உண்மை இருக்கலாம் என உலகம் தனக்குள் முணுமுணுத்துகொண்டது.

தனிபட்ட உறவுகள் அவரை ஏமாற்றியதே தவிர, திரையுலகம் அவருக்கான சிகப்பு கம்பளத்தை அப்படியேதான் வைத்திருந்தது

அவரை அசைக்க யாராயினும் முடியவில்லை, சோகங்களை தன்னோடு புதைத்து கொண்டு நடித்துகொண்டே இருந்தார். அவருக்கான இடம் அப்படியே இருந்தது, நடிகர்கள் தான் மாறிகொண்டிருந்தார்கள். குஷ்பூ மனமும் அவர் அழகும் மாறவே இல்லை, அதுபோல தமிழகத்தை விட்டு போகவே மாட்டேன் எனும் அந்த வைராக்கியம் நாளுக்குநாள் அவர் மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது.

குஷ்பூ எனும் அழகு சூரியன் சினிமாவில் ஒளிவீசிகொண்டே இருந்தது

(பூ பூக்கும்)

Leave A Reply

Your email address will not be published.