குஷ்புவே நமஹ 6 -ஸ்டான்லி ராஜன் ] குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்!

0

மணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் “திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து எவ்வளவு? வருமானம் எவ்வளவு? என கேட்க மாட்டார்கள், மாறாக எத்தனை குழந்தைகள் என்றுதான் கேட்பார்கள், அவ்வகையில் நான் ஆசீர்வதிக்கபட்டவள்”.

எவ்வளவு பக்குவமானமான வார்த்தைகள்? குஷ்பூவிடம் அந்த 30 வயதிலே அவ்வளவு நிதானம் வந்திருந்தது அனுபவம் இருந்தது. சர்ச்சைகள் நிறைந்த திரையுலக தம்பதியர்கள் நடுவே இன்றுவரை திருமணபந்தத்தை மிக சிறப்பாக தொடரும் மிகசில நடிகைகளில் குஷ்பூவும் ஒருவர். பொதுவாக உச்சநடிகைகள் திருமணம் முடித்தால் அதோடு திரையுலகம் விட்டு வெளியேறிவிடுவார்கள், எப்பொழுதாவது கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு வருவார்கள். உலகமும் அவர்களை சுத்தமாக மறந்திருக்கும், இதுதான் எல்லா நடிகைகளுக்கும் திருமணத்திற்கு பின் ஏற்படும் நிலை. இதில் தப்பிய உச்ச நடிகைகள் மிக குறைவு.

ஆனால் வைரம் என்பது எங்காவது ஜொலித்துகொண்டேதான் இருக்கவேண்டும். தங்கம் எங்காவது மின்னிகொண்டே இருக்கவேண்டும், அவை இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்தான் சிறப்பு. குஷ்பூவும் கேமரா முன் நின்றால்தான் சிறப்பு என கோடான கோடிபேர் விரும்பினார்கள். வெள்ளிதிரையில் உச்சம் பெற்ற குஷ்பூ தன் அடுத்த இன்னிங்ஸை சின்னதிரையில் துவக்கினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி,உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம்,மலையாளம் என குஷ்புக்கு பத்து மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும் என்பதால் அவருக்கு எதுவுமே சிக்கல் இல்லை, குஷ்பூவின் பலம் அது. இன்றைய பிக்பாஸ் போல 2000களில் குரோர்பதி ஜூரம் டிவிக்களை பிடித்திருந்தது, வடக்கே அமிதாப்பச்சன் பின்னியெடுத்தார். இங்கே சன்டிவியில் சரத்குமார் நடத்திகொண்டிருந்தார்

ஜெயா டிவி ஜெயலலிதாவின் நேரடி கட்டுபாட்டில் இருந்த காலமது. மக்கள் அபிமானம் பெற்ற நடிகை நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும் என்பது அவரின் திட்டமாக இருந்தது, ஒரே சாய்சாக குஷ்பூவினை தேர்ந்தெடுத்தார்கள். குஷ்பூ தொகுத்து வழங்கிய முதல் டிவி நிகழ்ச்சி அதுதான். குஷ்பூவின் புன்னகை கலந்த முகம் ரசிகர்களை கவர்ந்தது, குறிப்பாக ஜாக்கெட்டிலே அசத்தினார் குஷ்பூ.

ஜெயலலிதாவிற்கு தொடக்கத்தில் குஷ்பூ மீது நல்ல அபிப்ராயமிருந்தது, சுதந்திர ஜெயலலிதாவாக இருந்திருந்தால் குஷ்பூ இன்று அரசியலில் எங்கோ செல்லும் அளவிற்கு காலம் மாறியிருக்கும். ஆனால் சந்தியா உயிரோடு வந்தாலே அணுகமுடியாத ஜெயலலிதா என்ன செய்ய முடியும்? திட்டமிட்டு குஷ்பூ ஜெயாவினை நெருங்கமுடியாத அளவு பல காட்சிகள் நடந்தன.

பின்னாளில் திமுகவில் குஷ்பூவிற்கு அஞ்சி நடந்த உள்ளடி வேலைகள் அதிமுகவில் அன்றே நடந்தன. காரணம் பயம், பெரும் மக்கள் அபிமானம் பெற்ற குஷ்பூ கட்சியில் நல்ல இடம் பெற்றுவிட்டால் அடுத்து அவர்தான். விடுமா கும்பல்கள்?? ஆனால் இவற்றை எல்லாம் குஷ்பூ பெரிதாக எடுத்துகொள்வதில்லை. அவரின் பாதை வேறு நோக்கம் வேறு.

இந்த காலகட்டத்தில் சினிமாவிலும் பிசியாக இருந்தார் குஷ்பூ. அதுதான் ஆச்சரியம், சினிமா வாய்ப்புகளும் குவிந்தபடியே இருந்தன. பல டிவி ஷோக்களில் நடுவராகவும் அழைக்கபட்டார், பின்னாளில் பல நிகழ்ச்சிகளை குஷ்பூவிற்காக அமைக்கபட்டன‌. நிச்சயமாக சொல்லலாம், சின்னதிரையில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற ஒரே நடிகை அவர்தான், அது இன்றைய நிஜங்கள் வரை தொடர்கின்றது

ஒரே நேரத்தில் சினிமாவிலும், சின்னத்திரையிலும் ஓடிகொண்டிருந்த ஒரே நடிகை குஷ்பூதான், நெடுநாள் வரை அவர்தான். பின்புதான் பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் வந்தார். ஜனனி குங்குமம் என மிக சிறந்த சீரியல் நடிகையாகவும் இருந்த குஷ்பூவினை பாலசந்தர் தன் கல்கி தொடரில் சின்னதிரையில் நடிக்கவைத்தார். குஷ்பூவிற்கும் அது நல்ல நடிப்பு பெயரை பெற்றுகொடுத்தது. பன்முக நடிகை, சின்னதிரை நடிகை. இயக்குநரின் மனைவி என எப்பொழுதும் சினிமா உலகிலே இருந்த குஷ்பூ தன் அடுத்த நிலைக்கு சென்றார்.

தயாரிப்பாளர் ஆனார் குஷ்பூ.

இது எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் குஷ்பூவிற்கு காலம் அந்த வாய்ப்பினை வழங்கியிருந்தது “கிரி” எனும் படம் மூலம் தயாரிப்பாளர் இடத்திற்கும் வந்து அமர்ந்தார். காற்று அவர் பக்கம் வீசி கொண்டே இருந்தது. சினிமாவின் எல்லா உயரிய இடங்களையும் அடைந்து, கடந்து சென்றுகொண்டிருந்தார் குஷ்பூ. ஆனால் வாழ்க்கை அப்படியே செல்லுமா என்ன? எல்லோருக்கும் சோதனைகாலம் என்று உண்டு அல்லவா? அது குஷ்பூவினை மட்டும் விட்டுவிடுமா?

மனதில் பட்டதை பேசும் இயல்பு குஷ்பூவிற்கு அப்பொழுதே உண்டு, தனக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் சட்டென்று சொல்லிவிடுவார் அதில் ஒளிவுமறைவே இல்லை. இன்றளவும் தன் பிறந்தநாளையும் வயதினையும் கூட அவர் மறைத்ததில்லை. தன் நண்பர்கள் வட்டம், பிடித்தவர்கள் வட்டம் தான் ரசித்தவர்கள் வட்டம் என எல்லாமும் அவர் வாழ்வில் மறைக்கபட்டதில்லை

இட்லிக்கு குஷ்பூ இட்லி அடைமொழியிட்டு கொண்டாடியபொழுது குஷ்பூவிடம் இட்லிபற்றி கேட்டபொழுது கூட, அது அவ்வளவு விருப்ப உணவு இல்லை என்றுதான் சொன்னார். “அய்யோ இட்லி தமிழரின் உணவு, அதில் தன் பெயரிட்டு அழைக்கும்பொழுது எவ்வளவு கவனமாக பதில் சொல்லவேண்டும்” என்ற எதிர்பார்பெல்லாம் அவரிடம் இல்லை இதுதான் குஷ்பூ.

அந்த குஷ்பூவிற்கு சோதனை 2005ல் இந்தியா டுடே பத்திரிகை வடிவில் வந்தது. எத்தனையோ பேட்டிகளை கொடுத்த குஷ்பூவினை அதில் வசமாக சிக்க வைத்தார்கள்

யார் சிக்க வைத்தார்?

குஷ்பூவிற்கு பெரும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை, பெரியார் வழி. எந்தவிதமான பெண்ணடிமை தனத்திற்கும் கட்டுபட்டிதனத்திற்கும் அவர் கட்டுபட்டவர் அல்ல‌. ஒரு பிரபலம் இப்படி துணிச்சலாக பெரியார், திராவிட கருத்த்துக்களை சொல்லிகொண்டிருப்பது பொறுக்கவில்லை, அதுவும் மகா பெரும் கூட்டத்தின் அபிமானியாக குஷ்பூ வலம் வந்து சொன்னபொழுது அவர்களுக்கு பொறுக்க முடியா சூழல்.

வசமாக சிக்க வைக்க முடிவெடுத்தார்கள், இவ்வளவிற்கும் குஷ்பூ தவறாக ஒன்றும் பெரிதாக சொல்லிவிடவில்லை. அவர் சொன்னதன் அர்த்தத்தை மாற்றி பிரச்சினையினை பெரிதாக்கினார்கள். பொன்போன்ற குஷ்பூவின் இன்னொரு இரும்பு முகம் எவ்வளவு உறுதியானது என மொத்த இந்தியாவும் அதில்தான் கண்டது.

அப்படி என்ன நடந்தது

(பூ பூக்கும்)

Leave A Reply

Your email address will not be published.