என்னது… நடிக்கக் கூடாதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கவலை!

0

நம்மை சுற்றி சுற்றி ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் எடுத்து முடிப்பதற்கே இந்த ஜென்மம் போதாது என்று நம்புகிற இயக்குனர்களால் மட்டும்தான் அரைத்த மாவுக்கு விடை கொடுக்க முடியும். பெண் இயக்குனர்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதுமே ஷார்ப்! தற்போது அவர் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம், நம்மை சுற்றி நடந்த ஒரு அதிர்ச்சியூட்டிய சம்பவத்தின் உயிரோட்டம்!

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட மூச்சடைத்துப் போகிற அளவுக்கு நம்மையெல்லாம் உலுக்கி எடுத்த சம்பவம், சென்னை வெள்ளம். ஒரே நாளில் பல கோடீஸ்வரன்களை பிச்சைக்காரன் ஆக்கியது அந்த வெள்ளம். அதுமட்டுமா, தப்பிக்க வழியில்லாமல் ஜல சமாதி அடைந்தவர்கள் கூட உண்டு.

அதில் ஒரு கதையைதான் படமாக்கியிருக்கிறாராம் லட்சுமிராமகிருஷ்ணன். இப்படி உயிரோட்டமான கதைக்கு பட்ஜெட் ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே லட்சுமியின் கணவர் ராமகிருஷ்ணன் இந்த கதையை படமாக்க முன் வந்திருக்கிறார். அவர் போட்ட முதல் கண்டிஷனே படத்தில் வரும் அந்த முக்கியமான கேரக்டரில் லட்சுமி நடிக்கக் கூடாது என்பதுதான். ஏன்?

தினந்தோறும் பதினொரு லட்சம் லிட்டர் தண்ணீரை செலவழித்து படம் எடுத்திருக்கிறார்கள். கேமிராவோடு ஒரு குழுவே தண்ணீருக்குள் இறங்கி நின்று வேலை பார்க்க வேண்டிய தேவை. அந்த நேரத்தில் தானே நடித்து, தானே சொட்ட சொட்ட மேலேறி வந்து டைரக்ஷன் பண்ணுவது எவ்வளவு கஷ்டம்? அதனால்தான் வேண்டாம் என்றாராம் ராமகிருஷ்ணன். மீறி நடிச்சா நோ பைனான்ஸ் என்று அவர் அச்சுறுத்துகிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை.

மனமில்லாமல் அந்த கேரக்டரை வேறொரு நடிகைக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன். படத்தின் மிக முக்கிய ரோலில் ஆடுகளம் கிஷோர் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க பரவசப்படுத்துகிற ஒரு காதல் கதைதான் இது. கொஞ்சம் சோகமும் இருக்கும் என்கிறார் லட்சுமி.

இந்தப்படத்திற்காக ஐம்பது லட்சத்திற்கு செட் போட்டிருக்கிறார்கள். “முப்பத்தைந்து லட்சத்தில் முழு படமே எடுக்கிற ஆள் நான். ஆனால் செட்டுக்கே இவ்வளவு செலவாகிருச்சு” என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் முகத்தில் ஒரு படைப்பை அழகியலோடு இறக்கி வைத்த நிம்மதி தெரிகிறது.

லட்சுமி, ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்பதுதான் எழுதப்படாத தியரியாச்சே?

Leave A Reply

Your email address will not be published.