ஏழுகோடி சம்பளம்! விட்டுக் கொடுத்த லாரன்ஸ்!

0

பணத்தை ‘தண்ணீராக’ நினைத்து செலவு செய்வது வேறு. பணத்தை தண்ணீருக்காக செலவு செய்வது என்பது வேறு. ஒவ்வொரு ரூபாயையும் அத்யாவசிய தேவைக்காக செலவு செய்வதுதான் அந்த பணத்திற்கு கொடுக்கும் மரியாதையும் கூட! அப்படி தனது சம்பளத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்காக செலவு செய்யும் லாரன்ஸ், சமயங்களில் சினிமா நெருக்கடிக்காகவும் பெரும் தொகையை விட்டுக் கொடுக்க நேர்கிறது. அப்படி நேர்ந்த ஒரு விஷயம்தான் இது.

‘மொட்டை சிவா கெட்ட சிவா’ படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகிறது. படத்தின் முதல் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி, இந்த படத்தை வேந்தர் மூவிஸ் மதனுடன் இணைந்து தயாரித்தார். அதற்கப்புறம் மருத்துவ கல்லூரி பண மோசடி தொடர்பாக சிறைக்கு சென்றுவிட்டார் மதன். இந்த நிலையில்தான் படம் வருமா? என்கிற டவுட் வந்தது கோடம்பாக்கத்தில். பெரும் போராட்டம். பெரும் பின்னடைவு. பெரும் சோகம்… எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சந்தித்து உருக்குலைந்து போகிற கண்டிஷன்.

படம் வருமா? வராதா? என்கிற சந்தேகம் படத்தில் பங்குபெற்ற அத்தனை பேருக்கும் இருந்த நேரத்தில்தான், முதல் பிள்ளையார் சுழியை போட்டு தடைகளை உடைத்தார் லாரன்ஸ். யெஸ்…. இந்தப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுத்ததுடன் மேலும் சில கோடிகளை கொடுத்து உதவியதாக கூறுகிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அம்மா கிரியேஷன்ஸ் சிவா.

கூட்டி கழிச்சு கணக்குப் போட்டாலும் சுமார் ஏழு கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்கிறார்கள். ஏழு கோடின்னு எழுதிக்கலாமா என்று லாரன்சிடமே கேட்டோம். புன்னகைத்தவர், “இதே சினிமாவில்தான் நான் சம்பாதிச்சேன். இதே சினிமாவுக்காக கொடுக்குறேன். அது எத்தனை கோடியா இருந்தா என்ன? மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்றார்.

நடிச்ச படத்தில சம்பள பாக்கின்னா, படத்தையே நிறுத்துற ஹீரோக்களே… காதுல விழுதா லாரன்ஸ் பேச்சு!

Leave A Reply

Your email address will not be published.