லென்ஸ்- விமர்சனம்

0

கம்ப்யூட்டர்ல கடலை போடுறவன். ஆன்லைன்ல ஆப்பம் தேடுறவன். இன்டர்நெட்ல இனிப்பு தின்கிறவன் என எல்லாரும் ஒருமுறை பார்க்க வேண்டிய படம். அதற்கப்புறம் நாலு மணி நேரமாவது உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய படம். கருத்து சொல்றேன் பேர்வழின்னு குரல்வளையை கடிக்காமல், ஒரு ஆன்லைன் ஆபத்து கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன். (ஆனால் இந்த நல்ல படத்திற்கு தியேட்டர்களில் ஒரு ஷோவுக்கு மேலில்லை. பல ஊர்களில் இப்படமே இல்லை. இன்னொரு பாடாவதி காமெடி படத்திற்கு ஆளே இல்லாத தியேட்டரில் பாப்கார்ன் வறுத்துக் கொண்டிருக்கிறார்கள்)

அரைகுறை படங்கள் ஆயிரம் பார்த்திருப்போம். ஆனால் இரண்டு அறைகளுக்குள்ளேயே படம் முடிந்துவிடுகிறது. துளி அலுப்பு தட்ட வேண்டுமே? ம்ஹும். அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை.

முதல் காட்சியிலேயே டிரஸ்சை அவிழ்த்துப் போட்டுவிட்டு பப்பரக்கா என்று கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து சாட் செய்கிறார் ஹீரோ. ஐயே… சிக்கிட்டோமோ என்று நினைத்தால், ஆபாசமில்லாத ஆசாபாசப்படம் என்ற கணக்கில் சேர்ந்து விடுகிறது லென்ஸ்! குடும்பம் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சாட்டிங்கில் பெண்களை மயக்குவது. அவர்களிடன் ஆபாசப்படங்களை ரசிப்பதுதான் பொழுதுபோக்கு. அப்படியொரு சாட் சமயத்தில் எதிர்முனையில் வரும் ஒரு பெண், பெண்ணல்ல… ஆண் என்பது தெரிந்து திகைக்கிறார் மனுஷன். அவன் போடும் கண்டிஷன்தான் அதைவிட திகைப்பு. நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன். அதை லைவ்வா நீ பார்க்கணும் என்பதுதான் அது.

முடியாது என்று மறுக்கும் ஜெயப்ரகாஷுக்கு இன்னொரு அதிர்ச்சி. இவர் தன் மனைவியுடன் இருக்கும் அந்தரங்க படத்தை போட்டுக் காட்டுகிறான் அவன். அப்புறம் என்ன நடந்தது? இவருக்கும் அவனுக்குமான தொடர்பு என்ன? என்பதுதான் மிச்சக்கட்ட உச்சக்கட்ட அதிர்ச்சி.

முதலில் வில்லன் என்று நினைக்கும் ஆனந்தசாமி அதற்கப்புறம் பரிதாபசாமியாகி நம் கண்களில் குளம் நிரப்புகிறார். அவருக்கும் அவரது மனைவிக்கும் நிகழும் அவலம், அதன் பின்னணியெல்லாம் திடுக் திடுக்! வாய்பேச முடியாத அஸ்வதி லால் சரியான பொருத்தம்.

ஜிவி.பிரகாஷின் பின்னணி இசையும், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் நம்மை படத்திற்குள் அப்படியே இழுத்துக்கொள்கிறது.

தப்பு பண்ணுகிறவர்களின் உலகத்தை லென்ஸ் வைத்து காட்டிவிட்டார் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன். உஷாராக இருந்து கொள்வது அவரவர் சாமர்த்தியம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.