நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் – மாரிசெல்வராஜ்

5

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு
ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:

வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு . தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ என் தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை மூன்றாம் தலைமுறை நான்…

சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் சண்டியர்க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன் சரி அதற்கு அப்புறம் வருவோம். முதலில் முற்போக்குவாதி ,பூனூல் துறந்த பிராமணன் பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பவர் என்றெல்லாம் சொல்லிகொள்ளும் நீங்கள் பல பிரிவு மக்கள் பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கை முறையை , அவங்க அரிவாள் பிடித்த முறையை ,அவர்கள் அரிசனனுக்கு சந்தோசமாய் கூழ் ஊத்திய முறையை , மீசை முறுக்கி வளர்த்த முறையை , சாராயம் குடித்த முறையை , சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று “தேவர் மகன் “என்ற தலைபோடு ஒரு திரைப்படம் எடுத்தது ஏன்? ஒரு பிரிவு மக்களின் வன்முறையை ஆதிக்கத்தை அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா இல்லை அவர்களின் சாதிய வேல்கம்புகளுக்கு கூர் தீட்டிவிடவா? அல்லது எப்போதும்போல மீசை முறுக்க ஆசைபட்டு பணம் சம்பாதிக்கவா? அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா……

சொல்கிறேன் கேளுங்கள் ஒருவேளை நீங்கள் அசட்டுபோதையில் இருந்தாலும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ……….

ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்டார்கள் திருமண சடங்கு விசேச வீடுகளில் ஏன் கோவில்களில் கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமைய ஆடவைத்தது. வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிக்கூட வலுகட்டாயமாக பாட வைக்கபட்டாள். எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கபட்டன வேட்டிகள் மடித்து அதிகார ஆணவத்தோடு கட்டபட்டன
மூன்று மணி நேரம் நீங்கள் மீசை முறுக்கி அரிவாள் தூக்கி கொலைகளையும் செய்து கடைசி மூன்று நிமிடத்தில் “ டேய் அரிவாள்களை கீழ போடுங்கடா” என்று சொன்னது நீங்கள் விரும்பியதை போலவே யாருடைய காதிலும் விழவில்லை போலும்

இத்தனைக்கும் பிறகும் எதிர்வினை புரியாமல் இருக்க நாங்கள் என்ன எருமை மாடுகளா….கை ,கால் , உயிர் , உடைமை இழக்கத்தான் செய்தோம் . ஆனால் நீங்களே எதிபார்க்காத ஒரு எழுச்சியை யாம் பெற்றோம். இத்தனைக்கும் பிறகும் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு பல உதடுகள் உச்சரிக்ககூடிய வெற்றி தேவைபட்டபோது மறுபடியும் மனசு கூசாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்களின் அதே போர்களத்தை தான்.

”சண்டியர்” யார் இந்த சண்டியர் நீங்களா ஐயோ! நீங்கள் பரமக்குடி சாஸ்த்திரிகள் ஆச்சே…ஐரோப்பிய அறிவை பெற்ற ஒரே தமிழ் சீர்திருத்த சிந்தனையாளர் ஆச்சே! அப்படியெனில் யார் அந்த சண்டியர் மறுபடியும் அதே ஒரு பிரிவு மக்கள் ஆனால் இப்போது கருப்பு சட்டை முறுக்கு பட்டை ,கறுக்கு அரிவாள் சகிதம் வந்து இது தென் தமிழகத்தில் சாதி கலரவத்தை தூண்டிய “ தேவர்மகனின் இரண்டாவது பாகம் “ என்ற அருவருப்பான அறிவிப்பு வேறு…..சண்டியர் என்ற தலைப்பை தயவுசெய்து மாற்றிகொள்ளுங்கள்” என்று ஒரு பாதிக்கபட்ட ஒரு சமுக மக்களின் சார்பாக அதன் பிரதிநிதி சொன்னதற்கு எவ்வளவு ஆரிய அதிகாரத்தோடு உங்கள் பதிலை சொன்னீர்கள்..

சண்டியர்னு பேர் வைத்தா கிருஸ்ணசாமி கோவித்துகொள்வார் என்று அதனால கிட்டிவாசல்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக்கொண்டால் என்ன பண்ணுவது எவ்வளவு அருவருப்பான ஆணவமான நாகரிகம் இல்லாத பதில். நீங்கள் மன்மதலீலை என்று பெயர் வைத்தற்கா அவர் எதிர்த்தார். நீங்கள் தேவர்மகன் என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே.. ஆனால் அதன் மூலம் வந்த விளைவும் ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று ஒரு ஒடுக்கபட்ட சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில் .. சமூக அக்கறை இல்லாதவன் எப்படி கலைஞன் ஆக முடியும். இந்த முற்போக்கு குசும்பும் ஆணவமும் இன்று வந்ததில்லை உங்களுக்கு உங்கள் தாத்தன் முப்பாட்டன் காலத்து ஆரிய குசும்பு என்று எங்களுக்கு தெரியும்…..

எப்படி ஒரு சினிமாவின் பெயரை மாற்ற சொன்னதால் நாங்கள் கலாச்சார காவலர்களா….மனிதனை கழுவ மரத்தில் ஏற்றி கொன்ற சமண கலாச்சாரம் எங்களுடையதா யாருக்கு வேண்டும் உங்கள் கலாச்சாரம். உங்களுக்குதான் வேண்டும் எங்கள் கலாச்சாரம் நாங்கள் அடிமையாய் இருந்த கலாச்சாரமும் நாங்கள் அரிவாள் தூக்கிய கலாச்சாரமும் உங்களுக்குத்தான் வேண்டும்.அப்பொதுதானே அதில் உங்களை போல ஆரிய நாட்டாமைகள் குளிர் காய முடியும். அப்புறம் என்ன சொன்னீர்கள்……

ஐந்து வருடத்திற்குள் மாறிப்போகும் அரசியல்வாதிகளை போல எல்லாமே மாறி போய்விடுமா,,, திரு .கமல் அவர்களே….

எதுவும் எங்கும் மாறவில்லை. உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை எதுவும் மாற போவதுமில்லை யாரும் எதையும் மறக்க போவதுமில்லை. இன்றைய சூழலில் கிராமப்புற பள்ளிகளில் உலவும் சாதியின் உருவம் உங்களுக்கு தெரியுமா …….பள்ளி பாடபுத்தகங்களில் முதல் அட்டையிலோ இல்லை வேறு பக்கங்களிலோ தலித் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் இருக்குமெனில் அவரது இரு கண்களும் பேனா முனைகளால் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்று……உங்களுக்கு தெரியுமா! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கேள்வி வினாத்தாளில் கேட்டால்கூட அதற்கு பதில் எழுத விரும்பாமல் விட்டுவிட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்று, இன்றைக்கு சாதியின் பட்டறையை போல் ஆகிப்போன தமிழக சட்டக்கல்லூரிகளில் கல்லூரி பேப்பர்களில் இருக்கும் அண்ணலின் படத்தின் கண்கள் ஆதிக்க விரல்களில் உள்ள சிகரெட்டால் சுடபட்டுக்கொண்டிருக்கிறதென்று…… இந்த நீட்சியின் எதிர்வினையாகத்தான் நடத்தபட்டது சென்னை சட்டக்கல்லூரி பயங்கரம் . அன்றுமா புரியவில்லை உஙகள் முன்னோர் ஆதிகாலத்தில் தொடங்கிவைத்த சாதி கத்திக்கு இரு பக்கமும் கூர்மை என்று…….ஐயா, உலக நாயகரே !

இன்னும் கண்டதேவி தேர் நடு வீதியில்தான் நிற்கிறது இன்னும் உத்தப்புரத்தின் சுவர் மறித்துக்கொண்டு அவமானமான சின்னமாகத்தான் நிற்கிறது. கொடியன்குளத்திலும் ஆழ்வார்கற்குலத்திலும் , மேலவளவிலும் தாமிரபரணியிலும் நாங்கள் அஞ்சலி செலுத்தி இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறோம். வெண்மனியின் தீ வெக்கையும் அதன் வடுவும் அதுக்குள்ளவா எங்களுக்கு மறந்துபோகும். கடைசியாக “உன்னைபோல் ஒருவன்” எப்போதும்போல கடன் வாங்கிய உங்கள் சீர்திருத்த மதியை வைத்து மறுபடியும் தமிழ் மக்களுக்கு ஒரு நாசகார சதியை கற்பிக்கும் ஒரு முயற்சி…….., மனிதாபிமானம் கொலைக்கு கொலையே தீர்வு பிறமொழிகாரனையும் நேசிப்பது. அடேயப்பா…….உங்கள் மனிதாபிமானத்தை தூக்கி தமிழக அரசின் புகார் பெட்டியில்தான் போடவேண்டும். மனிதாபிமானம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே அருகதையற்ற சினிமா நடிகர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறத்துவிடாதீர்கள் .

· வெண்மனி
· கொடியன்குளம்
· மேலவளவு
· ஆழ்வார்கற்குளம்
· தாமிரபரணி

இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள் ஈழத்தில் உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்து கிழித்துவிட்டீர்கள் என் மனிதாபிமான காவலரே……….ஆமாம் அது என்ன வசனம்…. பம்பாய்ல எவனுக்கு என்ன நடந்தாலும் நாம இங்க சும்மா இருப்போம். நமக்கென்ன அதைப்பற்றி கவலை அவன் என்ன நம் மொழியா பேசுகிறான் இல்லை நம் சொந்தகாரனா……. அடங்கொப்புரான ……ஐயா அறிவிஜீவி ! தாமிரபரணியில் பச்சை குழந்தையோடு சேர்த்து பதினேழு பேர் பிணமா மிதந்த போது ஏற்கனவே வறலாற்று பிழைக்காக சுட்டுக்கொள்ளப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சுட்டுகொள்ள பூனூலோடு புறப்பட்டவர் தானே சினிமாவில் நீங்கள்…….அப்புறம் என்ன? கொலைக்கு கொலைதான் தீர்வா குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபதுபேர் சாக காரணமாக இருந்த விருமாண்டிக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக அதன் சமூக நீதிக்காக அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பணையமாக வைத்து பழிக்கு பழிவாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா?

வாழ்க உங்கள் ஆரிய ஜனநாயகம்” நீங்கள் சொன்னதுபோல் எந்த ஒரு மனிதாபிமான குப்பனும் சுப்பனும் இந்த காரியத்தை செய்யத்தான் மாட்டான் மிஸ்டர் களவானி காமன்மேன் கமல் அவர்களே உங்களின் ஆரிய முற்போக்கு அறிவின் அடிப்படையில் சமூக போராளிகள் பொறுக்கிக்கு பிறந்தவர்கள் என்ற மோசமான அருவருப்பான கருத்தை நீங்கள் சொல்வதற்க்க்காக”துரோக்கால்” என்ற படம் வரும்வரை காத்திருந்தது ஏன்? அதே போல் ஆரிய மனிதாபிமான கோபத்தை வெளிப்படுத்த ”வெட்னஸ்டே”வரும்வரை காத்திருந்தது ஏன்?…

கடைசியாக திரு. கமலஹாசன் அவர்களே ! நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் உங்களின் ஆரிய வெள்ளைத்தோல் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்…..பூனூலை நீங்கள் துறந்திருக்கலாம் ஆனால் உங்களின் தலைமுறையின் பூனூல் தடம் உங்களை விட்டு போகவில்லை என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை. உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டீர்கள் அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் , பாதுகாப்பாய் இருப்பதற்கும் சகலகலாவல்லவனும் அவ்வைசண்முகியும் ,தசாவதாரமும் போதுமே…..உங்களின் ஆரிய முற்போக்கை அம்பலபடுத்தும் உன்னைபோல் ஒருவனும் , சாதி வாழ்வை காட்டி மக்களை பிரித்துக்காட்டும் தேவர்மகனும் , விருமாண்டியும் எதற்கு… ???? ???????

இப்படிக்கு,

இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும்
உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்

– மாரிசெல்வராஜ்

நன்றி – kaattchi.blogspot.in

5 Comments
 1. Kamal says

  இந்த மாதிரி கடிதம், உங்கள் ஊர் MLA விற்கோ, மந்திரிக்கோ,முக்கிய அரசியல்வாதிக்கோ,சாதிச் சங்க தலைவருக்கோ உங்களால் நேரடியாக தனிப்பட்ட முறையில் எழுத முடிந்தால், நீங்கள் வீரன் சூரன் தான்! முடியுமா?

  1. Sriram says

   Pathetic letter.. I m not hunting fan of Mr.Kamal, rather an ordinary lover of Cinema.. Messages from film should be understood from director’s view not from individual view.. You will have different view. Who cares?

 2. iyer says

  :)

 3. iyer says

  aduthu yaarukku Obamakka. Ithai padichittu thaan adutha velai..
  ponappa poi youtube la oru video va upload pannunga (nammalum moonja kaatta vendama)

 4. mathan says

  excellent letter. these upper caste guys who staunchly support Kamal, should live life of Lower Caste for One day.

Leave A Reply

Your email address will not be published.