சினிமாவுக்கு எதுக்குங்க லாஜிக்? இனிமே இப்படி கேட்டீங்கன்னா நடக்கறதே வேற…!

0

“கொண்டையில பூ வைக்கறதிலிருந்து கோட்டைக்கு பெயின்ட் அடிக்கிற வரைக்கும் ஆலோசனை சொல்றதுக்குன்னு ஒரு நிறுவனம் வந்தாச்சு. அந்த நிறுவனத்தின் சேவை, சினிமாவுக்கும் தேவைன்னு பல இயக்குனர்கள் கிளம்பிட்டாங்க” என்றார் நண்பர் அருள் இனியன்.

“இன்ட்ரஸ்ட்டிங்…” என்றபடியே அவருடன் கிளம்பினோம். போய் இறங்கிய இடம் ‘பிசிக்ஸ் பிசினஸ் கன்சல்டன்ட்ஸ்’. மடிப்பாக்கத்தில் இருக்கிறது.

உள்ளே போனால் இளைஞர்களும், யுவதிகளுமாக ஆளாளுக்கு கம்ப்யூட்டரில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவ்வளவும் யார் யாரையோ உருப்பட வைப்பதற்கான தேடல்கள் என்பது அப்புறம்தான் புரிந்தது.

‘தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்’! என்ற பழமொழியை அறிந்தவர்கள், நீச்சல் பழகாமல் குளத்தில் இறங்க மாட்டார்கள். ஆனால் ஐயகோ…நாட்டில் இந்த பழமொழி தெரியாதவர்களின் எண்ணிக்கைதான் அதிகமோ அதிகம். விளைவு? ஏதாவது தொழிலில் இறங்க வேண்டியது. உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணாவாகி நடுத்தெருவில் நிற்க வேண்டியது. இப்படிப்பட்டவர்களுக்காகவே திடீர் அவதாரம் எடுத்து வந்திருக்கிறது இந்த ‘பிசிக்ஸ் பிசினஸ் கன்சல்டன்ட்ஸ்’. இந்நிறுவனத்தின் வேலை, எந்த தொழில் துவங்கினாலும் அத்தொழில் சம்பந்தப்பட்ட முன் தயாரிப்பு பணிகளை உருவாக்கி தருவதும், அது குறித்த விழிப்புணர்வை பணம் போட்டவருக்கு ஏற்படுத்தி தருவதும்தான்.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நன்கு படித்த இளைஞர்களை தன் குழுவில் வைத்திருக்கிறார் இந்நிறுவனத்தின் தலைவர் வெங்கடேஷ் நாராயணன். இவர்களில் பலர் எம்.பி.ஏ படித்தவர்கள் என்பதுதான் இன்னும் சிறப்பு.

சென்னையில் இயங்கி வரும் ஒரு பிரபல நிறுவனத்தின் முதலாளி, சமீபத்தில் இவரை அழைத்து வண்டி வண்டியாக கவலையை கொட்டினாராம். ஏன்? “ஒண்ணுமில்ல சார். பேஸ்புக் ட்விட்டர்ல நம்ம நிறுவனத்தை பற்றி தப்பு தப்பா எழுதிட்டாங்க. அப்படி எழுதியது கொஞ்சம் பேர்தான் என்றாலும், நம்ம கம்பெனிக்கு அது வீக் இல்லையா? இப்படி வர்ற கமென்ட்டுகளை நிறுத்த என்ன வழி?” என்றாராம். அதற்கப்புறம் சோஷியல் மீடியாவில் இறங்கி வலை வீசிய வெங்கடேஷ் நாராயணனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அப்படி எழுதப்பட்ட கடிதங்களும், விமர்சனங்களும் பத்தோ இருபதோ அல்ல. கிட்டதட்ட 800 அம்புகள்.

அதில் எழுதப்பட்டிருந்த அவ்வளவு விஷயங்களையும் தனித்தனியாக படித்தவர், தனது குழுவினருடன் உட்கார்ந்து இந்த பிரச்சனைகளை சால்வ் செய்வது எப்படி என்று விவாதித்திருக்கிறார். ஒரே மாதத்தில் அந்த குறைகள் யாவும் களைவதற்கான நடவடிக்கையை அந்நிறுவன முதலாளியுடன் கலந்தாலோசித்து முடித்துக் கொடுத்தாராம்.

இப்போ? “கறையை தேடினாலும் கிடைக்காது…” என்று சிரிக்கிறார் வெங்கடேஷ் நாராயணன்.

இப்படி பல துறைகளில் அதிரடி ஆக்ஷன்களை நடத்தி வரும் வெங்கடேஷ் நாராயணன், சினிமாவுக்குள்ளும் தன் பங்களிப்பை செய்து வருகிறார். கோட் சூட் இளைஞரான இவருக்கு இங்கு என்ன வேலை? பேசினால் கொட்டிக் கிடக்கிறது ஆச்சர்யம். யெஸ்… ‘மூவி அனலிஸ்ட்’ என்கிற வேலையை சினிமாவுக்காக செய்து வருகிறது இவரது டீம்.

அப்படின்னா?

சினிமா கதைகளில் வரும் லாஜிக் மீறல்களை சுட்டிக்காட்டி, இந்த காட்சியில் இது இருக்கணும். இது இருக்கவே கூடாது என்று சொல்வதுடன், கதைக்கும் காட்சிக்கும் என்ன தேவையோ? அதை தேனீ போல பறந்து சென்று அலைந்து திரிந்து கொண்டு வந்து சேர்ப்பதுதான். சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ படத்தில் வெங்கடேஷ் நாராயணன் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்கிறது. கதை போலீஸ் அகடமி பற்றிய விஷயத்தை உள்ளடக்கியது அல்லவா? இதற்காக சுமார் மூன்று மாதங்கள் தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து பல விஷயங்களை கொண்டு வந்து படத்தின் இயக்குனர் ராஜாவிடம் சேர்த்தார்களாம். பெரும்பாலும் போலீஸ் யூனிபார்மில் தகுதியை குறிக்கும் பேட்ஜ்களில்தான் அதிகம் தவறு நேரும். அதை மிக உன்னிப்பாக கவனித்துக் கொடுத்ததும் இந்த டீம்தான். அதுமட்டுமல்ல… 1990 லிருந்து 2012 வரை நடந்த சர்வதேச குற்றங்களை இன்டர்நெட், மற்றும் லைப்பரரிகளில் தேடி எடுத்து அதை 22 வகையான குற்றங்களாக பிரித்ததாம் இந்த டீம். அதிலிருந்துதான் தனது கதைக்கு தேவையானதை மட்டும எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் டைரக்டர் மோகன் ராஜா.

“அந்தப்படத்தில் நாங்கள் பணியாற்றிய விதம் பிடித்துப் போனதால், எங்களை தற்போது அவர் இயக்கி வரும் ‘வேலைக்காரன்’ படத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறார். எவ்வித லாஜிக் மிஸ்டேக்கும் இல்லாமல் வரப்போகும் கமர்ஷியல் படமாக ‘வேலைக்காரன்’ இருக்கும்” என்கிறார் வெங்கடேஷ் நாராயணன்.

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சுசிகணேசன் இயக்கி வரும் திருட்டுப்பயலே 2 படத்திலும் இந்த ‘பிசிக்ஸ் பிசினஸ் கன்சல்ட்டன்ட்’ தன் உழைப்பை கொட்டி வருகிறது.

“ரசிகர்கள் முன்பு போல இல்ல சார். படத்துல அவங்க கண்ணை உறுத்துற மாதிரி எந்த தப்பு வந்தாலும், உடனே பிரிச்சு மேய்ஞ்சுடுறாங்க. ஒவ்வொருவரும் இன்னைக்கு சமூக வலைதளங்களில் ஒரு பீரங்கியா செயல்படுறதால, படைப்பாளிகள் ரொம்ப கவனமா இருக்க வேண்டியிருக்கு. கதையை உருவாக்கி, அந்த கதைக்கு உயிர் கொடுக்கிற முக்கியமான வேலைகளில் இருக்கிற இயக்குனர்களின் டென்ஷனில் பாதியை நாங்க பகிர்ந்துக்குறோம். எந்த சப்ஜெக்ட் பற்றிய கதையா இருந்தாலும் அது சம்பந்தமான விஷயங்களை தேடிக் கொண்டு வந்து கொடுக்க நாங்க ரெடி. எங்களை பயன்படுத்திக்க நீங்க ரெடியா?” என்கிறார் ஆர்வமாக!

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்கிறது சம்பந்தமா ஒரு கதை இருக்கு. ரூட் பிடிச்சு கொடுக்குறீங்களா சார்?

-ஆர்.எஸ்.அந்தணன்

இந்த நிறுவனம் தொடர்பான விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும். www.fhyzics.com

Leave A Reply

Your email address will not be published.