மாரி2 / விமர்சனம்

4

கொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்! அதை கண்டு ஊரே அஞ்சுதாம். அவரும் ‘செஞ்சுருவேன்… செஞ்சுருவேன்…’ என்று லெஃப்ட்டாங்கையை ஆட்டி ஆட்டி மிரட்டுவாராம். போன ஜென்மத்திலிருந்தே முடி திருத்தும் கடை பக்கம் கூட எட்டிப்பார்க்காத ரவுடிகள் எல்லாம் ஒரு அடியில் சுருண்டு விழுந்து சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ பார்சல் ஆகிக் கொண்டே இருப்பார்களாம். என்னய்யா இது? இந்தப்படத்தின் ஹீரோ என்ன, பெரிய சைசில் செய்த பேட்டரியா? அல்லது நெய்வேலி கரன்ட்டின் ‘நெட் பேக்கிங்’கா?

‘மிக சமீபத்தில் வந்த ‘வடசென்னை’ என்ற படமும் ரவுடிகளை மையப்படுத்திய கதைதான். அதிலும் தனுஷ்தான் ஹீரோ. ஆனால் அப்படத்திலிருந்த நேர்த்தியும், நியாயமும், நிஜம் என்கிற பிரமிப்பும், இந்த படத்தில் சைபர் சைசுக்கு கூட இல்லையே, நீங்களெல்லாம் டைரக்டர் என்று எந்த முகத்தோடு சுற்றிவர்றீங்க பாலாஜிமோகன்?’

சரி… கதைக்கு வருவோம். (அப்படின்னு ஒண்ணு இல்லேன்னாலும் கஷ்டப்பட்டு சொல்ல ட்ரை பண்ணுவோம்) வடசென்னையை கைக்குள் வைத்திருக்கும் ரவுடிதான் தனுஷ். எல்லா ரவுடித்தனமும் செய்யும் இவருக்குள்ளும் ஒரு நேர்மை. போதை பவுடர் மட்டும் கடத்த மாட்டாராம். இவரை விரட்டி விரட்டி காதலிக்கும் உள்ளூர் கொசுதான் சாய் பல்லவி. இந்த வீக்னசை பயன்படுத்தி இவரையே பவுடர் கடத்த வைக்கிறார் வில்லன் டோமினோ தாமஸ்.

அந்த களேபரத்தில் சாய் பல்லவிக்கு குண்டடி பட, அவரை அள்ளிக் கொண்டு கிளம்பும் தனுஷ், எட்டு வருஷம் எஸ்கேப். ஆங் சொல்ல மறந்தாச்சு. நடுவில் தனுஷுக்கு ஒரு குளோஸ் பிரண்டு. கிருஷ்ணா! இவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு வந்து விடுகிறது. அது தனி. எட்டு வருஷம் கழித்து திரும்பி வரும் தனுஷ், டோமினோவை மென்று துப்புவதுதான் கதையின் மிச்ச சொச்ச வாந்தி பேதி!

மாமனாரின் மகளை மட்டுமல்ல, மரு… தழும்புகளைக் கூட தனதாக்கிக் கொள்ளும் முழு பேடன்ட் உரிமையும் தனுஷுக்குதான் போலிருக்கிறது. காட்சிகளின் சாரம்சத்தை பார்த்தால் பல இடங்களில் பாட்ஷாவை உல்டா பண்ணியிருக்கிறார். வெளியூருக்குப் போய் தானுண்டு, தன் வேலையுண்டு இருக்கிற நாட்களில் அந்த ஊர் கவுன்சிலர் கிராஸ் பண்ண… அங்கு செய்யும் ஆக்ஷன் தெனாவெட்டு மட்டும் ஆஹா ஓஹோ. மற்றபடி தனுஷை இன்னும் நாலு படங்களில் இப்படியே நடிக்க வைத்தால், கூடாரம் காலி! அதையும் செஞ்சுருங்க(?) பாலாஜிமோகன்!

சாய் பல்லவியின் சடலத்தை பார்த்து தனுஷ் கண்கலங்கி நடிப்பது போல ஒரு காட்சி. சிவாஜி சமாதியில் ‘கிராக்’ வுட்ருமோ என்கிற அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது அது!

சாய் பல்லவியின் துள்ளலான ஆட்டத்தை கண் கொட்டாமல் ரசிக்க முடிகிறது. அவிச்ச முட்டையை குங்கும டப்பாவுக்குள் போட்ட மாதிரியான அந்த குளோஸ் அப் முகத்தைதான் காண சகிக்கவில்லை. சாய் பல்லவிக்கு பதிலாக ஒரு பேய் பல்லவி வந்திருந்தால் கூட இந்த படத்தை கொஞ்ச நேரம் ரசித்திருக்கலாம் போல!

ஓவர் ஆக்டிங் புகழ் கிருஷ்ணாவை கையாண்ட விதத்திற்கு வேண்டுமானால் இயக்குனர் பாலாஜியை பாராட்டலாம். ‘நடிச்சே…? மவனே கொன்றுவேன்’ என்று சொல்லி சொல்லியே வேலை வாங்கியிருக்கிறார்.

வில்லன் டொவினோ தாமஸ் அறிமுகக் காட்சியில் அவரை பின் புறத்திலிருந்து காட்டுகிறார்கள். ஏண்டா… இவ்ளோ அழகான ஒரு பொம்பளை புள்ளைய ஜெயிலுக்குள்ள அடைச்சு வச்சுருக்காங்க என்று நினைத்தால், கேமிரா முன் பக்கம் போகிறது. அட… அட… அட… ஆம்பள!

வரலட்சுமிதான் அந்த ஊர் கலெக்டர். ஒரு ரவுடி ஜெயிப்பதை புன்னகையோடு வரவேற்கும் இந்த கலெக்டருக்கு ஏதாவது ஸ்பெஷல் விருது இருந்தா கொடுங்களேன்ப்பா.

நல்லவேளை… ரோபோ சங்கர் இருந்தார். இல்லையென்றால் தனுஷ் கையில் சிக்கிய ரவுடி போல கூழாகியிருக்கும் தியேட்டர்.

வில்லன் மூவரையும் குறி பார்த்து மார்பில் சுட்டுத்தள்ளுகிறான் ஒரு ரவுடி. பார்த்தால் அதே மூவருக்குமான பின் சீட்டிலிருந்து எழுந்து போவது போவது போல ஷாட் வைத்திருக்கிறார்கள். முதுகுக்கு பின்னால் இருந்தே மார்பில் சுடுவது எவ்வளவு பெரிய வித்தை? புத்திசாலி கேமிராமேன்!

இந்தப்படத்தை கொஞ்சமாவது காப்பாற்றுவது யுவனின் இசையும், பாடல்களுக்கான நடன அமைப்பும்தான். நல்லாயிருங்க சகோஸ்!

படம் முழுக்க, ‘சாட்சி சொல்ல அவன் வரக்கூடாது… சாட்சி சொல்ல அவன் வரக்கூடாது…’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ‘படம் பார்க்க எவனும் வரக்கூடாது… படம் பார்க்க எவனும் வரக்கூடாது…’ என்றே காதில் விழுகிறது.

மாரி… படு வீக்கான சோமாரி!

-ஆர்.எஸ்.அந்தணன்

4 Comments
 1. அஜித் says

  நடிகர் தனுஷ், நடித்து வெளியான மாரி 2படத்தின் வசூல் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்
  பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் விமர்சன‌ங்கள் ஊடகங்களில் எதிர்மறையாக வந்தாலும் மாரி முதல்பாகம் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் திருப்தியை ஏற்படுத்தியது. இது வடசென்னை படத்தின் வசூலிலும் தொடர்ந்தது.
  புதுப்பேட்டை, மாரி, கொடி, வடசென்னை போன்ற படங்கள் வசூல் ரீதியாக திருப்தியளித்திருப்பதால் மிக குறுகியகால தயாரிப்பாக தாதா கதாபாத்திரத்தில் தனுஷ் மாரி 2 எடுத்தார். இந்த படமும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை எனினும் வசூல் ரீதியாக நல்ல நிலையில் இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் சொல்கின்றது. அதாவது சென்னையில் இப்படம் முதல் நாள் 94 லட்சம் வசூலித்தது தனுஷின் கேரியரில் மிகசிறப்பாக பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வார இறுதிவரை அதாவது மூன்று நாட்களில் 3.17 கோடியை வசூலித்துள்ளதாகவும், கோவை, மதுரை, சேலம் ஏரியாக்களில் மொத்தம் 6.2 கோடியையும், செங்கல்பட்டு ஏரியாவில் 1.9கோடியையும், வட ஆற்காடு, தென் ஆற்காடு, கடலூர், பாண்டிச்சேரியில் மொத்தம் 9.4 கோடியையும் வசூலித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை ஏரியாவில் 99 லட்சத்தையும், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் 5 கோடிவரையும், டி.கே எனப்படும் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாக்களில் 7 முதல் 8 கோடிக்கு நெருக்கமாக வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களில் 5 கோடி என வசூலித்துள்ள மாரி 2, ஓவர்சீஸ் ஏரியாக்களில் மூன்று நாட்களில் 6.1 கோடியை வசூலித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 36 கோடி வரையிலும், இந்தியா முழுவதும் 42 கோடிவரையும், உலகம் முழுவதும் சுமார் 53 கோடி வசூலித்து மிகப்பெரிய வசூல் பட்டியலில் தனுஷ் இணையும்படி செய்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களில் வசூல் கூடும் என்பதால் மாரி 2 வசூல்மழைதான்.

 2. Simbu says

  மாரி-2 கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் வசூல் ரீதியாக திருப்தியளித்திருப்பதால் தான் வசூல்மழைதான். தொடர் விடுமுறை காரணமாக படத்தில் கூட்டம் குறையவில்லை, அதனால், வசூலும் எங்கும் பாதிக்கப்படவில்லை.
  மாரி-2 தமிழகத்தில் முதல் 5 நாட்களில் ரூ 26கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

 3. toute la vie says

  excellent submit, very informative. I ponder why the
  opposite specialists of this sector don’t notice this.
  You must continue your writing. I am confident, you’ve a huge readers’ base already!

 4. Encryption says

  After looking over a handful of the articles on your site, I truly
  appreciate your way of writing a blog. I book marked it to my
  bookmark website list and will be checking back soon. Please check out my web site as well and
  tell me how you feel.

Leave A Reply

Your email address will not be published.