இந்த பவுன்சர்களோட தொல்லை தாங்க முடியலைப்பா! மன்னிக்கப்பட வேண்டிய மலேசிய கலைவிழா!

0

‘கொசு அடிக்க கொம்பேறி மூக்கனை வளர்க்க வேண்டியதாப் போச்சு…’ என்று பில் கொடுக்கும் நேரத்தில் புலம்பினாலும் புலம்புவார்கள். நாம் சொல்கிற இந்த கொம்பேறி மூக்கர்கள் ‘பாடி ஷேப்’ பரந்தாமன்களான பவுன்சர்கள்தான். ரஜினி, கமல், அஜீத், விஜய்கெல்லாம் கூட இவர்கள் தேவைப்படலாம். ஆனால் பிரேம்ஜி லெவல் நடிகர்கள் கூட, பவுன்சர்கள் துணையோடு வருவதை ‘தூத் தூ’ மன நிலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

இங்கு தமிழ்நாட்டில் ஆரம்பித்தார்களா, அல்லது அங்கு மலேசியாவில் ஆரம்பித்தார்களா தெரியவில்லை. மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் திரும்புகிற இடமெல்லாம் இந்த புல் தடுக்கி பயில்வான்களின் ரவுசுக்கு ஆளானவர்கள் கடும் கோபத்தோடு திரிகிறார்கள். இந்த நிகழ்ச்சியே பிளாப் என்கிறது நிஜ தகவல்கள். அதிகபட்ச டிக்கெட் ரேட் 500 வெள்ளிக்குதான் விற்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அரங்கம் காலி. 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் அது. அதில் 50 ஆயிரம் பேர்தான் கூடியிருக்கிறார்கள். அப்படியிருக்க, ஏன் இந்த பவுன்சர்கள்?

அதிலும் விஜபி கள் அமரும் இடத்தில், அதற்கு தகுதியான நபர்கள்தான் டிக்கெட் பெற்று வந்திருப்பார்கள். அங்கும் வந்து கைகளை கோர்த்துக் கொண்டு, ரஜினியையும் கமலையும் கண்ணார காண முடியாத அளவுக்கு இவர்கள் மறைத்துக் கொண்டு நின்றால் எப்படியிருக்கும்? வேடிக்கை என்னவென்றால், சூர்யாவிடம் ஆட்டோகிராப் வாங்கக்கூட ஆள் இல்லையாம். இருந்தாலும் குறுக்கே போனவர்களை சேச்சே.. சூச்சு என்று இவர்கள் விரட்டியடிக்க, தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குமுறி குமுறி சிரித்தார்களாம்.

‘இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன் எல்லா நட்சத்திரங்களும் ஒரு ஓட்டலில்தான் தங்கியிருந்தார்கள். அதிலும் ரஜினி அந்த நாட்டின் பிரதமரே ரசிக்கக்கூடிய அளவுக்கு பிரசித்தம். அப்படிப்பட்டவர் தங்கியிருந்த இடத்திலேயே நாலு போலீசுக்கு மேல் செக்யூரிடி இல்லை. ஆனால் விழா நடந்த கிரவுண்டில் எதற்கு இத்தனை பவுன்சர்கள்?’ என்று கடும் கோபப்பட்டுள்ளன மலேசிய செய்தி நிறுவனங்கள்.

பவுன்சர்கள் வைத்துக் கொள்வதுதான் பந்தா என்று நினைக்கும் நல்லவர்களை நம்பிதான் தமிழ்நாட்டு அரசியலும் இனிமேல் இயங்கும் போல தெரிகிறது. எளிமையான தலைவன் ஒருவன் நமக்கு கிடைப்பான் என்ற நம்பிக்கை, மலேசியா களேபரங்களோடு முடிந்தது.

வாழ்க தமிழ்நாடு! வாழ்க மலேசியா!

Leave A Reply

Your email address will not be published.