பாரதிராஜா வந்திருக்கலாம்… மணிரத்னம் ஏமாற்றம்!

0

படைவீரன் படத்தின் இயக்குனர் தனா, மணிரத்னத்தின் ஸ்கூல்! தனது மாணவனின் வெற்றிப்பயணத்திற்கு வாழ்த்து சொல்கிற மனசு பலருக்கு இருந்தாலும், அதை வெளிப்படையாக மேடையில் காட்டுகிற நாகரீகம் நிரம்ப பெற்றவராக இருந்தார் மணிரத்னம். இன்று சென்னையில் நடந்த ‘படைவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் என்று அறிவிக்கப்பட்ட லிஸ்ட்டில் பாரதிராஜா, தனுஷ் இருவரது பெயர்கள் இருந்தும் இருவருமே ஆப்சென்ட்!

தனுஷ் சென்னையிலேயே இல்லை. அதனால் வரவில்லை. ஆனால் இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தும் பாரதிராஜா ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு படக்குழுவினர் பலரும் மென்று முழுங்கினார்கள். இருந்தாலும் மணிரத்னத்தின் பேச்சில் அநியாயத்துக்கு சிஷ்ய புகழ் கூடுதல்தான்!

“எங்கிட்ட வொர்க் பண்ற அசிஸ்டென்ட் டைரக்டர்களில் எப்பவும் எல்லாத்துக்கும் முன்னாடி நிக்கிற வழக்கம் உள்ளவர்தான் தனா. சண்டைன்னா கூட அவர்தான் முன்னாடி நிப்பார். அதனால் இந்த படத்திற்கு ‘படை வீரன்’னு பேர் வச்சது பொருத்தமான விஷயம்தான். ஃப்ரீயா இருக்கிற டைம்ல நிறைய பேசுவோம். அப்ப ஒரு கதை சொன்னார் எங்கிட்ட. நல்லாயிருந்துச்சு. இருந்தாலும், அதில் இன்னும் நிறைய வேணும்னு தோணுச்சு. அதற்கப்புறம் ஒருமுறை நான் எழுத்தாளர் ஜெயமோகனின் வெப்சைட் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் புதிய எழுத்தாளர்கள் சிலரை அறிமுகப்படுத்தியிருந்தார் அவர். அதில், முதல் பெயர் தனாவுடையது. எங்கிட்ட சொன்ன அந்த கதையைதான் எழுதியிருந்தார். அவ்வளவு நல்லாயிருந்துச்சு”.

“இந்த படத்தில் பாரதிராஜா நடிச்சுருக்கார். தமிழ்சினிமாவில் பாரதிராஜாவின் தாக்கம் இல்லாமல் யாரும் படம் எடுக்க முடியாது. அந்தளவுக்கு புதுமை படைச்சவர் அவர். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். நானும் கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருந்திருப்பேன்” என்று ஏக்கத்தோடு கூறினார் மணிரத்னம்.

இவ்வளவு நல்ல நட்புள்ள ஒருவர் வருகிற விஷயம் தெரிந்தும், வராமல் போன பாரதிராஜாவுக்கு அப்படி என்னதான் குறை வைத்ததோ படக்குழு?

அந்த மகாலட்சுமிக்கே (?) வெளிச்சம்!

Leave A Reply

Your email address will not be published.