மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்

0

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்… தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா…!

வயதான மற்றும் திருமணமான பெண்களிடம் தாலியறுக்கும் தடியன்கள் சிலர். இந்த துயரத்தில் சிக்குகிற ஹீரோ அந்த கும்பலை கண்டறிந்து எப்படி வேரறுக்கிறான் என்பதுதான் கதை. பின்புலத்தில் தங்க மாஃபியா பற்றிய ஏராளமான டீட்டெயில்கள். கடைசியில் தங்கம் யார் கைக்கு போகிறது என்பதை அறியும்போது, ‘அடப்பாவிகளா, எவனைதான் நம்ப சொல்றீங்க?’ என்று அதிர்ச்சியாகிறோம்.

சுமார் நான்கு படங்களிலாவது நடித்திருப்பார் இப்படத்தின் ஹீரோ துருவா. இன்னமும் மனசுக்குள் ஒட்டாத முகம். அழுத்தமான காட்சிகளில் நடிக்க அநியாயத்துக்கு முக்குகிறார். பேஸ்கட்டு கவுத்தாலும், ஓங்குதாங்கான அவரது உடற்கட்டு ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் பண்ணுகிறது. படத்தில் இவர் குறித்த சஸ்பென்சை முன்பே யூகிக்க முடிவதும் கூட சற்றே சப்!

படத்தின் முதுகெலும்பே சரண்யா பொன்வண்ணனின் நடிப்புதான். எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், ‘என் புள்ளைய கட்டிக்கிறீயா?’ என்று அப்பாவியாக கேட்டு அலற விடுகிறார் அவர்களை. வெகு தூர கோவில்களை இலவச தரிசனம் செய்ய அவர் போடும் தந்திரத் திட்டங்கள், ஜாலியாக்குகிறது தியேட்டரை. அவ்வளவு சந்தோஷமும் புறாக் கூட்டுக்குள் பூகம்பம் வந்தது போல நொறுங்கும் போது, தியேட்டரும் சப்தநாடியை அடக்கிக் கொள்கிறது.

பிக்பாஸ்2 ல் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இதில் ஒரு ஹீரோயின். அழகு இருக்கிறதே ஒழிய, நடிப்பு நாலு பைசாவுக்கு கூட நம்பும்படி இல்லை. அதுவும் திடீரென இவர் போலீஸ் ஆகி, ஃபுல் சல்யூட் அடிப்பதெல்லாம் ட்ராமா!

மற்றொரு ஹீரோயின் அஞ்சனாவுக்கு சற்றே வெயிட் ரோல். நம்பியவர்களை நட்டாற்றில் விடவில்லை இவர்! அந்த வில்லன் கூட்டத்தில் அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரனின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது. ராதாரவிக்கு ஒரு நாள் கால்ஷீட்தான் போல. வந்தவரைக்கும் பெடல் மிதித்துவிட்டு போகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு மனசை ரம்மியமாக்குகிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்பெஷல் மெனகெடல். பலே. இசை அச்சு. இன்னும் நாலைந்து முறை கேட்டால் பாடல்கள் மனசில் நிற்குமோ என்னவோ?

செயின் பறிப்பு திருடர்கள் பற்றிய டிக்ஷனரியாகவே ஒரு படம் வந்தது. ‘மெட்ரோ’! அப்படத்தின் ‘கவரிங்’தான் இப்படம் என்றாலும், பெண்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறதே!

வேறு வழியேயில்லை… இயக்குனர் ராகேஷின் முயற்சியால் கிடைத்த இந்த  இமிடேஷன் பளபளப்பை பாராட்டி விடுவோம்!

.ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.