மோ விமர்சனம்

0

‘ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு ஆவியோ… குட்டிச்சாத்தானோ இலவசம்’ என்கிற அளவுக்கு, ஆவிப் படங்களின் அட்ராசிடி கோடம்பாக்கத்தை குமுறி வருகிற சூழ்நிலையில் மோ என்கிற பெயரில் மேலும் ஒரு ஆவிப்படமா? சர்வ நாடியும் நடுநடுங்க உள்ளே போனால், நம் நெகட்டிவ் தாட்ஸ் அத்தனையையும் பிடுங்கி ஓரமாய் போடுகிறது மோ! இது வேற லெவல் காமெடி பாஸ்…!

வழக்கமாக ஒரு பெண்ணை நால்வரோ, அல்லது ஒருவரோ பாலியல் வன் கொடுமை செய்வார். அவள் ஆவியாக மாறி, சம்பந்தப்பட்டவர்களின் டங்குவாரை அறுப்பாள். இதுதானே பேய் உலகத்தின் ‘பிளாஷ்பேய்’ தியரியாக இருக்கும்? இதில் வரும் பேய் இருக்கிறதே… நீங்கள் யோசித்தே பார்க்க முடியாத ஒரு சுச்சுவேஷனில் இருக்கிறது. அவளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் அந்த இளைஞர்களின் அனுபவமும் அது தருகிற இன்பமும் இருக்கிறதே… உங்கள் பூர்வஜென்மத்து கவலையை கூட நிமிஷத்தில் தீர்த்து வைக்கிற சர்வரோக நிவாரணி.

கதை என்பதற்காக பெரிய அலட்டல் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை இப்படத்தின் இயக்குனர் புவன் ஆர் நல்லான். திரைக்கதையும், திடுக் திடுக் காமெடியுமாக கட்டாந்தரை கதையை, மொசைக் கற்களால் மெழுகியிருக்கிறார். பழைய பில்டிங்குகளை வாங்கி அதில் அபார்ட்மென்ட் கட்டும் இரண்டு பில்டர்கள். அதில் ஒருவருக்கு பேய் என்றால் பெரும் அலர்ஜி. ஆவி புகுந்த கட்டிடங்கள் என்றால் ஆளை விடு சாமீயாகி ஓடுவார். இந்த பலவீனத்தை புரிந்து வைத்திருக்கும் இன்னொருவர், இவர் வாங்க நினைத்த கட்டிடத்திற்கு அவர் போட்டியாக வரும் நேரத்தில் ஆவி பயம் காட்ட நினைக்கிறார். அதற்காக ஒரு மூன்று வாலிபர்களையும் ஒரு பெண்ணையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறார். அந்த பழைய பள்ளிக் கட்டிடத்தில் நடப்பதென்ன? இதுதான் இரண்டு மணி நேர கலகல மோ!

ரமேஷ்திலக், யோகிபாபு, சுரேஷ்ரவி, முனிஸ்காந்த், தர்புகா சிவா இந்த நால்வர் அடிக்கும் ரகளை போதாதென, படத்தில் வரும் அத்தனை பேரும் அவரவர் பங்குக்கு வயிற்றோரத்தில் வற்றல் வடாம் காயப் போடுகிறார்கள். அதிலும் ரமேஷ்திலக்கும் சுரேஷ்ரவியும் தர்புகா சிவாவும் சேர்ந்து கொண்டு நடத்தும் அந்த சுவிசேஷ கூட்டம், நிஜம் கெட்டது போங்கள்! கட்ட கடைசியில் ஆசை போகாத ஆவியான ஐஸ்வர்யா ராஜேஷிடம் சிக்கிக் கொள்ளும் இந்த குரூப், ஐயோ பாவம் ஆகுவதை விழி கொட்டாமல் ரசிக்க முடிகிறது.

முதல் பாராட்டு ஐஸ்வர்யா ராஜேஷூக்கு. மார்க்கெட்டில் முக்கிய இடத்திலிருக்கும் ஒரு நடிகை, அசிங்க மேக்கப்புக்கு ஓகே சொன்னதே புரட்சிதான். ஒப்புக்கு பேயாக நடிக்க வந்தவர் ஒரு கட்டத்தில் அதுவாகவே மாறி ஆவேசம் காட்டுவதை அரை கண்ணை மூடிக் கொண்டே ரசிக்க வேண்டியிருக்கிறது. கலகலப்புக்கு நடுவே திகில் காட்டுகிற விசேஷ கண்களாச்சே ஐஸ்வர்யாவுக்கு?

முதலில் போங்கு ஆட்டம் ஆடும் ரமேஷ்திலக் குரூப், அதை நிஜம்போல நடத்திக் காட்டுகிற காட்சி, செம த்ரில்.

இன்னும் கொஞ்ச நேரம் காட்டியிருக்கலாமே என்று ரசிகர்களை ஏங்க வைக்கிறார் யோகிபாபு. முனிஸ்காந்த் மேக்கப்மேன் என்பதால், சினிமா கஷ்டங்களையும் அவ்வப்போது போட்டு தாக்குகிறார்கள். என்னது… ஷாட் பிலிமையே அறுபது நாள் ஷுட் பண்ணினா என்று அவர் அதிர்ச்சியாவதெல்லாம் நிகழ்கால நிஜமல்லவா?

இசை ஒளிப்பதிவு எல்லாமே சிறப்பு என்றாலும், ஆர்ட் டைரக்டர் பாலசுப்ரமணியம் அந்த பாழடைந்த பள்ளிக் கூடத்தை டெரர் போட்டு நிரப்பியிருக்கிறார். தனி பாராட்டுகள்.

சந்தோஷ் தயாநிதி இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் ஓ.கே.

தர்புகா சிவா, இசையமைப்பதை விட்டுவிட்டு முழு நேரம் நடிப்பை மேற்கொள்ளலாம். கொஞ்சம் கூட பிசகாத நடிப்பு.

மோடியின் பண மதிப்பு விவகாரத்தில், மனம் புழுங்கிக் கிடப்பவர்கள் கடன் வாங்கியாவது மோ பார்க்கப் போகலாம். பரிசுத்த ஆவியின் உத்தரவாதம் இது!

ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.