மொட்ட சிவா கெட்ட சிவா /விமர்சனம்

1

‘இலையில கொஞ்சம் ரசம் ஊத்துங்க’ன்னு கேட்டவன் தலையில தக்காளிய வச்சு தேய்ச்சு, கூடவே சீரகம் மிளகையெல்லாம் தனித்தனியா கொட்டி அபிஷேகம் பண்ணினா எப்படியிருக்கும்? அப்படியொரு ரணகள பிரசன்டேஷன்! “சிவாடா… மொட்ட சிவா!” என்று அடித்தொண்டையிலிருந்து குரல் எழுப்பி, ஆயுளுக்கும் தூக்கம் கலைக்கும் பிரம்…மாதமான ரவுடிப் போலீஸ் ராகவா லாரன்ஸ், ஒன் அண்ட் ஒன்லி மசாலாவுக்காக ராத்தூக்கம் பகல் தூக்கத்தையெல்லாம் கேன்சல் பண்ணி விட்டு உழைத்திருக்கும் படம்.

இந்தப்படம் அடிக்கிளாஸ் ரசிகனுக்கு ஆஹா… டாப் கிளாஸ் ரசிகனுக்குதான் டங்குவார் அவுட்!

“எல்லா போலீசும் கரெக்டா லஞ்சம் வாங்கு. ரவுடிகளோட கூட்டணி வச்சு நல்லா சம்பாரிச்சு பாதிய இங்க தள்ளு. மீதிய நீ வச்சுக்கோ” என்கிற அசிஸ்டென்ட் கமிஷனர்தான் லாரன்ஸ். அவருக்குள்ளிருக்கும் சென்ட்டிமென்ட்டை தட்டி எழுப்புகிறான் ஒரு அரசியல்வாதி. அவனுடைய மகனால் ரேப் செய்யப்பட்டு கொல்லப்படும் அப்பாவி பெண்ணுக்காக தன் லஞ்ச லாவண்ய கொள்கையை தூர எறிந்துவிட்டு, சிலுப்பும் அதே ஏ.சி. அந்த அரசியல்வாதி, அவனது மகன் உள்ளிட்ட எதிரிகளை எப்படி பஞ்சு பஞ்சாக கிழித்து ஓடவிட்டார் என்பதுதான் முழு படமும்.

நடுவில் இவரை காதலிக்கும் சன் டி.வி (?) ரிப்போர்ட்டர். அவருடைய அண் லிமிடெட் தொப்புள் அழகு, கம்மி பீஸ் டிரஸ்சில் சில பல கலகல ஆட்டங்கள் என்று, தியேட்டருக்குள் தீ மிதி திருவிழாவே நடத்திவிட்டார் டைரக்டர் சாய் ரமணி! இன்னும் அம்பது வருஷத்துக்கு தாங்கும் வாத்யாரே…

பூட்ஸ் காலை நீட்டும்போதே பூகம்பம் காற்றோடுதான் என்ட்ரி கொடுக்கிறார் லாரன்ஸ். அப்புறம் என்ன…அப்புறம் அப்புறம் என்ன… என்று காத்திருக்க வைக்கிறது அவரது மூவ்! (ஒரு எஞ்ஜாய்மென்ட்டுக்குதான்) அவ்ளோ பெரிய ஆக்ஷன் பார்ட்டி, சடக்கென சென்ட்டிமென்டுக்கு அடங்கி கண்ணீர் சிந்தி கவலைப்படும்போது, ‘கரெக்டா வந்து கோக்குறாய்ங்கப்பா…’ என்று நினைக்க வைக்கிறார் டைரக்டர். (யார்ங்க அந்த ஊனமுற்ற பெண்? செம க்யூட். நடிப்பும் பலே) கமிஷனர், மினிஸ்டர், சி.எம்., பி.எம்., ஏன்… ட்ரம்ப் வந்தால் கூட, சொம்பை அவர் தலையில் கவிழ்த்துவிடுவாரோ என்று கிலி ஏற்படுத்தியிருக்கிறார் லாரன்ஸ். பைட் ஏரியாவுல அப்பளத்தை நொறுக்குகிறார் என்றால், டான்ஸ் ஏரியாவில் அவரை மிஞ்ச ஆளே இல்லை என்பதையும் கல்வெட்டில் அடித்து நிரூபித்திருக்கிறார்.

நிக்கி கல்ராணியின் டி.வி.ரிப்போர்ட்டர் அவதாரம், மீடியா உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கும். பணிக்கு முன்னே துணி ஒண்ணும் முக்கியமில்லே.. என்று காத்தாட விட்டிருக்கிறார். கண்றாவி கண்றாவி… (டைரக்டருக்கு போலீஸ் பற்றியும் தெரியல. மீடியா பற்றியும் புரியல. பாவம்)

இந்த வயசிலும் தெறிக்க விடுவது போல ஒரு பைட் போட்டிருக்கிறார் சத்யராஜ். அவருக்கு போலீஸ் கெட்டப் புதுசு இல்லை. இதிலும் வழக்கம் போல பஞ்ச் வைத்திருக்கிறார்.

சதீஷெல்லாம் காமெடி பண்ணுவார் என்று இன்னும் கோடம்பாக்கம் நம்பி வருவது துரதிருஷ்டம். கோவை சரளாவுக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். அவர் எப்போதும் லாரன்ஸ் பட ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே?

சுனாமி ஸ்டாராக வரும் மொட்டை ராஜேந்திரன், சில நிமிஷங்களே வந்தாலும் ரிலாக்ஸ் பண்ணுகிறார். ராய் லட்சுமி-லாரன்ஸ் ஆடியிருக்கும் ஒரு பாடலை கண்ணை மூடிக் கொண்டு (!) கேட்டால் சுகம்!

சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவால், படத்தின் மூட் இன்னும் ஜாஸ்தியாகியிருக்கிறது.

பேரானந்த பெரும் சுகத்தை வழங்கி முதல் படத்திலேயே டாப் கிளாஸ் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார் அம்பரீஷ் கணேஷ். ஒவ்வொரு பாடலும், அதற்கு நடனம் அமைக்கப்பட்ட விதமும் இசை ரசிகர்களுக்கு பெரும் விருந்து! அதுவும் எம்ஜிஆரின் ரீமிக்ஸ் பாடலான ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ செம துள்ளல்!

இப்படத்தின் வசனத்தில் பங்கெடுத்திருக்கிறார் பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். அந்த டச் எங்கேயும் இல்லை என்பது சற்றே நெருடல்! (பாவம் அவரென்ன பண்ணுவார்? கப்பலே குப்புற கெடக்குதாம், நங்கூரத்துக்கு எதுக்குடா நகப் பாலீஷ்னு நினைச்சிருக்கலாம்)

மொட்ட சிவா… ‘சிவ சிவா!’

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. praveen says

    Suvaiyaga cinema news tharum neengal inthamathiri tharam ketta padathirkellam vimarisanam ezhuthalama?

Leave A Reply

Your email address will not be published.