முப்பரிமாணம் /விமர்சனம்

0

பாலாவின் அசிஸ்டென்ட் இயக்கிய படம்! அழுக்கு சட்டையும் அவிஞ்சுப்போன மாங்கொட்டையுமா கேரக்டர்ஸ் இருக்கும்னு நினைச்சு உள்ளே போனா, எல்லாருமே ‘பளிச் பளிச்’! (தப்பிச்சோம் பகவானே) ஒரு லவ் ஸ்டோரி எப்படி படக்கென திசை மாறி கொலை ஸ்டோரியாக மாறுகிறது என்பதே இப்படத்தின் ஆரம்பமும் முடிவும்! திரைக்கதை திலகத்தின் பிள்ளையான சாந்தனுவுக்கு இப்படம் திலகம் வைத்திருக்கிறதா?

ம்க்கூம்… பாதி திலகம். பாதி கலகம்!

சின்ன வயதில் பார்த்த சினேகிதியை மீண்டும் பார்க்கிற போது அவளுக்கும் இவனுக்கும் காதலில் மூழ்கி முத்தெடுக்கிற வயசு. ரெண்டே சந்திப்பில் வந்துவிடுகிறது லவ். அப்படியே அது நகர்ந்து கொண்டிருக்கும்போது திடீர் லாக்! நடுவில் குறுக்கே வரும் சினிமா ஹீரோ மீது காதலிக்கு கண். லவ் இந்த பைக்கிலிருந்து அந்த காருக்கு தாவி விடுகிறது. அப்புறம் என்ன? மூர்க்கமாகிற காதலன், முன்னாள் காதலிக்கு முடிவு தேட கிளம்புவதுதான் க்ளைமாக்ஸ்.

கல்யாண மேடையில் இருந்து சிருஷ்டி டாங்கேவை கடத்திக் கொண்டு காரில் தப்பிக்கும் அந்த முதல் காட்சி, நம்மை இப்படி யோசிக்க வைக்கிறது. ஆஹா… சாந்தனுவை கரை சேர்க்க ஒரு படகு கிடைச்சுருச்சுப்பா. அதற்கப்புறம் கதை நகர நகர… படகுல ஓட்டையா? அல்லது ஓட்டையில படகா? என்கிற படு பயங்கரமான டவுட் வருகிறது. துளிகூட வித்தியாசமில்லாத அரதபழசான கதையோட்டம். இடைவேளைக்கு பின்னாடி பார்த்துக்கலாம் என்று நினைத்திருக்கிறார் டைரக்டர் அதிரூபன். அந்த அலட்சியம்தான் இந்த படத்தின் குழி.

சாந்தனுவை சற்றே பட்டிப் பார்த்து டிங்கரிங் செய்தால் முட்டி மோதி முன்னுக்கு கொண்டு வரலாம். எல்லா தகுதிகளும் இருந்தும், மனிதர் தேமே என்று முழிக்கிறார். நடக்கிறார். சிரிக்கிறார். ஆகாயம் பார்த்து இரண்டு கைகளையும் விரிக்கிறார். காதல் வந்திருச்சாம்…! நல்லவேளையாக ஆக்ஷன் காட்சிகளில் வேறொரு கெட்டப்பும், கோப முகமும் காப்பாற்றியிருக்கிறது.

சிருஷ்டி கன்னத்தில் குழிவிழுவது அழகு என்று யாரோ சொல்லி அதை தன் மண்டைக்குள் பிக்சட் டெபாசிட் செய்துவிட்டார் அவர். எல்லாவற்றுக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். நல்லவேளை… சாந்தனு இவரை கடத்திய பின்பு, எல்லாம் மாறுகிறது. அதற்கப்புறம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் சிருஷ்டி, பாவாடை தாவணியில் அழகாக இருப்பதால், வில்லேஜ் கதைகளில் கொஞ்சம் கவனம் வைப்பது நல்லது.

நடுவில் சினிமா ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் ஸ்கந்தா என்ற அந்த இளைஞரை நம்பி தனியாக ஒரு படமே எடுக்கலாம். நம்பிக்கையான வரவு.

பிறந்ததிலிருந்தே நான் சிரித்ததில்லை என்பது போலவே ஒரு வில்லன். சொந்த தங்கையாக இருந்தாலும் சாதி மாறி காதலித்தால் பொணம்தான் என்கிற யூஷூவல் வீச்சருவா ட்ரீட்மென்ட்! (பயங்கரமா புளிக்குது டைரக்டரே)

பாடல்கள் சுமார். பின்னணி இசை அதைவிட சுமார். இசை ஜி.வி.பிரகாஷாம். புதிய இசையமைப்பாளர் யாரையாவது அறிமுகம் செய்திருந்தால், அந்த புண்ணியமாவது கிட்டியிருக்கும்!

ராசாமதியின் ஒளிப்பதிவு மட்டும் அழகோ அழகு! ஏற்கனவே மூக்கு நீண்ட சாந்தனு முகத்தை முன்னால் நீட்டிக் கொண்டே நடப்பதை ஒரு ஒளிப்பதிவாளராக அட்வைஸ் பண்ணி தவிர்த்திருக்கலாம்!

முப்பரி(காச)மாணம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.