ஆளுக்கொரு சுண்டல் பொட்டலம்! அள்ளிக் கொடுத்த மிஷ்கின்!

0

உலகப் பொய்யர்கள் எல்லாரும் ஒன்று கூடுகிற இடம் என்றால் அது சினிமா மேடையாகதான் இருக்கும். அரசியல் மேடைகளிலாவது அவ்வப்போது உண்மை வரும். இங்கு பெரும்பாலும் பொய்யின்றி வேறில்லை பராபரமே! இந்த ‘நிஜத்தை’ நிரூபித்தார் மிஷ்கின். இடம்- படைவீரன் பாடல் வெளியீட்டு விழா.

இந்தப்படத்தின் ஆர்ட் டைரக்டர் ஒளிவீரனிலிருந்து ஆரம்பித்தது அவரது சுண்டல் விநியோகம். “ஆக்சுவலா அவன் எனக்கு நல்ல பிரண்ட். நானும் அவனும் ஒண்ணா ஒர்க் பண்ற வாய்ப்பு வந்து கடைசி நேரத்தில் நழுவி போயிருச்சு. என்னை பார்க்கும் போது நீண்ட கெட்ட வார்த்தையுடன்தான் பேச ஆரம்பித்தான். டேய்… நீயும் நானும் கண்டிப்பா சேர்ந்து படம் பண்றம்டா…” என்று கூறிவிட்டு பேச்சை தொடங்கினார்.

அடுத்து படத்தின் ஹீரோ விஜய் யேசுதாஸ். “ஆக்சுவலி அவர் எங்கிட்ட பலமுறை பேசியிருக்கார். அவரை வச்சு படம் பண்ணணும்னு நானும் நினைச்சுட்டு இருக்கேன். சீக்கிரம் அது நடக்கும்” என்று அடுத்த சுண்டலை பார்சல் அடித்தார்.

அதற்கப்புறம் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. “நான் இளையராஜாவை அப்பான்னுதான் சொல்வேன். நான் அவரை பார்க்கப் போகும்போதெல்லாம் ஒரு கதவுபோலவே நடுவில் இருப்பார் கார்த்திக் ராஜா. அவர்தான் திறந்து உள்ளே அனுப்புவார். வெளியேறும்போதும் அவர்தான் கதவை திறந்துவிடுவார். பலநேரம் எனக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் வரும். “என்னங்க இப்படி பண்றீங்க?” என்று எங்கிட்ட கேட்பார். இந்தப்படத்தில் அவரது மியூசிக் நோட்ஸ் அவரது அனுபவத்தை காட்டுச்சு. அவரது முதல் படம் உல்லாசம் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டையே உல்லாசமா வச்சுருந்திச்சு. அவருக்கு ஒரு சரியான இடம் அமையல. கண்டிப்பா நாம் வெகு சீக்கிரம் இணையுறோம்…” என்று மூன்றாவது சுண்டல் பொட்டலத்தையும் கார்த்திக் ராஜாவுக்கு விநியோகித்தார் மிஷ்கின்.

நல்லவேளை… படத்தின் இயக்குனர் தனா தப்பித்தார். அவரை பற்றி மிக நல்ல மாதிரியான சர்டிபிகேட் கொடுத்தார் மிஷ்கின். “தனா ஒரு நல்ல எழுத்தாளர். புத்தகங்கள் வாசிப்பவர். அவரை மாதிரியானவர்கள் சினிமாவுக்குள் வருவது ஆரோக்கியமான விஷயம்” என்று வாழ்த்தினார்.

இப்படி மேடைகளில் மைக் பிடிக்கும் போதெல்லாம், “உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன்” என்று கூறிவிட்டு அந்த மேடையை விட்டு இறங்கிய விநாடியே அதை மறந்துவிட்டு கிளம்பும் சினிமாக்காரர்களில் முதலிடம் தயாரிப்பாளர் தாணுவுக்கு என்றால், சத்தியமாக இரண்டாமிடம் நம்ம மிஷ்கினுக்குதான் போல…!

Leave A Reply

Your email address will not be published.