அஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு!

-மெல்ல கொல்லும் மிஷ்கின்!

0

தயாரிப்பாளர் பில் என்றால், தங்க பஸ்பத்தில் பல் விளக்கும் இயக்குனர்கள் வரிசையில் மிஷ்கினுக்கு கோல்டு மெடலே தரலாம். ‘துப்பறிவாளன் 2 கதையை எழுதுவதற்காக லண்டனுக்குதான் போவேன்’ என்றாராம். அந்த செலவு மட்டும் சுமார் 35 லட்சம். அதற்கப்புறம் படப்பிடிப்பில் டைரக்டரின் அலட்சியத்தால் ஆன செலவென்ன, சிக்கலென்ன என்பது பற்றி பெரிய விளக்கம் அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் விஷால். இப்படி படியளக்கும் பெருமாள்களை, நொடிக்கு நொடி நோகடிக்கும் இவரைப்போன்ற ஆசாமிகளுக்கு என்ன கிடைக்கும்?

அஞ்சு கிலோ அவமானமும், ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பும்தான். அதை நேற்றிலிருந்தே அள்ளிக் கட்டிக் கொண்டிருக்கிறார் அருமைமிகு படைப்பாளி மிஷ்கின். ஏற்கனவே அட்லீயை வைத்து ஆவி நோக அவஸ்தைப்பட்ட ஏ.ஜி.எஸ் நிறுவனம், இந்த முறை மிஷ்கினிடம் மண்டையை கொடுக்கவிருந்தது. சிம்பு நடிக்கிற படத்தை ஏஜிஎஸ் சிடம்தான் கோத்து விடுவதாக இருந்தார் மிஷ். நேற்று விஷால் வெளியிட்ட அறிக்கை அந்த நிறுவனத்தின் காதுக்குள் நுழைந்து மூளைக்குள் பதிந்திருக்கும். ‘யாரும் அவருக்கு படம் கொடுப்பதற்கு முன் யோசிங்க’ என்று தனது அறிக்கையில் சுற்றி வளைத்து கூறியிருந்தார் விஷால்.

இது ஒருபுறமிருக்க, தயாரிப்பாளர் சங்கத்திலும் இயக்குனர் சங்கத்திலும் விஷால் மீது புகார் கொடுத்திருக்கும் மிஷ்கினின் செயலை துளியளவும் ரசிக்கவில்லை மேற்படி சங்கங்கள். ‘சாமியாரு இருமுனா சம்போன்னுதான் ஒலிக்கும்’ என்பதை அறியாதவர்களா அவர்கள்?

வளையாத மிஷ்கினை ஒடிச்சாலும் தப்பில்லை என்கிற முடிவுக்கு வந்த விஷாலுக்கு ஒரு சல்யூட்!

Leave A Reply

Your email address will not be published.