‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ – பஞ்ச் டயலாக் வந்த கதை -கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் பகுதி 04

rajini

நம்பிக்கை, நாணயம், கைராசி… இம்மூன்று வார்த்தைகளுக்கும் பிரசித்தமான ஏரியா தி.நகர் ரங்கநாதன் தெருதான். இதை தாரக மந்திரமாக கொண்டு முன்னேறி வரும் இவர்களுக்கு காலம் எல்லா சுகங்களையும் வழங்கி வருகிறது. ஒரு உதவி இயக்குனருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் மிக முக்கியமானதும் கூட இந்த மந்திரம்தான். இதில் கைராசியை விடுங்கள். மற்றவை இரண்டும் உயிர் போல பாதுகாக்கப்பட்டாலொழிய எந்த படத்தையும் நிம்மதியாக வெளிக் கொண்டு வர முடியாது. கடந்த சில தினங்களாக மீடியாவை உருட்டிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை படித்தால் நான் சொல்ல வந்ததன் அர்த்தம் விளங்கும்.

ஒரு படம் பிள்ளையார் சுழி போடப்படுவதிலிருந்து, திரைக்கு வருவது வரைக்கும் அந்த களத்தில் நடக்கும் அத்தனை கத்தி சண்டைகளையும், கலகலப்பு தோரணங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் உதவி இயக்குனர்தான். கதை என்ன? அதை ஹீரோ எந்தளவுக்கு நேசித்தார்? நடுவில் புகுந்து எதையெல்லாம் மாற்ற சொன்னார்? இந்த விபரங்கள் அத்தனையும் உதவி இயக்குனர்களுக்கு அத்துப்படி. அப்படி எல்லா உண்மைகளும் தெரிந்த ஒரு உதவி இயக்குனர், என்ன காரணத்தாலோ தான் பணியாற்றி வந்த படத்தின் கதையை பேஸ்புக்கில் எழுதிவிட்டார். ‘ஈசிஆர் சாலையில் த்ரிஷா கொலை’ என்று கொட்டை எழுத்தில் அதை வெளியிட்டு விட்டன மீடியாக்கள். வளர்ந்து வரும் அஜீத் படம் ஒன்றின் கதையைதான் இப்படி பேஸ்புக்கில் கசிய விட்டுவிட்டார் அந்த வருங்கால இயக்கம்.

இப்படி நம்பிக்கை துரோகம் செய்வதால் அவருக்கு கிடைத்த லாபம் என்ன என்பதை விடுங்கள். நஷ்டம் என்ன என்பது சம்பந்தப்பட்ட அந்த உதவி இயக்கத்தின் எதிர்காலத்தை போக போக கவனிப்பவர்களுக்கு புரியும். கதையை கசிய விட்ட உதவி இயக்குனர் இவர்தான் என்று இன்டஸ்டரிக்கு தெரிந்தால், அதற்கப்புறம் அவர் ஒரு இயக்குனரிடம் கூட உதவிக்கு சேர முடியாது.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சமீபத்தில் வெளிவந்த அஜீத்தின் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். படம் வெளிவருவதற்கு முன் அவரை சந்தித்தேன். ‘தலைவா… ஷுட்டிங்ல நடந்த இன்ட்ரஸ்ட் தகவல் ஏதாவது இருந்தா சொல்லுங்க’ என்றேன். அவர் என்ன செய்தார் தெரியுமா? ‘தலைவா… தவளை தண்ணிக்கு இழுக்கும். பாம்பு கரைக்கு இழுக்கும். அவரவர் வேலை அவரவர்க்கு முக்கியம். சொல்றதுக்கு நிறைய இருக்கு. படம் வெளிவந்த பிறகு எதுவெல்லாம் சொல்வதற்கு தகுதியா இருக்கோ, எதுவெல்லாம் என் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாம இருக்குமோ, அதை மட்டும் சொல்றேன். அதுவும் உங்க நட்புக்காக’ என்றார். இதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு. இந்த இடத்தில் கவுதம்மேனனை கவலைப்பட வைத்த அந்த உதவி இயக்குனரையும் நினைத்துப் பார்க்கிறேன். உருப்படுவாரா அவர்?

சரி… கடந்த வாரத்தில் நான் முடித்த விஷயத்திலிருந்தே இந்த கட்டுரையை தொடர்கிறேன். ரஜினியையே வியக்க வைத்ததாக ஒரு உதவி இயக்குனர் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா? அவர்… திருப்பதிசாமி. விஜயகாந்த் ஹீரோவாக நடித்த ‘நரசிம்மா’ என்ற படத்தை இயக்கியவர்.

பாட்ஷா படத்தில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தில் ரஜினி பேசியிருக்கும் அந்த பஞ்ச் டயலாக் இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் உயிரோடு இருக்கும். ‘நான் ஒரு தடவ சொன்னா நுறு தடவ சொன்ன மாதிரி…’ ஆனால் அந்த பஞ்ச் டயலாக்குக்கு காரணமான திருப்பதிசாமியை காலம் கொண்டு போய்விட்டது. ஒரு சாலை விபத்தில் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார் அவர்.

ஒரு நாள் பாட்ஷா படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் திருப்பதிசாமி அசோசியேட் இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு கீழே சுமார் அரை டஜன் உதவி இயக்குனர்கள் இருந்தார்கள். அவ்வளவு பேரையும் மேய்த்துக் கொண்டு படப்பிடிப்பு வேலைகளையும் பார்க்க வேண்டுமல்லவா? பம்பரமாக ஓடிக் கொண்டிருந்தார் திருப்பதிசாமி. மதிய இடைவேளையில் ரஜினி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் உதவி இயக்குனர்களுக்கு ஓய்வேது? ரஜினியின் அறைப்பக்கமாக சென்றவர், அங்கு கண்ணில் தென்பட்ட வேறொரு பணியாளருக்கு ஏதோ உத்தரவிட்டுக் கொண்டே தன்னையறியாமல் சத்தம் போட்டு புலம்பினார்.

‘இவன் ஒருத்தன்ப்பா… எதை சொன்னாலும் சட்டுன்னு செய்ய மாட்டான்’ என்று புலம்பிக்கொண்டே அந்த நபரை அழைத்து, ‘இனிமே நான் ஒரு தடவ ஒரு விஷயத்தை சொன்னா அதை நுறு தடவ சொன்னதா நினைச்சுக்கோ. தயவுசெஞ்சு அதை முடிச்சுட்டு அடுத்த வேலைய பாருப்பா’ என்று கூறிவிட்டு அவசரமாக நகர, சட்டென்று பொறி தட்டியது சூப்பர் ஸ்டாருக்கு. அதி திறமைசாலிகளுக்கு மட்டுமே வாய்த்த வித்தை அது.

‘திருப்பதி… இங்க வாங்க’ என்றார் அவசரமாக. ஓடி வந்து அவர் முன் நின்றார் திருப்பதி. ‘அந்த ஆளுகிட்ட என்னமோ சொன்னீங்களே. அதை திரும்ப சொல்லுங்க’ – இது ரஜினி. ‘இல்ல சார்… அவன் ஒழுங்காவே வேலை செய்ய மாட்டேங்குறான். அதான் கூப்பிட்டு கண்டிச்சுட்டு இருந்தேன்’ என்றார் திருப்பதிசாமி.

ஒருவேளை சாரோட அமைதியை கெடுத்துட்டோமோ? இதுதான் அவரது அச்சம். எதற்காக ரஜினி கேட்கிறார் என்பது அவருக்கு தெரிந்திருந்தால்தானே?

அதான்… என்னவோ சொல்லி கண்டிச்சீங்களே. அதை சொல்லுங்க சொல்லுங்க… என்றார் ரஜினி தனக்கேயுரிய ஸ்பீடில். ‘சொன்ன வேலையை உடனே செய்ன்னு சொன்னேன் சார்’ என்று திருப்பதிசாமி முழிக்க, ‘இல்லய்யா… அதை கோர்வையா சொன்னியே, அப்படியே திருப்பி சொல்லு’ என்றார் ரஜினி. இப்போது புரிந்துவிட்டது திருப்பதிசாமிக்கு. ரஜினி சார் ஏதோ ஒரு காரணத்திற்காக கேட்கிறார் என்று. அந்த வார்த்தைகளை அப்படியே ரிப்பீட் அடித்தார். அதை அப்படியே மனசுக்குள் வாங்கிக் கொண்டு ‘சரி. நீ போ…‘ என்று அனுப்பிவிட்டார் ரஜினி.

அடுத்தடுத்த ஷாட்டுகளில் புரிந்துவிட்டது திருப்பதிசாமிக்கு. இவர் பேசியதை தனக்கேயுரிய அற்புதமான ஸ்டைலில், அழுத்தமான குரலசைப்பில் ரஜினி விரல் சொடுக்கி பேசினார். “நான் ஒரு தடவ சொன்னா… நுறு தடவ சொன்ன மாதிரி!” என்று. சுற்றியிருந்த கூட்டம் அளவில்லா ஆனந்தத்துடன் கைதட்டியது. படப்பிடிப்பு முடிந்து கிளம்புகிற நேரம். எல்லாரையும் வைத்துக் கொண்டு ‘திருப்பதி… இங்க வா’ என்றார் ரஜினி. ‘இந்த டயலாக் என்னோடது இல்ல. திருப்பதியோடது’ என்று கூறியபடியே தன் பையிலிருந்து கத்தையாக பணத்தை அள்ளி அவரிடம் கொடுத்தார். சங்கோஜத்தில் வாங்க மறுத்தவரிடம் வற்புறுத்தி கொடுத்துவிட்டு, ‘தேங்ஸ்’ என்றார். (அதில் 25 ஆயிரம் இருந்ததாக தனது சகாக்களிடம் அதற்கப்புறம் சொல்லி சந்தோஷப்பட்டாராம் திருப்பதிசாமி)

ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம். தமிழ்சினிமாவில் உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆயிரம் பேர்? அல்லது இன்னும் கூடுதலாக ஒரு ஆயிரம்…? அதுதான் இல்லை. இயக்குனர்கள் சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் அட்டை பெற்றவர்கள் 2,800 பேர். கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் 3,600 பேர். இதை வாசித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் சில நு£றுகளை தாண்டலாம். இவர்களில் கால்வாசி பேருக்கு கூட நிரந்தர வேலை இருப்பதில்லை. ஆனால் தினமும் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடு கிளம்பிவரும் இளைஞர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவே முடியாது. இவர்களில் எத்தனை எத்தனை மணிரத்னங்களோ, பாலாக்களோ, யார் அறிவார்?

இப்படி வருகிறவர்கள் எறும்பு கூடு கட்டுவதை போல தமது முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். சிலரோ, கூடாவது ஒன்றாவது என்று பாதியிலேயே துவண்டு போய் ஊருக்கு திரும்பிவிடுகிறார்கள். கால நேரத்தை விரயமாக்காமல் இயக்குனர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களை அணுகுவது எப்படி?

அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை 1 – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

1 Comment
  1. Manokar says

    Super Star Rajini Vazga. Rajini pol varuma

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நல்லவேளை… இவரெல்லாம் திருக்குறளுக்கு உரை எழுதல….!

சில புன்னகைகள் மிகவும் அர்த்தமுள்ளவை. அதே நேரத்தில் இயலாமைக்கு உரியவையும் கூட! நேற்று புலவர் புலமைப்பித்தன் அவர்களின் சிரிப்பும் அப்படிதான் இருந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் போர்ப்படை தளபதிகளில்...

Close