நடிகையர் திலகம் விமர்சனம்

0

பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட பழைய நெக்லஸ் போல பளபளப்பானது மட்டுமல்ல, பாரம்பரியமானது பழைய கதைகளில் சில! அப்படியொரு சிலிர்ப்பான கதையை, சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின். நமது முந்தைய தலைமுறை நாயகிகளில் ஒருவரான சாவித்ரி, இப்படி ‘மனுஷிகளில் ஒரு மாணிக்கமா?’ என்கிற வியப்பை சுமக்காமல் ஒருவர் கூட தியேட்டரை விட்டு வெளியேற முடியாது. ரசிகர்களின் கண்ணீர் துளிகளில் ஒரு சொட்டு, அவரது ஆத்மாவின் உலகத்தில் இந்நேரம் விழுந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

ஆஸ்பிடலில் இடமில்லை என்று வராண்டாவில் வீசப்பட்டிருப்பது யாரோ ஒரு சமானிய பிரஜையல்ல, தென்னிந்திய சினிமாவையே வியக்க வைத்த சாவித்திரி என்று துவங்குகிறது கதை. அதற்கப்புறம் ஒரு பச்சை மண், எப்படி மெல்ல சினிமாவுக்குள் நுழைந்து, அதன் சிகரத்தை பிடித்தாள்? காதல், அவள் வாழ்வை என்னவெல்லாம் செய்தது? குடி என்பது பழக்கமல்ல, உயிர் குடிக்கும் பேய் என்று அவளுக்கு புரிந்தாலும் விட முடியாமல் தவித்தாளே, ஏன்? இப்படி வேகமாக ஓடும் ஆறு போல நம்மையும் சுழிக்குள் இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். வெறும் பயோபிக் ரகமல்ல இப்படம். பார்த்து பார்த்து செதுக்கிய பாதை! இளம் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு அவரது வயதுக்கு மீறிய பக்குவத்திற்காகவே ஒரு மானசீக வணக்கம்.

‘கிளிசரின் இல்ல’ என்று சொல்லும் இயக்குனரிடம், ‘அதுக்கென்ன. பரவாயில்ல. அழறேன்’ என்கிறார் சாவித்ரி. ‘இடது கண்ல மட்டும் கண்ணீர் வரணும். முடியுமா?’ என்று டைரக்டர் கேட்க, ‘அதுக்கென்ன. முடியும்’ என்கிற சாவித்ரி, ‘எத்தனை சொட்டு வரணும்?’ என்று கேட்கிறாரே… அங்கு வருகிறது ஒரிஜனல் சாவித்திரியின் நினைப்பு. அடேயப்பா… ஒரு நடிகை எப்படியெல்லாம் தன்னை சுற்றியிருப்பவர்களை வியக்க வைத்திருக்கிறார்?

கிட்டதட்ட இரண்டேமுக்கால் மணி நேரப்படம். அடுத்தடுத்த சம்பவங்களால் அசுர வேகத்தில் ஓடுகிறது. இவ்வளவு பெரிய சுமையை, தன் தோள்களில் அசால்ட்டாக தாங்கிய கீர்த்தி சுரேஷுக்கு லட்சம் பேர் கூடிய சபையில், விருதுகள் கோர்த்த மாலையை சூட்டலாம், தப்பில்லை!

கீர்த்தி சுரேஷின் இன்னொசன்ட் கண்கள் இன்னொரு பலம். ‘நாகேஸ்வரராவ் காரு வருவாரா?’ என்று நாகேஸ்வரராவிடமே கேட்கிறாரே… தியேட்டரே சிரிக்கிறது. அப்படியொரு குழந்தை, தன் இறுதிகாலத்தில் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது? அதையும் அசால்ட்டாக வெளிப்படுத்துகிறது அந்தக்கண்கள். மெல்ல மெல்ல உருமாறி, ஒரு கட்டத்தில் அந்த ஒரிஜனல் சாவித்ரியாகவே அவதாரம் எடுத்துவிடுகிறார் கீர்த்தி. மேக்கப்மேனுக்கு தனி அப்ளாஸ்.

படத்தில் வெயிட்டான கேரக்டர்கள் என்று இன்னும் சிலர் வந்தாலும், கீர்த்தியே நிறைந்திருக்கிறார் நீக்கமற!

‘அம்மாடி…’ என்று வாய் நிறைய அழைக்கும் ஜெமினிகணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான். காதல் மன்னன் சட்டை இவருக்கு சற்றே தொள தொள என்றாலும், முடிந்தவரை சமாளிக்கிறார். ஆணின் ஈகோ, தன்னை விட தன் மனைவிக்கு கிடைக்கும் மரியாதை.. இதையெல்லாம் தாங்க முடியாமல் தத்தளிக்கும் ஜெமினி, சாவித்ரியின் இறுதிகாலத்தில் அந்தர் தியானமானது மன்னிக்க முடியாத குற்றம்.

இந்தக் கதையை நேரடியாக சொல்லியிருக்கலாம். எதற்கு சமந்தா, விஜய் தேவரகொண்டாவெல்லாம்? மேற்படி போர்ஷன், கலரடித்த கத்தரிக்காய் போல நொச நொசவென இருக்கிறது. கட் கட் கட்!

நேரடி தெலுங்கு படமாக இருக்கலாம். அதற்காக சாவித்ரியின் வாழ்வில் மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்த நவராத்திரி, பாசமலர் போன்ற படங்களையெல்லாம் மறக்கலாமா?

ஒளிப்பதிவு, இசை, ஆர்ட் டைரக்ஷன் என்று தனித்தனியாக கைகுலுக்கி கொஞ்சப்பட வேண்டியவர்கள் அவர்கள்!

சாவித்ரின்னு ஒரு நடிகை என்று போகிற போக்கில் சொல்கிற அசால்ட் கருத்தையெல்லாம், மே 11 ம் தேதி, 2018 ம் வருஷத்தோடு விட்டுவிடலாம். இனி அவர் எங்கு உச்சரிக்கக்கப்பட்டாலும், ‘சாவித்ரியம்மா’தான்! இந்தப்படத்தை பொறுத்தவரை நாம் பார்த்த ஏதோ ஒரு பிலிம் அல்ல, பீலிங்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.