நேர் முகம் விமர்சனம்

0

பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்ஜுக்கு முன்னால் நின்று கொண்டு ஏடிஎம் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றால் உலகம் என்ன சொல்லும்? நேர்முகம் படம் ஓடும் தியேட்டருக்குள் நுழைந்த பின்புதான் தெரிகிறது. சாமீய்… இது ஏடிஎம் மிஷின் இல்ல. பெயின்ட் போன பிரிட்ஜ் என்பது…

ஒளிப்பதிவுக்கு போதுமான லைட்டிங் இல்ல. அதுக்கென்ன? போகட்டும்…. ஷார்ப்பான எடிட்டிங் இல்ல. அதுக்கென்ன போகட்டும்… துள்ள வைக்கும் இசையில்லை. அதுக்கென்ன? போகட்டும்… நேர்த்தியான ஸ்கிரீன் ப்ளே இல்ல. அதுக்கென்ன? போகட்டும்… அட, கதையே இல்லப்பா! அதுக்கென்ன? போகட்டும்… இப்படி டும் டும் என்று பொட்டில் அடித்து பொறிக்கடலை கிண்டுகிறார் டைரக்டர் முரளி கிருஷ்ணா. நல்லவேளை… செகன்ட் ஹாஃப் மட்டும், சினிமாவுக்குரிய இலக்கணங்களை சற்றே தொட்டு, தாக சாந்தி தருவதால், தப்பித்தோம். பிழைத்தோம்.

படத்திலிருக்கும் அந்த துளியூண்டு கதைதான் என்னவாம்? (இவ்ளோ முன்னோட்டம் கொடுத்துட்டு இது வேறயா?) மன அழுத்தம் ஜாஸ்தியாயிருக்கு. டாக்டர்ட்ட போகலாம் என்று முடிவெடுக்கும் ரபி – மீனாட்சி தம்பதி ஒரு மருத்துவரிடம் போகிறது. போனால்…? அங்கே இந்த ஜோடியை போல ஏராளமான ஜோடிகள் கட்டப்பட்டு கிடக்கிறார்கள். ஏன்? இன்னாத்துக்கு? என்று கேட்கவே முடியாதளவுக்கு அவர்களை போட்டு நையப்புடைக்கிறார்கள். அடியாட்களிடம் அடிவாங்கி தப்பிக்க நினைக்கும் ஜோடி, தப்பித்ததா என்பது மீதி. அந்த டாக்டர் ஏன் அப்படி பண்றாரு? அதுதான் இன்னொரு முக்கிய சமாச்சாரம்.

டேய்… அவ இவன காதலிக்கிறாடா… விடாத. அடி என்று டாக்டர் டென்ஷன் ஆகிறார். காதலிக்கிறவர்களை பிடிக்கவே பிடிக்காத டாக்டர். அவருக்கு துணையாக நாலைந்து கோட் சூட் போட்ட அடியாட்கள். ஊழியர்கள் என்று ஒரே ரணகளம். நடுநடுவே பேய் போன்ற மேக்கப்புடன் ஒரு பாட்டி வர… ஐயய்யோ, அவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்குமோ என்று பதறுகிறது நெஞ்சு. ஒருவழியாக இடைவேளைக்குப் பின்… மீராநந்தன் வருகிறார். அவரது மல்லிக்கைபூ சிரிப்பும், மலர் கொத்து முகமும் அதுவரை அனல் கக்கிய தியேட்டரை அமைதியாக்குகிறது.

இவருக்கும் ஹீரோ ரபிக்கும் காதல். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு டூயட்டாக பாடி முடிக்கிறார்கள். பாடல்கள் பரவாயில்லை. படத்தின் டைரக்டர் முரளி கிருஷ்ணாதான் மியூசிக் டைரக்டர் என்பது சற்றே இனிப்பு கலந்த அதிர்ச்சி. (பேசாம டைரக்டஷனை விட்டுட்டு ஆர்மோனிய பெட்டியை ஆராதிக்கலாம் இவர்) ஒரு அழுத்தமான காரணத்தோடு பிளாஷ்பேக் முடிய… அதற்கப்புறம் வருகிற ஐந்து பத்து நிமிஷங்களை கூட பொருத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அப்புறம் என்னய்யா ரசிகன் நீ என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லியடி வெளியே வந்தால், எல்லார் முகத்திலும் நிம்மதி.

ஐந்தடி உயரமும், மூன்றரை அடி அகலமும் இருக்கிற பாண்டியராஜன்தான் படத்தில் போலீஸ் அதிகாரி. அதற்கு மேலும் சொல்ல வேண்டுமா?

இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலேயும், இந்தப்படத்தில் நடித்திருக்கும் இரண்டு ஹீரோயின்களும் தமிழ்சினிமாவில் கவுரவத்திற்குரிய இடத்திலிருந்து, கவுரவமாக சம்பளம் வாங்கியவர்கள் அல்லவா என்கிற நினைவு பரிதாபமாக வந்து போகிறது.

இன்னைக்கு யார் முகத்துல விழிச்சோமோ? என்று அஞ்ச வைத்துவிட்டது இந்த நேர்முகம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.